திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகம், விஜய வாடா நாத்திகர் மய்யம் ஆகியவை இணைந்து நடத்திய 8ஆவது உலக நாத்திகர் மாநாடு 2011ஆம் ஆண்டு ஜனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் திருச்சியைக் கலக் கியது.
ஆந்திரா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், டில்லி, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், மலேசியா, பின்லாந்து என பல பகுதி களிலிருந்தும் 430 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந் தனர். அவரவரின் உணவு முறைகளை முன்கூட்டியே கேட்டறிந்து, அதற் கேற்ப உணவுவகைகள் தயாரிக்கப் பட்டிருந்தாலும் வெளிநாட்டவர் பலரும் இந்திய உணவுகளையே விரும்பிச் சாப்பிட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகள் பலவற்றையும் தி.க.வின் தலைமை நிலையச் செயலாளரான வீ.அன்புராஜ் கவனமாகச் செய்திருந்தார்.
திராவிட யுத்தம்
தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தியுடன் முதல்நாள் மாநாடு தொடங்கியது. திராவிட இயக் கம், பெரியாரின் பெரும் பணி, பெண் ணுரிமை, ஆரிய – திராவிட யுத்தம் உள்ளிட்ட ஆங்கில – தமிழ் நூல்கள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனத்தில் பயில்பவர்களின் கலை நிகழ்ச்சிகள், பகுத்தறிவு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், 3 வயது யாழினியின் பெரியார் பேச்சு, வெற்றிச்செல்வனின் நாத்திக உரை ஆகியவை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
மூங்கில் பண்ணை
வல்லம் பெரியார் மணியம்மை வளாகத்தின் பெரியார் தாவர கரு வூலத்தில் உள்ள டார்வின் பூங்காவில் 25 வகைகளுக்கு மேலான 500 மரங்களை 200-க்கும் மேற்பட்ட பன்னாட்டு அறிவாளர்கள் நட்டனர். அங்குள்ள மூங்கில் பண்ணையைப் பார்வையிட்டு மகிழ்ந்தவர்கள் அங் கேயே சிற்றுண்டியும் சாப்பிட்டனர். மூடநம்பிக் கையில் செய்யப்படும் காரியங்களை, பகுத்தறிவுக் கண் ணோட்டத்துடன் விளக்கும் தீச்சட்டி ஏந்துதல், தீமிதித்தல் போன்றவற்றை கழக தோழர்களுடன் வெளிநாட்டு அறிஞர்களும் செய்தது பலரையும் வியக்க வைத்தது. சர். ஏர்க் சர் ஏர்க்.. என்றபடியே நார்வே லூயிஸ் ரோஸ்டு, ஆந்திரா சாரய்யா, கேரளா ஜேம்ஸ் ஆகியோர் தீ மிதித்தனர். நாத்திகர் பேரணியில் 4 வயது குழந்தை முதல் 80 வயது பெரியவர் வரை கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டே தீச்சட்டி ஏந்தியதையும் தீ மிதித்ததையும் அலகு குத்தி கார் இழுத்ததையும் திருச்சி மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். சத்திரம் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த அய்யப்ப பக்தர்கள் 300 பேர் சுமார் 3 மணி நேரம் நடந்த இந்தப் பேரணியை முழுமையாகப் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினார்கள். பேரணியை புத்தூரில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து பார்வையிட்ட ஆசிரியர் வீரமணி, கனிமொழி, சுப.வீர பாண்டியன் ஆகியோர் தி.க. தொண்டர்கள் அளித்த தீச்சட்டியை ஏந்தியபோது பலத்த கைதட்டல். நாட்டின் முக்கிய நிகழ்வு, வெளிநாட்டு நாத்திக – பகுத்தறிவு அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்குகளை மதச் சார்பின்மை, மனிதநேயம், மக்கள் உரிமை, அறிவியல், ஊடகம், நாத்திகம் உள்ளிட்டவை தொடர்பான 9 கருத்தரங் குகள் நடைபெற்றன. அனைத்திலுமே கேள்வி – பதில் பாணியிலான உரையாடல்களும் இருந்ததால் தேவையான விளக்கங்களைப் பங்கேற்பாளர்களாலும் பார்வையாளர் களாலும் உடனுக்குடன் பெற முடிந்தது.
நார்வே மனிதநேய அமைப்பின் பொதுச் செயலாளர் கிருஷ்டி மெலி – பிற நாடுகளைக் காட்டிலும் நார்வேயில் பெண்கள் நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கான பல்கலைக் கழகங்கள் நிறைய உள்ளன. மதங்கள் எப்போதுமே பெண்களின் முன்னேற்றத்திற்கு அனுமதிப்ப தில்லை. நார்வே நாட்டு கிறிஸ்தவ சபைகள் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆந்திர மாநில நாத்திகப்போராளி கோராவின் மகன் விஜயன் – நாத்திகம் என்பதை இங்கு எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அப்படி இல்லாமல் நேர்மறையாக நோக்க வேண்டும். தமிழ்நாட்டில் பதிவுத் திருமணங்களையும் கலப்புத் திருமணங்களையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம், நாத்திகத்தின் பங்களிப்பு. ஆனால் வட இந்தியாவில் வேறுவிதமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஜாதி என்ற இடத்தில் வெற்று என்று எழுதும் பழக்கம் உள்ளது. இங்கும் அது வர வேண்டும்
ஆசிரியர் கி. வீரமணி உரையாற் றும் போது – மூட நம்பிக்கைகளைத் தகர்ப்பதற்காக நம்முடைய கருஞ் சட்டை வீரர்கள் அலகு
குத்துவது, கார் இழுப்பது என்று தங்களை வருத்திக் கொள்வது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அறிவியலைப் படிப்பது மட்டுமல்லாமல் அதனை மக்கள் உணர்ந்து கொள்ளவும் வேண்டும். உலகத்திலேயே நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்துவது தமிழ்நாட்டில் தான். பன்னாட்டுப் பகுத்தறிவாளர்கள் இங்கு வந்து தீச்சட்டி ஏந்துகிறார்கள். தீ குண்டம் மிதிக்கிறார்கள் என்றால் பெரியார் உலகமயமாகிறார் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. என்று கூறினார்
வெளிநாட்டு சிறப்பு அழைப் பாளர்களும் தமிழ்நாட்டு பகுத்தறிவா ளர்களும் இணைந்து பானையில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டி, பொங்கலோ பொங்கல் என்று தமிழர் திருநாளைக் கொண்டாடினார்கள். நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு அல்ல, மனிதகுலத்தின் மீதான அக்கறை என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது உலக நாத்திகர் மாநாடு.