செந்துறை மதியழகன்
2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமான , மகா கும்பமேளா, அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறுகிறது. ஜனவரி 13 துவங்கும் மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரையில் 45 நாட்கள் நீடிக்குமாம். மகா கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுவதற்கு சொல்லப்படும் காரணம் என்ன என்றால், பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த நிகழ்வுதான் மகா கும்பமேளா கொண்டாட காரணமாம்.
எங்கே பாற்கடல்
நண்பர் ஒருவர் பாற்கடலை உலக வரைபடத்தில் தேடிப் பார்த்துக் காணாமல் வரைபடத்தை வெளியிட்ட கம்பெனியை திட்டித் தீத்தார். நீங்கள் யாரும் தேடிக்கொண்டு இருக்காதீர்கள்.
இந்த கும்பமேளா எப்போது நடைபெற வேண்டும், எங்கு நடைபெற வேண்டும் என்பவையெல்லாம் கோள்களின் இயக்கங்களை வைத்து குறிக்கப்படும் ஜோதிடத்தால் முன்னறிவிக்கப்பட்டு, முக்கியமான சமய நிகழ்வுகளுடன் நடத்தப்படுகிறது என்கின்றனர்.
புரட்சிக் கவிஞர் எழுதினார். ‘‘மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம். ஓடுவதென்றோ? உயர்வது என்றோ ?”என்றார் இவர்கள் மூடப்பழக்கத்தை ஓடவும் விட மாட்டார்கள் – நம்மை உறங்கவும் விட மாட்டார்கள் போல – இந்த கும்பமேளாவில் ஒரு நாளைக்கு 20 லட்சம் பக்தர்கள் வீதம் மொத்தமாக 10 கோடிக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறார்களாம். முதல் நாளிலும் கடைசி இரண்டு நாளிலும் இரண்டு முதல் நான்கு கோடி பக்தர்கள் நீராட வருவார்கள் என சொல்கின்றனர். “நவாமி கங்கே” திட்டத்தின் மூலமாக பிராயாக்ராஜ் நகரில் சுகாதாரத்திற்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாளிதழ்கள் தாம்தூம் என்று எழுதுகின்றன. இவர்கள் என்ன வளைத்து, வளைத்து எழுதினாலும், கும்பமேளாவில் எத்தனை லட்சம்பேர் கலந்துகொண்டு நீராடினாலும். இந்த கொண்டாட்டத்திற்கு இவர்கள் சொல்லும் காரணம் அறிவுக்கு பொருத்தமானதா?
கும்பமேளாவைப் பற்றி ஆளுக்கொரு கதையை அளந்து விடுகிறார்கள். அது சரி உண்மைக்கு ஒரு கால், பொய்க்கு கால்கள் அதிகம்தான்! அவர்கள் அவிழ்த்துவிடும் கும்பமேளா கட்டுக்கதைகளில் ஒன்று.
அமிர்தம்?
“தேவர்கள், அசுரர்களுடன் பல யுத்தங்களில் போரிட்டு துர்வாச ரிஷியின் சாபத்தினால் சக்தியற்ற நிலையில் இருந்தனர். தங்கள் சக்தியை மீண்டும் பெறுவதற்கும். சாகாவரம் பெறவும் அமிர்தம் தேவைப்பட்டது. இதற்காக மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டனர். பாற்கடலை கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என மகாவிஷ்ணு அறிவுறுத்தினாராம். தேவர்கள் மட்டும் அமிர்தத்தைக் கடைந்துவிட முடியாது என்பதால். அசுரர்களையும் இணைத்துக் கொண்டு பாற்கடலை கடைவதற்கு தயாராகினர். விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து கடலின் அடியில் அமர்ந்து கொண்டு, மந்தார மலையை மத்தாகக் கொண்டும், வாசுகி எனும் நாகத்தை கயிறாகக் கொண்டும் பாற்கடலைக் கடைந்தனர். முதலில் ஆலகால விஷம் வெளியேறியதாம். இவை உலகத்தையே அழிக்கக்கூடும் என்பதால், சிவபெருமான் இதனை அருந்தி தனது கழுத்தினில் வைத்துக்கொண்டார்.
இதனாலே சிவபெருமானை “நீலகண்டன்” என்று அழைக்கிறார்களாம். பாற்கடலை கடைய தொடர்ந்தபோது, மேலும் பாரிஜாத மரம், காமதேனு பசு போன்றவை வெளியேறியது. இறுதியாக தன்வந்திரியின் திருக்கரங்களிலிருந்து அமிர்த கும்பம் வெளிவந்தது.
இந்நிலையில் அமிர்தம் கிடைத்த பின்பு, கடவுள்கள் தங்களுக்குள் அதை பகிர்ந்து தரவில்லை. என்பதை அறிந்த அசுரர்கள், 12 நாட்களாக அமிர்தம் வேண்டி அவா்களைத் துரத்துகின்றனா்.
ஏமாற்றிய கதை
அதாவது முதலில் தேவர்களும், அசுரர்களும் ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். அதனால் ஏன் சக்தி குறைய வேண்டும்? பிறகு தேவர்களும் அசுரர்களுமே சேர்த்துக் கொண்டு ஏன் இல்லாத பாற்கடலை கடைய வேண்டும். அதற்கு அந்த பருத்தி மூட்டை குடவுனிலேயே இருந்திருக்கலாமே என்கிறீர்களா?
அசுரர்களை ஏமாற்றிய தேவர்கள், அதாவது கடவுள்கள், அதவது பார்ப் பனர்கள் எல்லாம் ஒன்றுதானே, இன்றைய தொலைக்காட்சி விவாதங் களில் கல்வியாளர், சமூக ஆர்வலர், பத்திரிகையாளர் என்று தங்களை தனித் தனியாக அடையாளப் படுத்திக்கொண்டு “சொல்றச்சே” “போறச்சே” என்று கூச்சலிடும் பார்ப்பனர்கள் போலவே, உழைக்கும் வர்க்கமான அசுரர்களை ஏமாற்றிய கதைதான் இது)
அமிர்தம் அசுரர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்து அமு தத்தை எடுத்துச் சென்றார். அப்பொழுது அந்த அமுத கலசத்தில் இருந்து, நான்கு இடத்தில் நான்கு துளிகள் நதிகளில் விழுந்தன. இதனால் இந்நதிகள் புனிதத் தன்மை வாய்ந்ததாக மக்களால் நம்பப்படுகிறது.
அமிர்தம் சிந்திய இடங்களில் உள்ள புண்ணிய நதிகள்.
1 ) கங்கை, யமுனா, சரஸ்வதி திரிவேணி சங்க, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ்
2) கங்கை நதி – அரித்வார்
3) சிப்ரா நதி – உஜ்ஜைன்
4) கோதாவரி நதி – நாசிக்
இதில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா ஒவ்வொரு இடத்திலும் நடக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா பிரேக்யராஜ் திரிவேணி சங்கமத்தில் முக்கூடலில் நடத்துகிறார்களாம்.
திரிவேணி சங்கமம் என்பது கங்கை – யமுனை ஆறுகளும் கண்ணுக்குத் தெரியாத சரசுவதி ஆறும் கூடும் இடமாம். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) நடைபெறுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண) கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது பெரியதாம். பன்னிரண்டாவது முழு (பூர்ண) கும்பமேளா அதாவது 144 ( 12 X 12 ) ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா என்கின்றனர். (ஒரே மாவைக் கொண்டு சாதா தோசை, ஸ்பெஷல் தோசை, குடும்ப தோசை (Family Roast) என்பதைப் போல்தான்)
தேவர்களின் 1 நாள், மனிதர்களுக்கு 1 ஆண்டாம்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தத்தை பெறுவதற்கு 12 நாட்கள் ஆனது. தேவர்களுக்கு ஒரு நாள் என்பது மனிதர்களுக்கு ஒரு ஆண்டு ஆகும். எனவே 12 நாட்கள் என்பது மனிதர்களின் கணக்குப்படி 12 ஆண்டுகள். இந்த அடிப்படையில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுகிறதாம்.
இது எப்படி, பாகுபலி திரைப்படம் அளவுக்கு சுவாரசியமாக கதை விரிகிறது அல்லவா?
இவற்றை எல்லாம் மனதில் கொண்டுதான் நம் திருவள்ளுவர் இப்படி எழுதிவைத்தார் போலும்.
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்ட வாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். என்று.
புனிதக் குளியலைப் பற்றி என்னென்ன கதையை அளக்கிறார்கள் பாருங்கள்.
மகா கும்பமேளாவின் முக்கிய அம்சமாகச் சொல்வது புனித நீராடுவதாகும். ஹிந்துக்கள் முழு நிலவு அன்று புனித நீரில் நீராடினால் அவா்களுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு, பிறப்பு மற்றும் இறப்பு என்ற வாழ்வின் கட்டிலிருந்து விடுதலை கிடைக்கிறதாம்.
கங்கை நீர் அவ்வளவு சுத்தமானதா?
“கங்கைக் கரையில் மணிகர்னிகா காட், அரிச்சந்திரா காட் போன்ற இடங்களில் பிணங்களை எரித்து அந்த சாம்பலை அப்படியே கங்கையில் விடுகிறார்கள் என்றும், மேலும் சன்னியாசிகள் அகோரிகள் போன்ற சில குறிப்பிட்டவர்களின் உடலை எரிக்காமல் அப்படியே கங்கையில் விட்டுவிடுவார்கள் என்றும். ஆலைகளில் இருந்து வரக்கூடிய கழிவுகளையும் சுத்திகரிக்காமல் அப்படியே கங்கை நீரில் கலக்க விடுகின்றனர் – இதுபோன்ற காரணங்கள் தான் கங்கையின் இப்போதைய அசுத்த நிலைக்கு காரணம்.
ரசாயனக் கலப்பு
இந்த கங்கை நீரில் உள்ள முதலைகள் நதியில் விடப்படும் பிணங்களையும் மற்ற அசுத்தங்களையும் உண்டு வாழ்ந்தன. இப்போது ஆலைகளின் ரசாயனம் கலந்த நீர் கங்கையில் கலந்ததால் தற்போது இந்த முதலை இனம் அழிந்துவிட்டது.
அப்படியானால் இந்த நதிகளை பாதுகாக்க முடியாத கடவுள், அந்த கடவுளுக்கு வழிபாடு இதெல்லாம் எதற்கு? என்றெல்லாம் கேட்கக்கூடாது.
இதிலிருந்து இந்த திருவேணி சங்கம புனித நீராடல் பற்றி புரிகிறது அல்லவா?
கரையிலிருந்து படகில் பக்தர்களை அழைத்துச் செல்கின்றார்கள். கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து பக்தர்களை இறங்கி புனித நீராடும்படி கூறுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர் குறைவாக சில இடங்களில் உள்ளது. சில படகுக்காரர்கள் படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை நதிகள் சங்கமிக்கும் இடம் எனப்படும் இடத்தில் இறங்கச்சொல்லி புனித நீராட வைக்கிறார்கள். அவரவர் விருப்பத்திற்கேற்ப குளியலில் ஈடுபடுகிறார்கள். படகுகளில் பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக ஏறிச்சென்று சங்கமிக்கும் இடத்திற்குச் சென்று வருகின்றனர். படகுகளில் பக்தர்கள் ஏறிச் செல்லும் போதும் பின்னர் நீராடிவிட்டுத் திரும்பி வரும் போதும் காணும் காட்சிகள் மனதிற்கு ரம்மியமாக உள்ளது என்கின்றனர்.
இங்கு முற்றும் துறந்த அகோரிகள் தங்களது பாவத்தை போக்குவதற்கு ‘ஹர ஹர மஹாதேவா’ என்ற முழக்கத்துடன் நீராடுவதை காணலாம்.
சிந்தித்துப் பாருங்கள்
அறிவுலக ஆசான் தந்தைப் பெரியார் அவர்கள் தான் கேட்டார்கள்.
“மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாவகாரியங்களைச் செய்யத் தவறுவானா? தயங்குவானா? என்று யோசித்துப் பாருங்கள்.
மனிதனுக்கு வேண்டிய அவன் ஆசைப்படும் படியான காரியங்கள் எல்லாம் இந்த மாதிரியான சிறு காரியங்களால் கைகூடிவிடுவதாய் இருந்தால் மனிதனுடைய முயற்சி, நடத்தை, ஒழுக்கம் என்பவை களுக்கெல்லாம் அவசியமும், நிபந்தனையும், வரையறையும் எதற்காக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்” -தந்தை பெரியார் (நூல்- மகாமகம். பக்கம் 7)
புனித நீராடும் போது ஏற்படும் விபத்தில் மாண்டு போவோரும். காணாமல் போவோரும்தான் மிக அதிகம்.
கூட்ட நெரிசல்
1954இல் நடைபெற்ற கும்பமேளாவில் கட்டுக் கடங்காத பக்தர்களின் நெரிசலில் நூற்றுக்கணக்கான மக்கள் நசுங்கி இறந்தனர்.
2013 பிப்ரவரி 10இல் நடைபெற்ற மகாகும்பமேளாவில் அலகாபாத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 36 பக்தர்கள் பலியாயினர்.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மகாமகத்தை ‘தென்னகத்தின் கும்பமேளா’ என்று சொல்வார்கள். நாடு முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி மகாமககுளத்தில் புனித நீராடி பார்க்கிறார்கள்.
ஜெயலலிதா முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது 1992-ஆம் ஆண்டு, பிப்ரவரி 18இல், ஒரு மகாமகம் நடந்தது. அவ்வாண்டு பக்தர்களின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியது என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். மகாமகத்தன்று முக்கியமான கோவில் தேர்களில் இறைவன் வீதி உலா வந்து மக்களை ஆசீர்வதிக்கிறாராம். சாமி நீராடும் போதே பக்தர்களும் நீராட அனுமதிக்கப்படுகிறார்களாம். இதை தீர்த்தவாரி என்று சொல்கிறார்கள். இவ்வாறு செய்வது பல ஜென்ம பாவங்களைப் போக்கும் என்பது அய்தீகம் என்கின்றனர். அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அன்று நடைபெற்ற மகாமக நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன், மகாமகக் குளத்தில் நீராடினார், அப்போது ஏற்பட்ட நெரிசலில் மகாமகக் குளக்கரையில் அமைந்திருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்தார்கள். கடவுள் காப்பாற்றியதா? ஜெயலலிதாவின் அன்றைய ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தியது அந்த சம்பவம்.
அறிவுக்கு வேலை தாருங்கள்
“நமக்கு அறிவு இருக்கிறது. இதைச் செய்யலாமா? கூடாதா? இன்னது செய்தால் இன்ன பலன் ஏற்படும், இதைச் செய்தால் இன்னென்ன வகையான நஷ்டம் ஏற்படும் என்பது போன்ற காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கும் தன்மை மனிதனிடத்திலே இருக்கிறது. அந்தப்படி இருக்கும்போது நம்முடைய அறிவை. ஆராய்ச்சியை, புத்தியைப் பழைய புராணக் கதைகளை பற்றி சிந்திப்பதில் செலுத்தாமல் பெரியவர்கள் செய்தது அது. ஆகவே, அதை மாற்றக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? நாம் ஒவ்வொருவரும் நமக்கு முன் காலத்தில் இருந்த சராசரி மக்களை விட எவ்வளவோ அறிவாளிகள்” பகுத்தறிவு ஏன்? எதற்கு ?என்ற நூலில் தந்தை பெரியார் அவர்கள் சொல்கிறார்கள்.
மேலும், “உலகத்தில் மாறுதல் என்பது இயற்கை: அந்த மாறுதலுக்கு ஏற்றவாறு தங்களைத் திருத்திக் கொள்பவர்கள் தான் முன்னேற முடியும். நல்ல பெருமையான சிறந்த வாழ்வு வாழ முடியும். இல்லையேல், மாறுதலை மதிக்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்பது போல விடாப்பிடியாக இருந்தால் நிச்சயமாக அந்த நாடும், அந்த நாட்டு இனமும் கீழ்நிலையிலேதான் இருக்க வேண்டி நேரிடும்.” என்று தந்தைபெரியார் அவர்கள் எச்சரித்தார்களே நாம் கேட்டோமா? இனி கேட்போமா !
அறிவுக்கு வேலை கொடுப்போம். பகுத்தறிவுக்கு வேலை கொடுப்போம். கும்பமேளா என்ற பார்ப்பன சூழ்ச்சியை முறியடிப்போம்.