நீலாங்கரை இடையே 15 கி.மீ. தூரத்திற்கு கடல் மேல் பாலம் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை,ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி பேசுகையில், மும்பை அடல் சேது பாலம் போல தனுஷ்கோடி -– இலங்கை இடையே பாலம் அமைக்கப்படுமா, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கலங்கரை விளக்கம் முதல் மாமல்லபுரம் வரை பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “இலங்கையின் உள் நாட்டுப் போர் மற்றும் சுற்றுச் சூழல் காரணங்களால் அது கனவுத் திட்டமாகவே உள்ளது. 2023இல் ரணில் விக்கிரமசிங்கே உடன் இந்திய – இலங்கை இணைப்பு பாலம் குறித்து பேசப்பட்டது. முதலமைச்சரின் அறிவுரை பெற்று ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் கடிதம் அனுப்பப்படும்.
கடல் மேல் பாலம்
மேலும், கலங்கரை விளக்கம் – நீலாங்கரை இடையே 15 கி. மீ தூரத்திற்கான கடல் மேல் பாலம் அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தாயார் செய்யும் பணி நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு சார்பாக நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை ஆணையம் மூலம் முதல் கட்டமாக சென்னை திருவான்மியூர் – மாமல்லபுரம் இடையே அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் திருவான்மியூர்- அக்கரை இடையே மேல் மட்ட ஆறுவழிச் சாலை அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை ஆணையம் மூலம் போக்குவரத்து நெரிசல் மிக்க அனைத்து இடங்களிலும் மேல்மட்ட சாலை அமைக்கப்படும் என்று பதில் அளித்தார்.