திருச்சி, ஜன.6 ‘‘கெட்டது நீங்கி நல்லது நடக்கும், தனது தொழில் வளர்ச்சி அடையும்’’ என்ற நம்பிக்கையில் மாந்திரீகத்தை நம்பிச் சென்ற அடகுக் கடை உரிமையாளர் ஒருவர் ஏமாற்றப்பட்டு, தாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
அடகுக் கடை உரிமையாளர் தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த தன்னை மாந்திரீகர் என கூறிக்கொள்ளும் சிவா என்பவரை சமூக ஊடகம் மூலம் தொடர்புகொண்டதாகக் காவல்துறை கூறுகிறது.
தொழில் வளர்ச்சிக்காகச் சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் எனத் தியாகராஜனை நம்ப வைத்த சிவா, அவரிடம் இருந்து 16 லட்ச ரூபாயை பறித்துள்ளார்.
கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறாததால், தியாகராஜன் தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.
பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி தியாகராஜனை சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சிவா அழைத்துள்ளார்.
தியாகராஜன், தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். அங்கிருந்த சிவா மற்றும் அவரது கூட்டாளிகள் தியாகராஜன் மற்றும் அவரது நண்பர்களைத் தாக்கி ரூ.3.7 லட்சம் மற்றும் மூன்று சவரன் செயினை பறித்துச் சென்றனர்.
தியாகராஜன் அளித்த புகாரின் பெயரில், குரோம்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலரான குணசேகரன் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிவாவைத் தேடி வருகின்றனர்.