பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து 14 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை,ஜன.7- பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, ஜன.10ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

பொங்கலுக்கு

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சர் கூறியதாவது:

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜன.10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மொத்தம் 21,904 பேருந்துகள்: ஜன.10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்பு பேருந்துகளும் என 4 நாட்களுக்கு 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிற ஊர்களில் இருந்து 4 நாள்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக, 21,904 பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல், பொங்கல் திருநாள் முடிந்து, சென்னை திரும்புவதற்கு வசதியாக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்தவகையில் ஜன.15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மற்ற முக்கிய ஊர்களில் 6,926 பேருந்துகள் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும்.

இணையதளம் மூலம் முன்பதிவு

இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய வசதியாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 முன்பதிவு மய்யங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மய்யங்களும் செயல்படும். இதுதவிர, tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 9445014436 என்ற கைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். கிளாம்பாக்கம் செல்ல, கோயம்பேட்டில் இருந்து 100 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து 100 பேருந்துகளும், திருவான்மியூர், பூவிருந்தவல்லியில் இருந்து தலா 50 பேருந்துகள் என 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் 24 மணி நேரமும் செயல்படும்.

ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று பயணிகள் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.

கார்களில் செல்பவர்கள் சென்னை – திருச்சி சாலையைத் தவிர்த்து, ஒஎம்ஆர் வழியாகவோ, திருப்போரூர் – செங்கல்பட்டு வழியாகவோ சென்றால், பேருந்து போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *