தந்தை பெரியார் கொள்கைகள் – இயக்கக் கொள்கைகள் ஏதோ தோல்வியைக் கண்டு விட்டன. மக்கள் மத்தியில் எடுபடவில்லை – பக்தி பெருகி விட்டது என்று மேதாவிகள் போல உளறுகிறவர்கள் உண்டு.
ஊடகங்கள் பார்ப்பனர்கள் கையில் இருப்பதாலும், கூலிக்கு மாரடிக்கும் சில பேச்சாளர்கள் – விவாத மேடைகளில் பங்கேற்போரும் – சமூகவலைதளங்களும் என்னதான் புரட்டுக் கரடிகளை அவிழ்த்து விட்டாலும் அவற்றை எல்லாம் காலில் போட்டு மிதித்து மேலே எழுந்து நிற்கிறார் தந்தை பெரியார்.
இதற்கு எடுத்துக்காட்டு சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையாவது தந்தை பெரியாரின் நூல்களே – தந்தை பெரியாரைப் பற்றிய நூல்களே!
அதிலும் பெரும்பாலும் இளைஞர்கள் தந்தை பெரியார் நூல்கள் விற்பனை அரங்குகளிலேயே குவிகின்றனர் என்பது நாட்டின் நிலையைப் பிரதிபலிக்கக் கூடியதாகும்.
48ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் தந்தை பெரியார் நூல்களை வாங்க 15 முதல் 35 வயதுவரை உள்ளவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று ஆங்கில நாளேடு படத்தோடு செய்தி வெளியிட்டுள்ளது. இணைய தளத்திலும் வந்துள்ளது.
18-35 வயதுக்குட்பட்ட புத்தக ஆர்வலர்கள் ‘தந்தை பெரியார் அரங்குகளை’ நோக்கி திரண்டு வருகின்றனர் அதே நேரத்தில் பக்தி மற்றும் ஆன்மீக இலக்கியங்களை வைத்திருக்கும் கடைகளில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.
“கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்ற பெரியாரின் புகழ்பெற்ற உரையிலிருந்து மேற்கோள் காட்டினார் – தனியார் கல்லூரியில் புள்ளியியல் துறை விரிவுரையாளராக பணிபுரியும் 27 வயதான சம்யா நாராயணன்.
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஆறாவது முறையாக வந்துள்ள சம்யா திருச்சியில் உள்ள பெரியார் நூற்றாண்டு பள்ளியில் பத்து வயதில் படித்தபோது பெரியார் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளவும் போற்றவும் தொடங்கியதாகக் கூறினார்.
நாத்திகத்தின் அறிவியல் மற்றும் சமூக அம்சங்களை புரிந்துகொள்வதில் தனது ஆர்வத்தை விளக்கும் அவர், “ஜாதியை மதம் உருவாக்குகிறது அது சமூகத்தில் கடும் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கியதாக அவர் கூறினார். ‘பெண் ஏன் அடிமையானாள்’, ‘பெரியார் இன்றும் என்றும்’, ‘பெரியார் ஒரு அறிவுக் கருவூலம்’ மற்றும் ‘ஒப்பற்ற சிந்தனையாளர் பெரியார்’ போன்ற தலைப்புகள் என்னை ஆழமாக கவர்ந்தன. சமூகம் நவீன வளர்ச்சியை நோக்கிச் கொண்டிருக்கின்றது இங்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அங்கீகாரம் – மதிப்பு கிடைக்கத்துவங்கி உள்ளது. இந்த மாற்றம் வேகம் பெற்றுள்ளது, தந்தை பெரியார் இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்
கடந்த காலத்தில் மதம், பாலின பாகுபாடு, சமத்துவமின்மை – சமூகத்தை எவ்வாறு பாதித்தது, மதம் அதிலிருந்து வந்த வர்ணமுறை அதனை அடிப்படையாகக் கொண்ட ஜாதி ஆகியவற்றின் பெயரால் மக்கள் எவ்வாறு அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதை இளையதலைமுறை அறிய ஆர்வமுடன் முன்வருவதை தந்தை பெரியாரின் நூல் விற்பனை எடுத்துக்காட்டி உள்ளது. இதன் மூலம் இளைஞர்களிடம் பெரும்மாற்றம் தொடங்கியுள்ளது.
சமூகம் தற்போது மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டனர். சகிப்புத்தன்மையும் சமத்துவமும் பேசு பொருளாகி, அதனை நடைமுறைப்படுத்த விரும்புகின்றனர். இதில் தந்தை பெரியார் முக்கிய பங்கு வகிக்கிறார், இது அவரது கருத்துகளைப் படிக்கவும் பின்பற்றவும் என்னை ஊக்குவித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயிலும் 19 வயதான வி.கருணாகரன் கூறும் போது – நான் இங்கு வந்த உடனே அதிகம் நின்று ரசித்துப் படித்து வாங்கிய அரங்கு பெரியார் நூல்கள் உள்ள அரங்குதான் என்றார். மேலும் “இது என்னுடைய முதல் சென்னை புத்தகக் கண்காட்சி,” என்றார்
18-35 வயதினருக்கிடையே பெரியார் குறித்து வாசிப்பதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பெரியார் நூல்களுக்கு மட்டும் 10 அரங்குகள் உள்ளன. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் அரங்கு – கருஞ்சட்டை பதிப்பகம், நிமிர் பதிப்பகம், விடியல் பதிப்பகம் என்பவை சில எடுத்துக்காட்டுகள். மேலும் 100க்கும் மேற்பட்ட கடைகளில் பெரியார் குறித்த நூல்கள் உள்ளன.
இது எதைக் காட்டுகிறது? தந்தை பெரியார் சிந்தனைகள் வளரும் தலைமுறையினரிடமும் வேகமாகப் போய் சேர்ந்து கொண்டுள்ளது – என்பது விளங்கவில்லையா?
தந்தை பெரியார் படைப்புகளை 21 மொழிகளில் திராவிட மாடல் அரசான திமுக அரசு கொண்டு வருகிறது.
ஆம், பெரியார் உலகமயமாகிறார் – உலகம் பெரியார் மயம் ஆகிறது. இது உறுதி! உறுதி!!