ராம் மகாலிங்கம்
பேராசிரியர், உளவியல் துறை, இயக்குநர்,
பார்ஜ்ர் தலைமைத்துவ நிலையம்,
மிச்சிகன் பல்கலைக்கழகம்
சமூகக் கட்டுப்பாடுகள் மரபு, பண்பாடு, சமயம் என பல்வேறு ரூபங்களில் நம் வாழ்வை நெறிப் படுத்துகின்றன. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என பெண்கள் வாழ்வை இச் சமூகத்தளைகள் மேலும் கட்டுப்படுத்துகின்றன. பண்பாட்டைக் காக்கும் பெட்டகமாகப் பெண்களைப் போற்றுதலும், பண்பாட்டை ’மீறும்’ பெண்களைச் சாடுதலும் ஆண் டாண்டு காலமாகப் பல்வேறு சமூகங்களில் வழக்கத்தில் உள்ளது. பெரியார் பெண் விடுதலைக்கும் மதம் மற்றும் பண்பாட்டின் பெயரால் சக மனித ஒடுக்குமுறைக்குமான விடிவை அறிவியல் சார்ந்த சிந்தனையிலும் வாழ்வு நெறியிலும் தேடினார்.
பெரியார் அறிவியலையும் அறிவியல் சார்ந்த சிந்தனைகளையும் இரு தளங்களில் வைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். சமூகத்தளத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்தை உருவாக்கவும் உதவும் என நம்பினார். உதாரணமாக, அறிவியல் வளர்ச்சியால் ரயில், விமானம், கார் போன்ற வாகனங்கள் நமது பயணங்களைச் சுலப மாக்கி நமக்குப் புது அனுபவங்களும் சிந்தனைகளும் கிட்ட வழி வகுத்தன. தனிநபர் தளத்தில், அறிவியலின் பயன்களை வெறும் நுகர்வோராக மட்டுமின்றி, நாம் அறிவியல் சிந்தனையுடன் வாழ்க்கையை அணுக வேண்டியது அவசியம் என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் பேசியும் எழுதியும் வந்தார்.
ஒரே பொருளில்
பெரியார் பகுத்தறிவு என்ற சொல்லையும் அறிவியல் சிந்தனை என்ற சொல்லையும் பலமுறை ஒரே பொருளில் பயன்படுத்தியுள்ளார். இந்தக் கட்டுரையில் இவ்விரு சொற்களை நானும் அவ்வாறே பாவிக்கிறேன். பகுத்தறிவைக் கூர்மையான அறிவு என்று பெரியார் குறிப்பிடுகிறார். அஞ்ஞானம் பேதங்களின் ஊற்றுக்கண். பேதங்கள் சக மனிதருடன் வேற்றுமை பாராட்டுவதற்கும், ஒப்புநோக்கி மேன்மேலும் மன அழுத்தமடையவும் தூண்டுகோலாய் அமைகின்றன. பெரியார், அறிவியல் சிந்தனை மூலமே நாம் அஞ்ஞானம் அகற்றி மகிழ்வாக, சுதந்திரமாக வாழ முடியும் என்று உறுதியாக நம்பினார். பேதமின்றிப் பார்க்கும் தன்மையே உண்மையான மெய்ஞ்ஞானம். அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதன் மூலமே மெய்ஞ்ஞானத்தை நாம் அடைய முடியும் என்று எல்லாத் தளங்களிலும் பெரியார் பேசி வந்தார்.
நம் அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாட்டுக்கும் அறிவியல் சிந்தனைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அறிவியல் பலன்களைக் குறிப்பாகத் தொழில்நுட்ப மாற்றங்களை நாம் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. கைபேசி, கம்ப்யூட்டர் நம் அன்றாட வாழ்வின் இன்றியமையாத அங்கமாக மாறி விட்டன. ஆனால் அறிவியல் பலன்களின் நுகர்வையும், அறிவியல் சிந்தனைகளையும் ஒரே தளத்தில் வைக்காமல் பகுதியாகப் பிரித்து வாழ்வதற்குப் பழகிவிட்டோம். அறிவியல் பலன்களை ஏற்கும் மனம் அறிவியல் சிந்தனைகளைச் சுலபமாக ஏற்க மறுக்கிறது. அதற்கான காரணங்கள் என்ன?
பெரியார் மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறார்:
1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும்;
2. முன்னோர்கள் (பெரியவர்கள்) எழுதியபடி நடக்க வேண்டும்;
3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் என்பவைகளாகும். இந்த மூன்று விழுமியங்களும் நம் அன்றாட வாழ்வைப் பல்வேறு வகைகளில் பாதிக்கின்றன. குறிப்பாக நமது கல்விமுறைகளில் இவற்றின் தாக்கம் மிக மிக அதிகம். நம் கல்விக் கூடங்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறனை மாணவர்களிடம் வளர்ப்பதிலேயே பெருமளவு கவனம் செலுத்துகின்றன.
ஒரு ஒப்பாய்வில், இந்திய ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கிடையே போற்றும் மிகச் சிறந்த பண்பாகக் கீழ்ப்படிதலைக் குறிப்பிட்டுள்ளார்கள். அமெரிக்க ஆசிரியர்களோ சுயமாகச் சிந்தித்துப் படைப்பாற்றலுடன் இருப்பதையே தலையாய பண்பாக மாணவர்களிடம் எதிர் பார்க்கிறார்கள். நாம் கேள்வி கேட்கும் திறனை மாணவர்களிடம் வளர்ப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. நம் கல்வி நிலையங்கள் கேள்வி கேட்கும் பழக்கத்தை வளர்க்காமல், அறிவார்ந்த கல்வியும், மூட நம்பிக்கைக் கல்வியும் ஒருசேர மாணவர்களுக்குத் தரப்படுகின்றன. “இதனால் மாணவர்கள் பகுத்தறிவும் அதற்கு மாறான மூடநம்பிக்கையும் – இரண்டும் கொண்டவர்களாகி விடுகின்றனர். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியர்வர்களும், உபாத்தியாயர்களும் கூட மூடநம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் (பெரியார், 1945).”
சுயமரியாதை
அதனால் ஆசிரியர்கள் கேள்வி கேட்கும் ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்ப்பதில் அக்கறை காட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். போளூரில் நடந்த ஆசிரியர் மாநாட்டில் (1927) பேசுகையில், பெரியார் சுயமரியாதை என்றால் என்னவென்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். “சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடம் அன்புடன் இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.” கல்வி என்பது சமத்துவத்தையும் சுயமரியாதையையும் அனைத்துப் பணியாளர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதையும் போதிக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
“சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது. ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியவர்களை விட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒருவிதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களும் அல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக் காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படியாதவர்கள் பரோபகாரி களாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதை உள்ள வர்களாகவும் இருக்கலாம் (பெரியார், 1927, பக்கம், 568).”
மேற்கூறிய இக்கூற்று கல்வியைப் பற்றிய பெரியாரின் பரந்துபட்ட பார்வை, குறிப்பாக சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை குறித்த அக்கறை, நமது சமகாலச் சவால்களை எதிர்கொள்ள உதவுபவை.
பெரியாரும், அறிவியல் சிந்தனையும்:
சமகாலச் சவால்கள்
நாம் தற்போது மூன்று ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த சமகாலச் சவால்களைச் சந்திக்க வேண்டி யுள்ளது:
(1) சமூக ஊடகங்களும் எதிர் துருவச் சிந்தனைகளும்;
(2) பெருகிவரும் சமூக ஒப்பீடுகள்;
(3) பாதுகாப்பற்ற வேலைகளால் பெருகி வரும் சமூக ஏற்றத் தாழ்வுகள்.
கைபேசியும், சமுக வலைத்தளங்களும் (வாட்சப், முகநூல்) நம் வாழ்வின் இன்றியமையாத அங்கங்களாய் ஆகிவிட்டன. வாட்சப் பல்கலைக்கழகம் மூலம் பரவும் செய்திகளை மட்டுமே நம்பும் கணிசமானோர் நம் நண்பர்கள் வட்டத்திலும் நம் குடும்ப உறவுகளிடமும் இருப்பதைக் காண்கிறோம். சமூக ஊடகங்கள் நம் விழுமியங்களோடு ஒத்துப்போகாதவர்களை எதிரெதிர் துருவங்களில் இலகுவாகக் கட்டமைக்கின்றன. அதனால் அவர்களை நையாண்டி செய்வதும் பழிப்பதும் எளிதாகின்றன.
சமூக ஊடகங்கள் மூலம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் தன்மையும் அதிகரித்துள்ளது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது. மன உளைச்சல் தற்கொலையைத் தூண்டுவதும் அதிகரித்துள்ளது. தாராளமயமாக்கப்பட்டச் சந்தையும் பொருளாதாரமும் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருகின்றன. சமூக தகுதியில் நம்மை விடப் படிநிலையில் கீழாக உள்ளவர்களைத் துச்சமாக நடத்துவதும் அதிகரித்துள்ளன. பாதுகாப்பற்ற வேலைகளும் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியமும் பெரும்பான்மையோரின் உடல் வளத்தையும், மனநலத்தையும் பாதித்துள்ளது. பெரியார் விழைந்த அறிவியல் சிந்தனை எவ்வாறு இந்தச் சவால்களைச் சந்திக்க உதவும் என்பதையும் பார்ப்போம்.
சமூக ஊடகங்களும் எதிர்துருவச் சிந்தனைகளும்
நாம் சமூக ஊடகங்களில் ஒரு நாளின் பெரும் பகுதியை அன்றாடம் செலவிடுகிறோம். வாட்சப் மூலம் வரும் தகவல்களைச் சரி பார்க்காமல் அப்படியே மற்றவர்களுக்கு அனுப்பும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதனால் தகவல் பிழைகள், உண்மையான செய்தி போன்று பரப்பப்படுகின்றன. அதற்கு உடனடியான எதிர்வினைகளும் சமூக வலைத்தளங்களில் பதிவாகின்றன. எதிர்க்கருத்து உடையோரைப் பல்வேறு வகையில் இழிவுபடுத்தும் சமூகதள சொல்லொழுகுகள் (trolls) எதிர்க்கருத்து கொண்டோருடன் அறிவுப்பூர்வமான உரையாடல் களுக்கான வாய்ப்புகளை மழுங்கச் செய்கின்றன.
‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’’
என்ற வள்ளுவன் வாக்கைத் தன் கருத்துக்கும் பொருத்தி வாழ்ந்தவர் பெரியார். நான் சொல்லியது உன் அறிவிற்குச் சரியென்று தோன்றினால் மட்டுமே ஏற்றுக்கொள் என்று பொது மேடைகளில் கூறியவர் பெரியார். கூறியவர் யாராக இருந்தாலும் செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தத் தயங்காத மனோதிடத்தையம், அறிவியல் சார்ந்த சீர் தூக்கிப் பார்க்கும் சிந்தனையையும் மாணவர்கள் கற்க வேண்டும்.
அறிவுப்பூர்வமாய்ச் சமூக ஊடகங்களை அணுகுவது எப்படி என்று ஊடகக் கல்விமுறையைப் பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும். பெரியார் கூறியதைப்போல் மாணவர்களைக் கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும். அறிவியல் சிந்தனை சக மனிதர்களைக் கருணையுடன் புரிந்து கொள்வதற்கும் அறிவுப்பூர்வமாக உரையாடுவதற்குப் பயன்படும் வகையில் நமது கல்விமுறை இருத்தல் அவசியம்.
பெரியார் பேதமின்றி வாழ்வையும் சக மனிதர் களையும் அணுகுவதே மெய்ஞ்ஞானம் என்று கருதினார். சக மனிதர்களின் மானுடத்தைப் போற்றுவதே மெய்ஞ்ஞானம். அறிவார்ந்த சிந்தனை மூலமே சக மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் நல்ல நிகழ்வுகளை அவரவர் வாழ்க்கைத் தடத்தில், சூழலில் பொருத்திப் பார்த்து அவர்களுக்காக மகிழ்ச்சி அடைவதே பெரியார் கூறிய பேதமின்றி வாழும் மெய்ஞ்ஞான வாழ்வாகும்.
1927 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் ஆசிரியர்கள் மாநாட்டில் விடுத்த வேண்டுகோளை நாம் நினைவு கூர வேண்டுவது காலத்தின் கட்டாயம். சக மனிதர்கள் ஒரு வேலையை நமக்குச் செய்வதால், நாம் அவர்களைக் குற்றேவல் புரியும் வேலைக்காரர்களாய் நடத்துகிறோம். நாம் வேலைகளை ஜாதியப் படிநிலை அடுக்குமுறையில் பார்த்து வளர்ந்த சமூக உளவியலே இதன் அடிப்படை. சமூகம் பற்றிய அறிவியல் கல்வி இத்தகைய ஜாதிய உளவியலைப் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி ஜாதியைக் கட்டுடைக்க முடியும். அப்போதுதான் பெரியார் வேண்டிய அறிவியல்பூர்வமான சமத்துவப் புரிதல் ஏற்பட முடியும். சக மனிதனைக் கருணையோடு நடத்தத் தேவையான மனத்தெளிவும், ஜாதிப் பற்றைத் துறக்கவேண்டிய மனோதிடமும் ஒருசேர வாய்க்கும். பெரியார் கூறியதுபோல் செருப்புத் தைப்பவரும், மென் பொறியாளரும், துப்புரவுத் தொழிலாளரும், மின் மயான ஊழியரும், மருத்துவரும் அவரவர் துறைகளில் நிபுணர்களே. அவர்கள் எல்லோரும் நம் மரியாதைக்குரியவர்கள்.
தன் உயிரைப் பணயம் வைத்து தினமும் பாதாள சாக்கடைக்குள் இறங்கும் தூய்மைத் தொழிலாளியின் வேலைக்கான அர்ப்பணிப்பு எவ்வகையிலும் மற்ற எந்தத் தொழிலாளர்களுக்கும் குறைவதானல்ல. சில தொழில்களைப் புனிதமானவை (உதாரணம் – மருத்துவர், ஆசிரியர்) என்றும் சில தொழில்களை அசுத்தமானதென்றும் (உதாரணம் – தூய்மைத் தொழி லாளர், மயான ஊழியர்) நாம் நினைக்கக் காரணமாய் இருப்பது சாதியப் படிநிலை உளவியலே. எந்தத் தொழில் புரிபவர்களானாலும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே பெரியாரின் கோரிக்கை. நம் மனதில் கட்டப்பட்ட சமூகத்தளைகளை உடைக்க ஜாதி, மதம், பாலினம், தொழில்கள் பற்றி அறிவியல்பூர்வமாகச் சிந்திக்க நாம் கற்க வேண்டும். அப்போதுதான் சக மனிதர்களின் மானுடத்தை நேசித்து கண்ணியத்துடன் அவர்களை நடத்த வேண்டிய மனத்தெளிவு நமக்குக் கிடைக்கும். இதற்கான வழிவகைகளை நம் கல்விமுறைகளில் கிடைப்பதற்கு வகை செய்யவேண்டும்.
மானுடப் பார்வை
பெரியாரின் அறிவியல் சிந்தனை என்பது வறட்டுத்தனமான பகுத்தறிவுச் சிந்தனை அல்ல. அது இடம், பொருள், சூழல் சார்ந்த புரிதலுடன், சக மனிதர் களின் மானுடத்தைப் பகுத்தறிந்து, கருணையுடன் நேசிக்கும் நுணுக்கமான பார்வை. நமது கல்விமுறைகள் பெரியார் பார்வையில் அறிவியல் சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும். கல்வி நமக்குச் சக மனிதர்களின் மானுடத்தைப் புரிதலுடன் நேசிப்பது எப்படி என்பதைக் கற்பிக்க வேண்டும். அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு சமூகக் குழுக்களிடையே (உதாரணம் – வெள்ளை, கறுப்பு, ஆண் – பெண்) தங்கள் அடையாளங்களைப் பற்றி செமஸ்டர் முழுவதும் உரையாடல் மூலம் ஆழமான புரிதலை உண்டாக்கும் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. உரையாடல்கள் ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்தை மட்டுமே கவனத் தில் கொள்ளும். உதாரணமாக, ஆண் – பெண் உரையாடல் பாடத்தில் ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையில் பங்கு பெறுவர்.
தங்கள் சமூக அடையாளங்கள் குறித்த வார்த்தைச் சலம்பல்களைத் தாண்டி எவ்வாறு பேசுவது, மற்றவர் பார்வையில் அவர்கள் வாழ்க்கையைக் கருணையுடன் பார்ப்பது என்பன போன்றவற்றை மாணவர்கள் ஒரு செமஸ்டர் முழுவதும் கற்பார்கள். நாட்குறிப்பு, குழுப்பயிற்சி, கலந்துரையாடல் போன்ற பல்வேறு பயிற்சிகள் ஒரு செமஸ்டர் முழுவதும் நடைபெறும். இந்த பாடத் திட்டத்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
ஓர் ஆய்வில் இந்த பாடத் திட்டத்தை எடுத்த மாணவர்கள் பத்தாண்டுகளுக்குப் பின், தங்கள் நட்பு வட்டத்திலும், தாங்கள் தொடங்கிய நிறுவனங்களிலும் பலதரப்பட்டச் சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்களை இணைத்துள்ளது தெரிய வந்தது. பெரியாரின் அறிவியல் சிந்தனை மானுட அறமும் மனிதநேயமும் நிறைந்தது. அத்தகைய சிந்தனையைச் சமூகநீதி கல்விமுறையில் இணைத்தல், ஜாதி, மதம், மொழி சார்ந்த சமூகத்தளைகளை உடைத்தெறிந்து சக மனிதர்களின் மானுடம் போற்றும் சுதந்திரமான சிந்தனைத்திறனை வளர்த்தெடுக்க முடியும்.
குறிப்பு நூல்: (2017). ‘பெரியார் இன்றும் என்றும்’
(கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்)