உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமையேற்ற ஒரே பெண்மணி அன்னை மணியம்மையாரே! தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தன்னிகரற்ற தலைவராகப் பொறுப்பேற்ற நாள் இந்நாள் (6.1.1974).
ஆம் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் அன்னை மணியம்மையார் தலைமையில் எடுத்துக் கொண்ட அந்த உறுதிமொழி மகத்தானது.
‘‘திராவிடர் கழகத்தவராகிய நாங்கள் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்றிருக்கின்ற பணியை அவர் போட்டுத் தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம்’’
இது திராவிடர் இயக்க வரலாற்றில் என்றும் பேசு பொருளாக இருக்கக் கூடிய தீர்மானம். சுயமரியாதை இயக்கமாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, மாநாடுகளாக இருந்தாலும் சரி, பொதுக் குழு, செயற்குழுக்களாக இருந்தாலும் சரி அவற்றில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தொலைநோக்குச் சீரிய பார்வையைக் கொண்டவை.
1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டின் தீர்மானங்கள் இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டு இருக்கின்றனவே!
சமுதாயத் தடத்தில், அதற்கு முன் அத்தகைய எழுச்சியூட்டும், வரலாற்றையே திருப்பிப் போட்ட புரட்சிகரத் தீர்மானங்கள் கண்டறியாதவை.
அந்தத் தீர்மானங்கள் அதற்குப்பின் ஆட்சியில் அமர்ந்தவர்களால் செயலாக்கப்பட்டே தீர வேண்டியவைகளாக அமைந்து விட்டன என்பது அத்தீர்மானங்களுக்கே உரித்தான தனித்தன்மையாகும்.
பெரியார் என்ற மேருமலை இருந்தது – அது சாய்ந்து விட்டது; அவருக்குப் பின் அதனை எடுத்து நடத்திட யார் இருக்கிறார்கள்?
உடம்பெல்லாம் மூளை என்று வருணிக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியாரின் கணிப்பே தோல்வியைத் தானே கண்டது.
தந்தை பெரியார் எடுத்த முடிவில் மாறுபட்டுச் சென்ற அறிஞர் அண்ணா அவர்களே, பிற்காலத்தில், தந்தை பெரியாரின் ஆயுள் நீட்சிக்கு முழு முதற்காரணம் மணியம்மையாரே என்று மனந் திறந்து பாராட்டியதையும் நினைவு கூர்தல் வேண்டும் என்பது ஒன்று!
இரண்டாவதாக வேலூர் கழகத் தொண்டரின் மகளான ஒரு பெண் – எதிர்காலத்தில் இந்த இயக்கத்தை எழுச்சியுடன் நடத்துவார் என்று தந்தை பெரியார் கணித்ததை எண்ணினால் மலைப்பாக இருக்கிறது! மலைப்பாக இருக்கிறது!!
ஆம், அய்யாவின் கணிப்பு நூற்றுக்கு நூறு சரியானது – முற்றிலுமாகப் பலித்தது!
தந்தை பெரியாரின் உடல் நலனில் தன் கருத்தை ஒவ்வொரு நொடியிலும் பதிய வைத்து, 95 ஆண்டுகாலம் வாழ வைத்தார் அன்னையார்! காரணம் தந்தை பெரியாரின் வாழ்வினில் தான் உயிர்ப்போடு தமிழ்நாடு வாழ முடியும் என்ற உறுதியான கருத்தே அதற்கு அடிப்படை!
(அய்யாவின் உடல் நலனில் அதிக அக்கறை கொண்ட அன்னையார் தன் உடல் நலனைப் பேணவில்லையே, என் செய்வது! 60 வயதைக் காணுமுன்பே இழந்தோமே என்பதை நினைத்தால் நெக்குருகிப் போகிறோம்!)
தோற்றத்தில் அன்னையார் அமைதியின் வடிவம்! ஆனால் அவரின் போராட்டப் பெருங்குணம் அளப்பரியது.
அய்யா இருக்கும் போதே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குடந்தையில் கைதாகி வேலூர் சிறை சென்று விடுதலையானவர்தான் (20.12.1948–23.2.1949)
சிறை வாயிலுக்கே சென்று தந்தை பெரியார் வரவேற்ற தெல்லாம் சாதாரணமானதா?
தந்தை பெரியார் மறைந்த நிலையில், தந்தை பெரியார் ஒப்புக் கொண்டு போகாத திருவண்ணாமலையிலிருந்து தன் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் அன்னையார். ‘‘உறுதி மொழிப்’’ பொதுக் கூட்டங்களாக அவை அமைந்தன.
தந்தை பெரியார் மறைந்த ஓராண்டு நாளையொட்டி அவர்கள் நடத்திக் காட்டிய ‘இராவண லீலா’ (25.12.1974) ஒன்று போதுமே அவரின் ஆளுமையின் அபார சக்திக்கு!
நெருக்கடி நிலை காலம்! கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஓராண்டுக் காலம் மிசா கைதி.
இயக்கத்ைத நடத்த வேண்டும் – இயக்க ஏடான ‘விடுதலையை’ நாள்தோறும் நடத்த வேண்டும்; தணிக்கை என்னும் பார்ப்பன நாகம் ஒவ்வொரு நாளும் தனது சிகப்பு மை என்ற நஞ்சால் குத்தி குத்திக் கிழித்ததையும் எதிர் கொண்டு நடத்திக் காட்டிய அன்னையாரின் அந்த அஞ்சாமை என்னும் அரிமாப் பாய்ச்சலை இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது!
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்னும் யூகம் வளர்த்து, பெரியார் திடலுக்குள் ‘நுழைந்த வருமான வரித்துறை என்னும் வரிப்புலியின் சீற்றம் இன்னொரு பக்கம்!
கல்வி நிலையங்கள் நடப்புக்கு எந்த வகையிலும் சேதாரம் வந்து விடக் கூடாது என்பதில் கண்ணிமைக்காது காட்டிய அக்கறை! நாகம்மையார் இல்லக் குழந்தைகளை மடியிலும், தோளிலும் சுமந்து சீராட்டி வளர்த்த தாயுள்ளம்!
மிசா சிறையிலிடப்பட்ட கழகத் தோழர்களின் வீட்டுக்கெல்லாம் சென்று அவர்களின் குடும்ப நிலை கண்டு, தைரியம் சொல்லி வலது கை செய்ததை, இடது கை அறியாது செய்திட்ட உதவிகள் – இவற்றை எல்லாம் எடை போட்டுப் பார்த்தால் ‘அன்னை’ என்ற பதத்துக்கு அத்தனைத் தூய்மையான இலக்கணமாக வரலாற்றின் கண்முன் என்றும் ஒளிர்வார்கள்!
நெருக்கடி காலத்திலும் சென்னை பெரியார் திடலில் வானுயர்ந்த ஏழு மாடி கட்டடத்தை உருவாக்கியதெல்லாம் சாதாரணமானதல்ல!
அவர்கள் மறைந்தாலும் அய்யா காலத்திலே அடையாளம் காட்டப்பட்ட, அன்னையாரால் உறுதி செய்யப்பட்ட நமது ஆசிரியர் தலைமையில் இயக்கம் வீறு கொண்டு செம்மாந்து நிற்கிறது.
காங்கிரசில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்காக போராடி, தோல்வி கண்டு, வெளியேறினார் தந்தை பெரியார்; அவர் காலத்தில் 49 விழுக்காட்டை வென்று காட்டினார். அவரின் தலையாய மாணவர் ஆசிரியர் மானமிகு தமிழர் தலைவராக மக்கள் மத்தியில் பரிணமித்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நிலைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ஒன்றிய அரசுத்துறைகளிலும் அனைத்திந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குக் கட்டியம் கூறிவிட்டார்.
பெரியார் உலகமயம், உலகம் பெரியார் மயம் என்ற திசை நோக்கி விசையை வேகப்படுத்துகிறார். அதன் சின்னமாக சிறு கனூரில் ‘பெரியார் உலகம்’ என்னும் உலகம் போற்றும் மாபெரும் அறிவுச் செழுமைப் பூத்துக் குலுங்கும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நினைவுப் புரத்தை உருவாக்கி வருகிறார்.
இதே நாளில் 1974இல் அன்னையார் தலைமையில் கழகம் எடுத்த உறுதிமொழியை ஒப்பிட்டுப் பாருங்கள் – சாதனையின் உயரம் என்னவென்று புரியும்!
நம் பயணம் முடிவதில்லை. தொடரும்!
வாழ்க பெரியார்! வாழ்க அன்னையார்!!