பொறியாளர் அர.சுவாமிநாதன்
பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழர் தலைவர், தகைசால் தமிழர், எங்கள் குடும்பத் தலைவர் – மாநாட்டுத் தலைவர் – ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கத்துடன் எழுதுவது.
என் பெயர் சுவாமிநாதன். வயது 65. பொறியாளர். எங்கள் குடும்பம் ஒரு பகுத்தறிவுக் கொள்கைக் குடும்பம். என்னுடைய தந்தையார் 1979-1980ஆம் ஆண்டில் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக (மானமிகு அரங்கசுவாமி அவர்கள்) ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்படி செயலாற்றியவர்.
எனக்கு நல்வாய்ப்பு கிட்டிய பொழுதெல்லாம் நம்முடைய இயக்க மாநாடுகளிலும், பகுத்தறிவாளர் கழக மாநாடுகளிலும் கலந்துகொண்டு, பல நல்ல செம்மையான கருத்துகளை உள்வாங்கி, என்னால் இயன்ற சமுதாயப் பணியினை ஆற்றியுள்ளேன்.
13ஆவது மாநாடு பற்றி…
“பெரியாரை உலக மயமாக்குவோம்.
உலகை பெரியார் மயமாக்குவோம்”
என்ற ஆசிரியர் அய்யா அவர்களின் முழக்கம் – இந்த மாநாட்டின் அடித்தளமாக விளங்கியது.
இந்த மாநாட்டின் முதல் நாள் துவக்கம் முதல் இறுதிவரை, என்னுடைய இருக்கையை விட்டு அகலாமல் (மதிய உணவு நேரம் தவிர) மிகுந்த ஆர்வத்துடனும் – எழுச்சியுடனும் கலந்து கொண்டேன்.
மாநாட்டின் முத்தாய்ப்புகள்
மாநாட்டில் நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு “தேசிய மனிதநேயப் பண்பாளர்” என்ற விருது – மானவ விகாசா வேதிகா – தெலங்கானா அமைப்பின் மூலம் வழங்கி, மகிழ்ச்சியடைந்தார்கள். விருதைப் பெற்றுக்கொண்டு, ஏற்புரை ஆற்றிய ஆசிரியர் அய்யா அவர்கள் –
“கடவுள் – ஜாதி – மதம் – மொழி நம்மை வேறுபடுத்தும். தந்தை பெரியாரின் கொள்கை ஒன்றே நம்மை ஒன்றுபடுத்தும்” என்று எடுத்துக் கூறினார்கள்.
மாநாட்டில் 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தி லிருந்தும், (மலேசியா நாட்டிலிருந்தும்) பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட்டு – கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார இயக்கம் – நூறாண்டு நிறைவு – பற்றிய கருத்தரங்கம்.
சுப.வீ. அவர்கள் தந்தை பெரியார் ஏன் காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டு வெளியேறினார் என்பதைப் பற்றியும் – காங்கிரஸ் கட்சியினிடையே ஊடுருவிய ஜாதி பேதங்கள் – தீண்டாமை கடைப்பிடித்தல் ஆகியவற்றைப் பற்றியும் விளக்கினார்.
2023ஆம் ஆண்டிலிருந்துதான் – காங்கிரஸ் இளம் தலைவர் சகோதரர் ராகுல்காந்தி அவர்களிடம் – நம் தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்துகளைக் கொண்ட புத்தகங்களைப் படிக்கச் செய்து, அதன்படி அவருக்கு இன்று ஜாதிவாரிக் கணக்கெடுப்பு, சமூகப் பிரதிநிதித்துவம், இடஒதுக்கீடு பற்றிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது பற்றி எடுத்துரைத்தார்கள்.
Scientific Temper Article 51A(h) Embrancing Scientific Temper, Humanism Sprit of Inquiry for Social Progress
என்ற தலைப்பில் கருத்தரங்கம் – மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒன்றிய அரசின் முரண்பட்ட அணுகுமுறையை தோலுரித்துக் காட்டியது.
(எ.கா) மனிதனுக்கு யானையின் (பிள்ளையார்) தும்பிக்கையை வைத்து அறுவை சிகிச்சை நிபுணர்களாக இருந்தோம் என்று மார்தட்டிக் கொள்வது, புஷ்பக விமானம் இன்னும் பல.
Man Made Bridge – between இராமேஸ்வரம் – தலைமன்னார் என்ற புளுகு மூட்டைகளை உடைத்தெறிந்து உண்மையை உணரச் செய்தது.
Superstition & Women
இந்தத் தலைப்பில் உரையாற்றிய தோழர்கள் உலகெங்கும் மூடப் பழக்க வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் மட்டும் விதிவிலக்கல்ல.
Haitiஇல் சிறு குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்ற காரணத்தினால் – அந்தக் குடும்பத்தில் யாரெல்லாம் சிகிச்சை எடுத்துக் கொண்டார்களோ அவர்களை மரணிக்கச் செய்தது.
வயநாட்டில் நிலச்சரிவு – அங்கு வசிக்கும் மக்கள் மாட்டுக் கறி சாப்பிட்டதனால்தான் – நிலச்சரிவு ஏற்பட்டது என்று தெரிவித்தது.
பெரியாரின் நூல்கள் – பிற மொழிகளில் மொழிபெயர்பு செய்து அச்சிட்டு வெளியிட்டது.
என்னை மிகவும் ஆச்சரியத்திற்கும் வியப்பிற்கும் உள்ளாக்கிய விடயம்,
பெரியாரின் கொள்கைப் புத்தகங்களை, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி, ஒரியா போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளதாகும். ஆசிரியர் அவர்கள் மொழிபெயர்த்து பதிப்பித்த அனைத்து பகுத்தறிவாளர்களையும் மாநாட்டு மேடையிலேயே சிறப்பு செய்தது போற்றுதலுக்குரியது – பாராட்டுக்குரியது.
பெரியார் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறார் என்பது புரிகின்றது. பெரியாரின் கொள்கைகளை உலக மயமாக்குவதில் ஆசிரியர் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்.
உலகத்தை பெரியார் மயமாக்குவதிலும் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். (சமீபத்தில் ஜப்பான் நாட்டில் பெரியாரின் கருத்துகளை எடுத்துக்கூறி – ஜப்பான் நாட்டிலும் தந்தை பெரியார் வகுத்த கொள்கைகளை மக்கள் மனத்தில் பதிய வைத்துள்ளார்.
இரண்டாம் நாள்
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு சா.சி.சிவசங்கர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சா.சி.சிவசங்கர் குடும்பமும் ஒரு பகுத்தறிவுக் குடும்பம் என்பதையும், அமைச்சரின் தந்தையார் சிவசுப்பிரமணியனுக்கும், நம்முடைய இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை நினைவு கூர்ந்து பேசியது உண்மையிலேயே உணர்ச்சிகரமாய் இருந்தது.
வைக்கம் செல்ல பேருந்து
வைக்கம் போராட்டம் நூறாண்டு விழா – அந்த விழாவையொட்டி தமிழ்நாடு அரசு, நம் ‘திராவிட மாடல்’ அரசு, பெரியார் அய்யா நினைவகத்தைப் புதுப்பித்து, சிறப்பானதொரு விழா எடுத்தது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து வைக்கம் சென்று – தந்தை பெரியார் அய்யா நினைவகத்தைக் கண்டு மகிழ்ச்சியடைய – நாள்தோறும் அரசுப் போக்குவரத்துத் துறை ஒரு பேருந்து இயக்க வேண்டும் என்று ஆசிரியர் அய்யா அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் – மாநாட்டு மேடையிலேயே ஆசிரியரின் கோரிக்கையை நிறைவு செய்வதாகத் தெரிவித்தார். தடம் எண், கட்டணம், புறப்படும் நேரம் முதல் அறிவித்து, அனைவரையும் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நம் கழகத் தோழர்களும், அந்த வசதியைப் பயன்படுத்தி வைக்கம் சென்று பெரியார் அய்யாவின் நினைவகத்தை – வைக்கம் போராட்ட நூறாண்டு கால நினைவுகளை மனத்தில் பதிய வைத்துக் கொள்ளலாம்.
மராத்திய மாநிலத்தில் மும்பையிலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட, மராத்திய மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தன்னுடைய உரையில் தெரிவித்த முக்கியமான கருத்து என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது.
“மராத்திய மாநில சமுதாய சீர்திருத்தவாதியான தோழர் சாவித்திரி புலேவிற்கு, ஆசிரியர் அய்யா வீரமணி போல ஒரு சீடர் இல்லையே” என்று சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் வாரிசுகள் ஏக்கம் அடைந்ததாகத் தெரிவித்தார்.
ஆம்! தமிழர் தலைவர் தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்களின் தனிச்சிறப்பு – நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களே, தனக்குப் பின் இந்த இயக்கத்தையும், கல்வி வளாகங்களையும் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல ஆசிரியர் வீரமணி அவர்கள்தான் சாலப் பொருத்தமானவர் என்று – தந்தை பெரியார் தொலைநோக்குப் பார்வையுடன் அறிவித்த காரணத்தால் நம் இயக்கம் சீரும் சிறப்புடனும், பொலிவுடனும் – மிகுந்த எழுச்சியுடனும் இயங்கிக் கொண்டுள்ளது.
பெரியார் உலகம்
மாலை 7 மணியளவில், அன்புத் தம்பி நம் இயக்கத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் “பெரியார் உலகம் -சிறுகனூர்” என்ற தலைப்பில் அவருடைய PPT SLIDES, பிரமிப்பூட்டுவதாகவும் – ஆச்சரியப்படத் தக்கதாகவும் அமைந்தது.
2028ஆம் ஆண்டு பணிகள் அனைத்தும் முடிவுற்று “பெரியார் உலகம்” அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பெரியார் உலகம் நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களின் பெருங்கனவாகும். கனவு என்பது நாம் உறக்கத்தில் காண்பதல்ல. நம்மை உறக்கம் கொள்ளச் செய்யாமல் ஒரு இலக்கை நோக்கிப் பயணம் செய்து கொண்டே இருப்பது – என்ற கூற்றின்படி – நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறு உதவியை பங்களித்து – ஆசிரியர் அவர்களின் கனவை நிறைவேற்றுவோம்!
மாநாட்டின் இரண்டு நாள்களிலும் நான் பல நிர்வாக மேலாண்மைக்கான குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன்.
தலைமைப் பண்பு – ஆசிரியரின் திட்டப்படி -அறிவுறுத்தலின்படி எல்லா நிகழ்ச்சிகளும் நடந்தேறியது. அவரின் கண் அசைவில் – அவருடைய முகம் மாற்றத்தில் அவர் என்ன – எதைப் பற்றிச் சொல்ல வருகிறார் என்று அறிந்து – அனைவரும் செயலாற்றினார்கள்.
தம்பி அன்புராஜின் அயராத உழைப்பு – அவருடைய திட்டமிடல்.
சகோதரர்கள் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வி.மோகன் ஆகியோரது இரண்டுமாத இடைவிடாப் பணியின் காரணமாக மாநாடு சீரும் சிறப்புமாக நடந்தேறியது.
நம் கழகத்தின் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் நம் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோரது involvement/Advice அதைக் கேட்டு செயல்படுத்திய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும்.
மாநாட்டு நிகழ்ச்சிகளின் இடையில், நம் பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளி மாணவர் -மாணவிகளின் கலை நிகழ்ச்சி, சிந்தனையைத் தூண்டியது. காரணம், நடனமும், நாடக நிகழ்ச்சிகளும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பறைசாற்றின.
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு
இரண்டாம் நாள் “Scientific Temper” – Walkathon – பகுத்தறிவு சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதன் அடையாளமாக காலை 7 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி பெரியார் மாளிகை வரை வந்து சேர்ந்தது.
செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற வள்ளுவனின் வாக்குப்படி – மதிய உணவும், தேநீரும் சிற்றுண்டியும் மிகவும் சுவையாக இருந்தன.
நான் என்னையே புதுப்பித்துக் கொண்டேன். மிகவும் பயனுள்ளதாக அமைந்த இரண்டு நாள்கள்.
மாநாட்டில் வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கை ஆராய்ச்சிக் கட்டுரைகளும் – பல்வேறு தலைப்புகளில் அகில இந்தியாவிலிருந்து வந்து கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் – அவர்களது பேச்சின் எழுத்து வடிவத்தையும் இணைத்து ஒரு மலரை வெளியிட வேண்டும் என்று (SOUVNIER) கேட்டார்கள். அந்தக் கோரிக்கையை நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும். நானும் என்னுடைய தாழ்மையான கோரிக்கையாக வைக்கின்றேன்.
Father of Management Studies Mr.Peter Drucber: (நிர்வாகத் துறையின் தந்தை) அவருடைய வாசகத்தைக் கொண்டு – இந்தக் கடிதத்தை முடிக்கின்றேன்.
“The Post should not dignify a man
The Man should Dignify the Post”
அவருடைய கூற்றுப்படி இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த தோழர்கள் அனைவரும் தத்தம் துறையில் திறம்படப் பணியாற்றியதன் விளைவு – மாநாடு வெற்றிகரமாக அமைந்தது.