தானாகவே சரியாகிவிடும் எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

3 Min Read

சென்னை, ஜன.8- “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எச்எம்பிவி வைரஸ் தானாகவே சரியாக கூடியது. எனவே இந்த வைரஸ் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஆலோசனை

சென்னை, தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், எச்எம்பிவி வைரஸ் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நேற்று (ஜன.7) நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “எச்எம்பிவி என்று சொல்லக்கூடிய வைரஸ் பற்றிய செய்தி தொடங்கியவுடனேயே நாமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறோம். இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்தவிதமான அறிவுறுத்தல்களும் தரவில்லை.
அதேபோல் ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இதுபோல் பாதிப்புகள் ஏற்படும்போது குறிப்பாக மாநிலங்களில் உள்ள சுகாதாரத் துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்புவார்கள். அதுவும் கூட இதுவரை இல்லை.
ஒன்றிய அரசு மருத்துவத் துறை செயலாளர் மூலம் காணொலிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நமது துறையின் செயலாளர் மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர். மத்திய சுகாதாரத் துறை செயலாளர் காணொளிக் கூட்டத்தில் பல்வேறு தகவல்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
அதாவது இந்த வைரஸ் குறித்து பயப்படத் தேவையில்லை. பதற்றப்படவும் தேவையில்லை. இது 50 ஆண்டுகளுக்கு முன்னால் பரவிய வைரஸ்.

முகக்கவசம்

2001இல் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட் டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புகள் வந்தால் 3 முதல் 6 நாட்களுக்கு சளி, இருமல் போன்ற சிறிய வகை பாதிப்புகள் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் பருவமழை தொடங்குகிறபோது வருகின்ற காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போதும் கூட முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகள் உலகம் முழுவதும் தற்போதும் இருந்து வருகிறது.

தானாகவே குணமாகிவிடும்

கோவிட் காலங்களில் உள்ள வைரஸ் அதனைத் தொடர்ந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், கம்மா, கப்பா, ஒமைக்ரான் போன்ற பல்வேறு வகைகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வந்தது. அதில் வீரியம் மிக்க வைரஸ், வீரியம் குறைந்த வைரஸ் என்று பலவகைகள் இருந்தது. அன்று அரசு எடுத்த நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை தனியார் மய்யங்களில் அதிகப்படுத்தியது. பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஏற்ற சிகிச்சைகள் வழங்கி பாதிப்புகளை அரசு கட்டுப்படுத்தியது.

ஆனால், இந்த வைரஸ் பொறுத்தவரை அந்த மாதிரியான எந்தவித பாதிப்புகளும் இல்லை. 3 முதல் 5 நாட்களில் தானாகவே குணமாகி விடும். இதற்கென தனியாக எந்தவித சிகிச்சைகளும் இல்லை. எந்தவித சிகிச்சைகளும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே தானாகவே சரியாகிவிடும் என்கின்ற நிலையில் இருந்து வருகிறது. எனவே இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஹெச்எம்பிவி (HMPV) தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற இணை நோய்கள் உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் என 2 பேருமே நலமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த வைரஸ் தானாகவே சரியாக கூடியது, யாரும் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *