தோழர் நல்லகண்ணு புத்தகத்தை வெளியிட்டார்!
நூற்றாண்டு காணும் தோழர் நல்லகண்ணு அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்தும் பாராட்டும்
சென்னை. ஜன.5, நூற்றாண்டு காணும் தோழர் நல்லகண்ணு அவர்கள் வீட்டில் “சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரி கமே” புத்தகம் எளிமையான முறையில் வெளியிடப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
பிறந்த நாள் வாழ்த்து
நூற்றாண்டு காணும் மூத்த தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 4.1.2025 அன்று மாலை 6:00 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சென்னை நந்தனத்திலுள்ள தோழர் நல்லகண்ணு அவர்களின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது, “சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே” புத்தகம் எளிமையான முறையில் வெளியிடப்பட்டது. புத்தகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு வெளியிட்டார். இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.பெருமாள் மற்றும் பூபதி ஆகியோர் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
எளிமையின் சின்னம்
நூல் வெளியீட்டுக்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ”எளிமையின் சின்னமாக இருக்கின்ற நம்முடைய தோழர் நல்லகண்ணு அவர்கள் வாழ்நாளெல்லாம் போராட்டக் களத்தில் நின்று வென்றவர். பொதுவாழ்க்கையில் எளிமையாக இருந்து நிரந்தர புகழை ஈட்டுவதில் எடுத்துக்காட்டாக திகழ்பவர்” என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து தோழர் நல்லகண்ணு அவர்கள், “நாட்டில் நிலவுகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிற வகையில் பணியாற்றக்கூடிய திறன் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உண்டு. அந்த வகையில் அவர் இங்கு வந்து வாழ்த்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கழகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழர் தலைவர் வாழ்த்து
முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், நூற்றாண்டு காணும் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு வெண்ணிற பூந்துவாலைத் துண்டு அணிவித்து வாழ்த்தியதுடன், “உலகத் தலைவர் பெரியார் – 10 ஆம் தொகுதி”, ”பகுத்தறிவாளர் நாள்குறிப்பு – 2025” ஆகியவற்றை அளித்து மகிழ்ந்தார். தோழர் நல்லகண்ணு அவர்களும் கழகத் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தியதோடு, தந்தை பெரியார் சிலையையும் நினைவுப் பரிசாகக் கொடுத்தார். சற்று நேரம் உரையாடிவிட்டு விடைபெற்ற போது, வாசல் வரை வந்து திராவிடர் கழகத் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரை தோழர் நல்ல கண்ணு அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
கூடுதல் தரவுகளுடன்…
நேற்று வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் கடந்த மாதம் 24.09.2024 அன்று நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற, ”சிந்து சமவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா”வில், தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கண்காணிப்பாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா, ஒடிசா மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகராக ஆர்.பாலகிருஷ்ணன் IAS, (ஓய்வு) இருந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் ஆகியோர் ஆற்றிய ஆய்வுரைகள், கூடுதல் தரவுகளுடன் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.