மூன்று நூல்கள் பற்றி ஆய்வுரை
சென்னை, ஜன.8 சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நேற்று (7.1.2025) ‘சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே!’’ என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சென்னை புத்தகக் காட்சி 27.12.2024 முதல் தொடங்கி 12.01.2025 வரை நடைபெற்ற உள்ளது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் – திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகம் அரங்கு எண் F-21வில் இயக்க நூல்கள் விற்பனையாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று (7.1.2025) பிற்பகல்
3 மணிக்கு 48ஆவது புத்தகக் காட்சி அரங்கம் – நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திராவிடர் கழகப் பொருளாளர்
வீ. குமரேசன் வரவேற்புரையாற்ற, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையேற்று உரையாற்றினார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகத்தின் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் ெதாண்டறம்’ என்ற நூலை குறித்து திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, ‘உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’ (தொகுதி– 10) நூல் குறித்து புலவர் பா. வீரமணி, தமிழர் தலைவர் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ (தொகுதி 18) நூல் குறித்து திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் ஆய்வுரை வழங்கினர்.
நாஞ்சில் சம்பத், பா. வீரமணி, சே.மெ. மதிவதனி, கவிஞர் கலி. பூங்குன்றன், வீ. குமரேசன் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
நிறைவாக ‘‘சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே!’’ புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பங்கேற்று சிறப்பித்தார். துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். வை. கலையரசன் நன்றி கூறினார். நிகழ்வில் கழகத் தோழர்கள் புத்தகப் பிரியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.