ஒடிசா அரசின் மேனாள் மதிஉரைஞர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்கள் ‘‘சங்கச் சுரங்கம் இரண்டாம் பத்து அணிநடை எருமை’’ என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆய்வு நூலில், எருமையின் சிறப்புப்பற்றிக் கூறுகின்ற பண்டைய தமிழ் இலக்கியப் பாடல்களை நன்கு விளக்கி எழுதியுள்ளார்.
‘இந்தியன் எக்ஸ்பிரசில்’ இந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி ‘‘Don’t allow it to be cowed down’’ என்ற ஒரு கட்டுரை வெளியானது. இதனை எழுதியவர் 1984 இல் என்னுடன் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த என் நண்பர் தருண் சிறீதர். அவர் இந்தியாவின் ஒன்றிய அரசினுடைய கால்நடை வளர்ப்புத் துறை யின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர், சரத் குப்தா என்பவருடன் இணைந்து இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். யாராவது ஒருவர் ஒடுக்குகிறார் என்றால் அவருக்கு எதிராக won’t get cowed down என்று ஆங்கிலத்தில் சொல்வர். அதாவது என்னை ஒடுக்க முடியாது, என்னை நசுக்க முடியாது, என்னுடைய குரல்வளையை நெறிக்க முடியாது, என்னை அமைதிப்படுத்த முடியாது, என்னைப் பணிய வைக்க முடியாது என்பதுபோலப் பயன்படுத்துகின்ற வார்த்தைதான் இந்த ‘‘cowed down.’’ இந்த வார்த்தையை அவர் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். அவருடைய அனுபவமும், புள்ளி விவரங்களும் சார்ந்து அமைந்திருக்கிறது இக்கட்டுரை. உலகின் எருமை மாடுகளில் 97 விழுக்காடு ஆசியாவில் உள்ளதென முன்னமே கண்டோம். பெரும்பாலும் தெற்காசியாவில் உள்ளன. இந்தியாவிற்கு அடுத்து பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து முதலிய பகுதிகளில் உள்ளன. உலகில் உள்ள மொத்த எருமை மாடுகளில் 56% இந்தியாவில் காணப்படுகின்றன. 2018–2019 ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியாவின் பால் உற்பத்தியில் 48.9% (2018–2019) எருமைப்பால். மொத்தம் இருக்கக்கூடிய 187.75 மில்லியன் மெட்ரிக் டன்னில் 91.82 மில்லியன் எருமைப்பால், பசு மாட்டுப்பாலில் 51.25 மில்லியன் மெட்ரிக் டன் கலப்பு மாடுகள் அல்லது ‘‘அந்நிய அரிய வகை’’ எனப்படும் சீமைப் பசுமாடுகளின் பால். 38.57 மில்லியன் மெட்ரிக் டன் பால்தான் நாட்டு மாடுகள், அதாவது சுதேசி மாடுகளின் பங்களிப்பு என்று இக்கட்டுரை குறிப்பிடுகிறது. தருண் சிறீதர், ‘‘இருந்தாலும், அரசு நிர்வாகத்திலும் கொள்கைகளை வடிவமைப்பதிலும் ஏதோ ஒரு வகையில் எருமைகளை விளிம்புநிலைக்குத் தள்ளிவிட்டோம்’’ என்று இக்கட்டுரையில் எழுதுகிறார்.
நாம் வாங்கிக் குடிக்கும் பாக்கெட் பால் என்பது பசும்பாலும் எருமைப்பாலும் சேர்ந்த கலவைதான். பால்மாட்டுக்காரர்களுக்கு தரப்படும் பாலின்விலை என்பது பாலில் உள்ள கொழுப்புச்சத்து விகிதத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. பசு மாட்டுப் பாலின் கொழுப்பு விகிதத்தினைவிட எருமை மாட்டுப் பாலின் கொழுப்பு விகிதம் அதிகமானது. எருமை மாடு தகுதி அடிப்படையிலும், திறன் அடிப்படையிலும் சிறந்தது என தருண் சிறீதர் எழுதுகிறார்.
வஞ்சிக்கப்பட்ட எருமைகள்
பசு மாடு கொண்டிருக்கும் ‘‘உயர் தகுதி’’ என்பதற்கு மாட்டுப் பண்ணைப் பொருளாதாரம் சார்ந்த ‘மெரிட்’ காரணங்கள் எதுவும் இல்லை. பசு மாட்டிற்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நாம் வரலாற்றுப் பார்வையிலும், சமுதாயப் பார்வையிலும் பார்க்க வேண்டும். எருமை, பசு என்று இரண்டு விலங்குகளும் வரலாறு நெடுகிலும் உள்ளன. எருமை மாடு இந்தியாவிலேயே 5000 ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுவிலங்காக வளர்க்கப்பட்டு, சிந்துவெளியிலிருந்து மெசபடோமியாவிற்கு அனுப்பப்பட்டு உள்ளது. சங்க இலக்கியம் முதல் எல்லா இலக்கியங்களிலும் எருமை மாடு பற்றிய மதிப்பீடுகள் காலம் தோறும் மாறி வந்துள்ளது. கடைசியில் இப்போது நாம் எருமையை எங்கு வைத்துள்ளோம் என்பது முக்கியமானது. தருண் சிறீதர், ‘‘சமய மற்றும் பண்பாட்டு நம்பிக்கைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்’’ என்று கூறுகிறார்.
பசும்பால் சிறந்தது என்று பிரச்சாரம் செய்யும் யாரும் அதற்கான அறிவியல்சார்ந்த சான்றுகளை அளிப்பதில்லை. உடல் நலத்தில் அக்கறை காட்டும் நகரமக்களாலும் கூட எருமைப்பாலில் குறை காணமுடியாது. சுதேசி, விதேசி (உள்நாடு – வெளிநாடு) காரணங்களையும் சொல்லமுடியாது. ஏனெனில் பால் எருமைகளின் தாயகமே இந்தியாதான். இந்தியாவில் கறவைப் பசுமாடுகளில் சீமைப்பசுக்களும் கலப்புமாடுகளும் நிறைய உள்ளன. எருமை மாடுகளைக் குறைந்த செலவில் பராமரிக்கலாம். வருமானமும் அதிகம். சீமைப்பசுக்களும் கலப்புப்பசுக்களும் “அரியவகை” மாடுகள் என்பதால் தீவனமும் கிராக்கியானது.
இந்தியாவிலிருந்து 2018-2019இல் ஏற்றுமதி செய்யப்பட்ட எருமை மாட்டு இறைச்சியின் மதிப்பு ரூ. 25168.31 கோடிகள். இதற்குச் சமயம், பண்பாடு மற்றும் சமூகம்சார்ந்த எந்த தடையும் இல்லை என்பதே இவ்வளவு ஏற்றுமதி செய்வதற்குக் காரணம், அதுமட்டுமின்றி சாலையில் திரியும் அனாதை எருமை என்பது இந்தியாவில் கேள்விப்படாத ஒரு விஷயம். ஆனால் 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கேட்பாரற்றுச்சாலையில் திரியும் மாடுகள் 50 இலட்சத்திற்கும் மேல் என்று குறிப்பிடுகின்றனர். ‘‘A2’’ சவுண்டுகளையோ சில குறிப்பிட்ட நாட்டுவகை பசுமாட்டு பால் பற்றிய ‘‘மர்மமான’’ சக்தி பற்றியோ வரும் தகவல்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எல்லாப் பாலும் ஒரு பால் தான் என்று தருண் சிறீதர் குறிப்பிடுகிறார்.
அப்படிப் பார்த்தால் குதிரை, கழுதை ஆகியவற்றின் பால்தான் மனிதரின் தாய்ப்பாலுக்கும் மிக நெருக்கமானது. ஆனால் கழுதைப்பால் வியாபாரத்தில் இறங்கி யாரும் வெற்றி பெறவில்லை. பல்வேறு விலங்குகளின் பாலில் பெரிதாகப் போட்டி வைத்துத் தேர்ந்தெடுக்க எதுவும் இல்லை. எல்லாப் பாலிலும் 83% முதல் 91% வரை தண்ணீர்தான். இன்னும் சொல்லப்போனால் எருமைப்பால் எத்தனையோ வகைகளில் சிறப்பானது. குறைந்த தண்ணீர், நிறைய திடம் (more solids content) கொண்டது. பசும்பாலில் செய்யும் எல்லாப் பால்படு பொருட்களையும் பலகாரங்களையும் எருமைப்பாலில் செய்யலாம். ஆனால்,நமது பால் மற்றும் கால்நடை சார்ந்த கொள்கையில் மிகவும் சிறிய இடத்தினையே எருமை மாடு கொண்டிருக்கிறது என்று முடிக்கிறார் தருண் சிறீதர்.