தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை
சென்னை, ஜன.6 சாவர்க்கரை ஒரு விடுதலை போராட்ட வீரர் என்று பாஜக கூறுவதை வரலாறு அறிந்த பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித் துள்ளார்.
ஆதாரமற்ற தகவல்
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது: ”பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், சாவர்க்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தவறான தகவல்களை கூறியிருக்கிறார். அவர் பேசும்போது சாவர்க்கரின் தியாகத்தால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு விடுதலை போராட்டத்தில் இணைந்ததாகக் கூறியிருக்கிறார். இது ஒரு கடைந்தெடுத்த பொய் பிரச்சாரமாகும்.
தொடக்க காலத்தில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று ஜூலை 4ஆம் தேதி 1911இல் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டார். அடைக்கப்பட்ட 6 மாதத்தில் சாவர்க்கர் பிரிட்டீஷ் ஆட்சி யாளர்களுக்கு 1911 முதல் 1920 வரை 11 மன்னிப்பு கடிதங்களை எழுதி தன்னை சிறையில் இருந்து விடுவிக்கும்படி கூறியிருக்கிறார்.
மன்னிப்பு கடிதம்
அந்தமான் சிறையில் இருந்த சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதத்தில் ‘இனி விடுதலை போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன். முழு விசுவாசியாக நடந்துகொள்வேன். நான் செய்த குற்றத்தை மன்னித்து விடுவிக்கும்படி’ அந்த கடிதங்களில் பல முறை வலியுறுத்தி கூறி யிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை எவருமே மறுக்க முடியாது. அதேபோல காந்தியாரை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவோடு நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர் சாவர்க்கர். இந்து மகாசபையின் தலைவராக இருந்த சாவர்க்கர் நாதுராம் கோட்சேவுக்கு இந்துத்துவா கருத்துகளை கூறி மூளை சலவை செய்தவர்.
இத்தகைய நச்சுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே காந்தியாரை படுகொலை செய்த வழக்கில் ஏழாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் சாவர்க்கர். ஆனால் முழுமையான நேரடி ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தை கூறி சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார். அத்தகைய சாவர்க்கர் படத்தை நாடாளுமன்றத்தின் மய்ய மண்டபத்தில் காந்தியாரின் திருவுருவப் படத்திற்கு நேர் எதிரில் திறந்து வைத்து கொடிய மாபாதகச் செயலை அன்றைய ஒன்றிய பாஜக அரசு செய்தது. இதை தேசபக்தியுள்ள எவரும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
களங்கம்
பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கைப் பாவையாக செயல்பட்ட சாவர்க்கரை ஒரு விடுதலை போராட்ட வீரர் என்று அவதூறான செய்திகளை பாஜக கூறுவதை வரலாறு அறிந்த பொதுமக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விடுதலை போராட்டத்தில் கடுகளவு பங்கும் வகிக்காத இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். வழி வந்த ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சி செய்வது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானமாகும். எனவே, விடுதலை போராட்டத்தில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஏஜெண்டாக இருந்த சாவர்க்கர் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை பாஜகவினரால் துடைக்க முடியாது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.