ஆதரித்தாலும் சரி – எதிர்த்தாலும் சரி – அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
இருவருடைய இழப்பும் பேரிழப்பாகும் – நாட்டுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, எனக்கும் இது தனிப்பட்ட இழப்புதான்!
படத்திறப்பு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஜன.8 உலகப் பொருளாதார மேதைகளில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இறப்பு என்பது தமிழ்நாட்டிற்கு மிக மிக மிகப்பெரும் இழப்பு! ஆதரித்தாலும் சரி – எதிர்த்தாலும் சரி அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் நம்முடைய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்! இருவருடைய இழப்பும் பேரிழப்பாகும் – நாட்டுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, எனக்கும் இது தனிப்பட்ட இழப்புதான் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.1.2025) சென்னை, காமராஜர் அரங்கில் இந்திய மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை வருமாறு:
இந்திய மேனாள் பிரதமரும், நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுடையப் படத்தையும், மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய பெருமதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியும் அவர்களுக்கு புகழ் மாலை சூட்டக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், சட்டப் பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை அவர்களே,
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அள வில் மாபெரும் தூணாக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல – எனக்கும் தனிப்பட்ட இழப்புதான்!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக விளங்கிக்கொண்டிருந்தவர் நம்முடைய மதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். இரண்டு முக்கியமான தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்திருக்கிறோம். இருவருடைய இழப்பும் பெரிய இழப்பாகும். நாட்டுக்காக மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் இருவரையும் அறிந்தவன் என்ற முறையில் எனக்கும் இது தனிப்பட்ட இழப்புதான்!
டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் பொறுத்தவரையில் அவர் பிறவி அரசியல்வாதி அல்ல. ஆனால், இளங்கோவன் அவர்கள் பாரம்பரியமிக்க ஓர் அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பேரனாக, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் அவர்களுடைய மகனாக! இப்படி ஓர் அரசியல் குடும்பத்தில் பிறந்து இறுதி வரை அரசியல் வானில் வலம் வந்தவர்.
உலகப் பொருளாதார மேதைகளில் ஒருவர்!
இன்னும் சொல்லவேண்டும் என்றால், டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் அமைச்சரவையில், அமைச்சராகவும் இடம்பெற்றிருந்தவர் நம்முடைய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள். ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியவர். இருபெருந்தலைவர்களை நாம் இன்றைக்கு இழந்திருக்கிறோம். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் பொறுத்தவரை இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகப் பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவர். அவர் நினைத்திருந்தால், எந்தக் கவலைகளும் இல்லாத பரபரப்பு இல்லாத வாழ்க்கையை அவரால் வாழ்ந்திருக்க முடியும். அவரைப் போன்ற பொருளாதார மேதைகள், சிந்தனையாளர்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக அரசியலில் நுழைந்து நிதி அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். அதுவும், மிக நெருக்கடியான நேரத்தில் அந்த பொறுப்பை ஏற்று இந்திய நாட்டின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவர் உருவாக்கிக் கொடுத்த பொருளாதாரத் திட்டங்கள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
அன்னை சோனியாவின் பெருந்தன்மை
2004 ஆம் ஆண்டு பிரதமர் நாற்காலி அவரைத் தேடி வந்தது. அவரை வந்து சேர்ந்தது. அந்த தேர்தலில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று, அன்றைக்கு பிரதமர் பொறுப்பை அன்னை சோனியா காந்தி அவர்கள்தான் ஏற்கவேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் மட்டுமல்ல. அனைத்துத் தலைவர்களும் சொன்னார்கள். ஆனால், பிரதமர் பதவியை அம்மையார் அவர்கள் மறுத்து, அதை டாக்டர் மன்மோகன் சிங்குக்கு கொடுத்ததுதான் அன்னை சோனியா அவர்களின் பெருந்தன்மை.
வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக இல்லாத, ஆக விரும்பாத, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத டாக்டர் மன்மோகன் அவர்கள், ஒரு முறையல்ல, இரண்டு முறை, மொத்தம் பத்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் ஆட்சியை நடத்தக் காட்டியிருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பல்வேறுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவை எல்லாம் எண்ணில் அடங்காதது! ஒவ்வொன்றும் மகத்தானவையாக
அமைந்தது!
பல்வேறு திட்டங்கள்!
*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்
*மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்கச் சட்டம்,
*தகவல் அறியும் உரிமைச் சட்டம்,
*கல்வி பெறும் உரிமைச் சட்டம்,
*உணவுப் பாதுகாப்புச் சட்டம்,
*லோக்பால் அமைப்புச் சட்டம்,
*வன உரிமைகள் அங்கீகரிப்புச் சட்டம்,
*நிலம் கையகப்படுத்தப்பட்டால் நியாயமான இழப்பீடு களை வழங்கும் சட்டம்,
*கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம்,
*மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் அவரது ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.
*ஆதார் அட்டைகள்
*இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3ஜி தகவல் தொழில்நுட்பம்.
தமிழை செம்மொழியாக அறிவித்த
வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் மன்மோகன்சிங்
*50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி – இப்படி பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். பத்தாண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில், 21 தமிழர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தார்கள். 8 கேபி னட் அமைச்சர்கள், 13 இணை அமைச்சர்கள் என்று மிக அதிக அளவில் தமிழர்கள் ஒன்றிய அரசில் கோலோச்சியது அவருடைய அமைச்சரவையில் தான். அதுவும் மிகமிக முக்கியமான பல துறைகள் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலமாக எண்ணற்ற திட்டங்கள் நமக்கு கிடைத்தன. நமது நூற்றாண்டு கோரிக்கையான தமிழ் செம்மொழி என்பதை அறிவித்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர்தான் மன்மோகன் அவர்கள்.
*சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.
*சேலத்தில் புதிய இரயில்வே கோட்டம்.
*தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மய்யம்.
*சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு.
*திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்.
*கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்.
*3 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு.
*ஒரகடத்தில் ஒன்றிய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை ஆராய்ச்சி மய்யம்.
41,553 கோடி ரூபாய் செலவில் சேலம் உருட்டாலை பன்னாட்டுத் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.
*சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்.
*நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
*சென்னை மாநகரில் மெட்ரோ இரயில்.
*ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.
46,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலை.
*தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த சேது சமுத்திர திட்டம் தொடக்கம். – இப்படி எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரக் காரணமாகயிருந்தவர்தான் மன்மோகன் சிங் அவர்கள்.
மன்மோகன் சிங் இறப்பு தமிழ்நாட்டிற்கு
மிக மிக மிகப்பெரும் இழப்பு!
தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் நெருங்கிப் பழகி, நட்போடு அவர் இருந்தது யாராலும் மறுக்க முடியாது. அதுதான் இத்தனை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு நாம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம். மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இருந்தார்கள். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்கள், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார். அந்த வகையில் பார்த்தால், மன்மோகன் சிங் அவர்களின் இறப்பு என்பது தமிழ்நாட்டிற்கு மிக மிக மிகப்பெரும் இழப்பு என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.
நண்பர் மதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவருடைய மறைவு என்பது நிச்சயமாக சொல்கிறேன் என்னால் தாங்கி கொள்ள முடியாத இழப்பு. என்னை எப்போது சந்திக்க வந்தாலும் ‘உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது’ என்றுதான் கேட்பார்.
நானும் திரும்ப அவரிடத்தில் அதை தான் கேட்பேன். ”நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்” என்றுதான் சொல்வேன். அவர் சொன்னார், ‘நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை எம்.எல்.ஏ.-ஆக ஆக்கி இருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றுவேன், உழைப்பேன் உழைப்பேன்’-என்று உறுதியுடன் கூறினார். ஆனால், உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்குச் சென்றபோதும், ‘என்னைச் சந்திக்க வேண்டும்’ என்று அவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லியிருக்கிறார்.
தாங்கிக்கொள்ள முடியாத இழப்பு!
இந்தச் செய்தி கிடைத்தவுடன் நான் உடனடியாக, மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். ஆனால், அவர் பேச முடியாத நிலையில் இருந்தார். ஏதோ சொல்ல முற்பட்டார். ஆனால், அவரால் பேச முடியவில்லை. அதைத்தான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன். அவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. மறைந்தபோது நான் வேதனைப்பட்டேன், மனம் உடைந்து போனேன். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். மகன் மறைந்ததால் இளங்கோவன் அவர்கள் போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சியும் நீடிக்காத வகையில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அதனால்தான் தாங்கிக்கொள்ள முடியாத இழப்பு என்று நான் கூறினேன்.
தந்தை பெரியார் குடும்பத்தின் பெருஞ்செல்வம் மட்டுமல்ல – அவருடைய தந்தையார் ஈ.வெ.கி.சம்பத் அவர்கள் பேரறிஞர் அண்ணாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் நெருக்கமான நண்பராக, தோழராக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு சம்பத் அவர்கள் விலகிய பிறகும், அவரை பேரறிஞர் அண்ணா அவர்கள் விமர்சிக்கவில்லை. அதேபோல் சில நேரங்களில் இளங்கோவன் அவர்களும் கலைஞர் அவர்களை அரசியல் சூழல் காரணமாக விமர்சிப்பார். ஆனால், கலைஞர் அவர்கள், அவரைப்பற்றி எதுவும் பேச மாட்டார். காரணம், ‘சம்பத் பையன்தானே’-பேசட்டும் என்று பெருந்தன்மையோடு இருப்பார்.
ஆதரித்தாலும் சரி – எதிர்த்தாலும் சரி அதைச் சரியாக, உறுதியாக
செய்யக் கூடியவர்!
மனதில் உள்ளதை மறைக்காமல் – அதே நேரத்தில் துணிச்சலாக – தெளிவாக – எதைப் பற்றியும் கவலைப்படாமல், தயக்கம் இல்லாமல் பேசக் கூடியவர்தான் நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். ஆதரித்தாலும் சரி – எதிர்த்தாலும் சரி அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் நம்முடைய இளங்கோவன் அவர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை மிகத் தெளிவாக மேடைகளில் அவர் விளக்கிப் பேசினார். அதைவிட மற்றொன்றையும் கூறினார். “இதுதான் உண்மையான காமராசர் ஆட்சி”-என்று வெளிப்படையாக கூறியவர்தான் அவர்.
எந்தப் பதவியில் இருந்தாலும்
அந்தப் பதவியில் முத்திரைப் பதித்தவர்!
தேசிய குடும்பத்தில் பிறந்து, தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த இளங்கோவன் அவர்கள் இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குக் கொடுத்த நற்சான்றுப் பத்திரம் அது என்பதை நான் இப்போதெல்லாம் நினைத்து நினைத்துப் பெருமைப்படுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஒன்றிய அமைச்சராக என்று எந்தப் பதவியில் இருந்தாலும் அந்தப் பதவியில் முத்திரைப் பதித்தவர் நம்முடைய இளங்கோவன் அவர்கள்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும் நாடாளுமன்றப் பணிகளில் பங்கெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு பங்கெடுத்து பதிலும் அளித்திருக்கிறார். வயது முதிர்ந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தவர் நம்முடைய மன்மோகன் சிங் அவர்கள்.
இப்படிப்பட்ட இரு தலைவர்களை நாம் இழந்திருக்கி றோம். ஆகவே, என்னுடைய புகழ் மாலையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செலுத்தி, என் புகழுரையை நிறைவு செய்கிறேன்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.