காமராசரிடம், ‘‘முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்- வருகின்ற எதிர்ப்புகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று அன்று கூறியவர் தந்தை பெரியார்!
மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு ஆட்சியில் இருக்கின்றவர்களைப் பாதுகாப்பதுதான் திராவிடர் கழகத்தின் பணி!
விருதுநகர், ஜூலை 20 நீங்கள் முதலமைச்சராக இருங்கள்; எதிர்ப்புகள் வரும்; அந்த எதிர்ப்புகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அன்று கூறியவர்தான் தந்தை பெரியார். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் பணி அதுதான். மக்கள் நலக் கண் ணோட்டத்தோடு ஆட்சியில் இருக்கின்றவர் களைப் பாதுகாப்பதுதான் எங்களுடைய வேலை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
விருதுநகரில் முப்பெரும் விழா!
கடந்த 1.7.2023 அன்று மாலை விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், விருதுநகர் மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
நான்காண்டுகளுக்கு முன்பு பகுத்தறிவாளர் கழக பொன்விழா!
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இதே விருதுநகர் மாநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா என்ற சிறப் பான நிகழ்ச்சியை நாங்கள் நடத்தும்பொழுது, இங்கே இடம் கிடைக்காமல் ஊருக்கு வெளியே சிறப்பான மாநாடாக நடைபெற்றது.
இதே இடத்தில் தந்தை பெரியார் அவர்களோடு நானும் பலமுறை இந்த இடத்தில் பேசியிருக்கின்றோம். வழக்கமான இடம்தான் – அப்படிப்பட்ட இந்த சிறப்பான கூட்டத்தில் பங்கேற்று இருக்கின்ற அத்துணை பேருக் கும் வணக்கத்தினைத் தெரிவித்து, தலைமை ஏற்று இருக்கின்ற விருதுநகர் மாவட்டத் தலைவர் மானமிகு தோழர் நல்லதம்பி அவர்களே, வரவேற்புரையாற்றிய விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆதவன் அவர்களே,
தொடக்கவுரையாற்றிய தலைமைக் கழக அமைப் பாளர் இல.திருப்பதி அவர்களே, திராவிடர் கழகப் பொருளாளர் தோழர் வீ.குமரேசன் அவர்களே, நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருமைத் தோழர் லிங்கம் அவர்களே,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் கே.அர்ச்சுனன் அவர்களே,
விருதுநகர் நகர சி.பி.அய். செயலாளர் முத்துக்குமார் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தோழர் செல்வம் அவர்களே,
திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகிய நண்பர் களே, திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் தோழர் இராஜேஷ் அவர்களே,
கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்களே, மாவட்டக் காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யாசாமி அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் இராமர் அவர்களே, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் முருகன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் சிவகாசி கணேசன் அவர்களே,
பொதுக்குழு உறுப்பினர் தோழர் வானவில் மணி அவர்களே, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் ஆனந்தம் அவர்களே, பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் அவர் களே, திராவிடர் கழகப் பொறுப்பாளர்களே, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களே, பெரியோர்களே, தாய்மார் களே, சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு மகிழ்ச்சியையும்,
உற்சாகத்தையும் தருகிறது
நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த இடத்தில் பேசக் கூடிய, உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய வாய்ப்பு – இன்னும் எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத் தையும் தருகிறது.
காரணம் என்னவென்று சொன்னால், முப்பெரும் விழா – மூன்று விழாக்களையொட்டி பிரச்சார பொதுக் கூட்ட நிகழ்ச்சியாகும் இது.
ஒன்று, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-
இரண்டு, பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் பெருந் தலைவர் காமராசர் அவர்களுடைய 121 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா-
மூன்று, வைக்கம் நூற்றாண்டு விழாவாகும்!
காமராசர் அவர்கள் எப்படி கல்விப் புரட்சி செய்தார் என்பதை திராவிடர் இயக்கம், தந்தை பெரியார் அவர் களானாலும், அண்ணா அவர்களானாலும், கலைஞர் அவர்களானாலும் மறக்காமல், தங்களுடைய காலத்தில் காமராசர் செய்த கல்விப் பணிகள் போன்று செய்து, அந்தக் காலத்தில் மட்டும் அதன் பயன்கள் இருக்கக் கூடாது; அடுத்து வரக்கூடிய தலைமுறையினரும், மாணவர்களும் அந்தக் கல்வித் தொண்டை பெற்றுப் பயனடைய வழி செய்தார்கள். காமராசரின் கல்வித் தொண்டு இருக்கிறதே, அது மனுதர்மத்தினுடைய முது கெலும்பை முறித்த தொண்டாகும். ஏனென்றால், சூத் திரனுக்கு, பஞ்சமனுக்கு எதைக் கொடுத்தாலும் அறி வைக் கொடுக்கலாகாது; கல்வியைக் கொடுக்கலாகாது; கீழ்ஜாதிக்காரன் படிக்கக்கூடாது; பெண்கள் படிக்கக் கூடாது என்று இருந்த மனுதர்மத்தைக் குழிதோண்டிப் புதைத்த பெருந்தலைவர்தான் பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள்.
இராஜகோபாலாச்சாரியார் என்ன செய்தார் தெரியுமா? அரை நேரம் படிக்கவேண்டும்; மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழிலை செய்யவேண்டும் என்றார். இதற்குப் பெயர் குலக்கல்வித் திட்டமாகும்.
அந்தக் குலக்கல்வித் திட்டம், அன்றைக்குத் தந்தை பெரியாரால், திராவிடர் இயக்கத்தால், பேரறிஞர் அண்ணாவால், கலைஞர்களால், இந்த இயக்கத்தவர் களால், முற்போக்குச் சக்திகளால் கடுமை யாக எதிர்க் கப்பட்டு, பெரிய பெரிய போராட்டங்கள் நடைபெற்றன.
சட்டப்பேரவையில் குலக்கல்வியை எதிர்த்து வாக் களித்தார்கள். ஒரே ஒரு வாக்கு, இராஜகோபாலாச்சாரி யாருக்கு ஆதரவாகக் கிடைத்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக காமராசர் இருந்தார் அப்பொழுது.
இராஜகோபாலாச்சாரியார் செய்தது என்ன?
காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கோசல்ராம் போன்றவர்கள் குலக்கல்வித் திட்டத்தைக் கண்டித் தார்கள். இப்படி பல வகையில் இவ்வளவு பேர் கண்டித் தாலும், இராஜகோபாலாச்சாரியார் சட்டப்பேரவையில் என்ன சொன்னார் தெரியுமா?
பார்ப்பனியம் அன்றைக்கும், இன்றைக்கும், என் றைக்கும் தங்களிடம் ஆதிக்கம் கிடைத்தால், அந்த ஆதிக்கத்தை – நம்முடைய சமுதாயத்திற்கு, ஒடுக்கப் பட்ட சமுதாயத்திற்கு, பார்ப்பனரல்லாத திராவிட மக்கள் சமுதாயத்திற்கு நேர் எதிராகத்தான் பயன் படுத்தும் என்பதற்கு அடையாளம் – ‘‘சட்டப்பேரவையில் இவ்வளவு பேர் எதிர்த்தால் என்ன? எனக்குத் தோன்றி யதை நான் கொண்டு வந்திருக்கின்றேன்- குலக்கல்வித் திட்டத்தை. மாணவர்கள் அரை நேரம் படிக்கவேண்டும்; அரை நேரம் அப்பன் தொழிலை செய்யவேண்டும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
சிரைக்கின்றவர் பிள்ளை சிரைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்;
வெளுக்கின்றவர் பிள்ளை வெளுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மலம் எடுக்கின்றவர் பிள்ளை, மலம் எடுக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் படிக்க வேண்டும் என்பதுதான் அது.
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் யாரும் கேட்காத ஒரு கேள்வியைக் கேட்டார்.
‘‘சரி, அவரவர் குலத் தொழிலை செய்யவேண்டும் என்பதற்காகத்தானே குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அப்படியானால், பார்ப்பனர் களாகிய உங்களுடைய குலத்தொழில் வேதம் ஓதுவது தானே? அப்படித்தானே மனுதர்மத்தில் இருக்கிறது. வேதியர்க்கு அழகு வேதம் ஓதுவதுதானே? பிறகு உங் களுக்கு எதற்கு மெடிக்கல் காலேஜ்?” என்று கேட்டார்.
காமராசரை ஒழித்துக்கட்டவேண்டும் என்று பல திட்டங்களைப் போட்டனர். தந்தை பெரியார் அவர்கள், காமராசர் அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாவலராக இருந்தார்.
மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கினார்
தந்தை பெரியார்!
ஆச்சாரியாரைப் பார்த்து, தந்தை பெரியார் சொன்னார், ‘‘நீங்கள் பதவியை விட்டுப் போகவில்லையானால், அதைப்பற்றி கவலை யில்லை; இரண்டில் ஒன்று பார்க்கக்கூடிய அளவிற்கு, நாங்கள் தயாராக இருக்கிறோம்; மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கினார். சட்டமன்றத்தைப் பற்றி கவலைப்படாத ஆச்சாரியார், மக்கள் மன்றத்தை பெரியார் உருவாக்கியவுடன், ‘‘தனக்கு உடல்நிலை சரியில்லை” என்று சொல்லி பதவி விலகினார்.
அப்பொழுது காமராசர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபொழுது, அவர் ‘கிங் மேக்கர்’. யார் முதலமைச்சர் என்பதை நிர்ணயிக்கக் கூடியவர். அவர் பதவிக்கு ஆசைப்படாதவர்.
தந்தை பெரியாரிடம்
வரதராஜூலு நாயுடு கோரிக்கை
வரதராஜூலு நாயுடு, தந்தை பெரியாரை அழைத்து, ‘‘நான் சொன்னால், காமராசர் கேட்கமாட்டார்; நீங்கள் வந்து சொல்லுங்கள்” என்று சொன்னார்.
அன்றைய காலகட்டத்தில் காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
தமிழ்நாட்டு வரலாற்றின் திருப்புமுனை!
பச்சைத் தமிழர் காமராசரை, தந்தை பெரியார் வற்புறுத்தி, முதலமைச்சர் பதவியை ஏற்க சம்மதிக்க வைத்தார். காமராசர் முதலமைச்சராக வந்தார் என்பது தான் தமிழ்நாட்டு வரலாற்றின் திருப்புமுனையாகும்.
இந்த மண்ணுக்கு ஒரு பெரிய பெருமை உண்டு. இந்தியாவிற்கே இரண்டு பிரதமரைத் தேர்ந்தெடுத்த காமராசரை உருவாக்கிய மண் இந்த மண்.
திராவிட இயக்கம், வி.வி.இராமசாமி அவர்கள், வாலிபப் பெரியார் என்று இளைஞர்கள் மத்தியில் அழைக்கப்பட்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் – அவருடைய தந்தையார் ஏ.வி.பழனியப்பன் அவர்கள். இப்படி இந்த மண்ணுக்குப் பெரிய வரலாறு உண்டு.
தந்தை பெரியாருடைய தொலைநோக்கைப் பாருங் கள்; காமராசரிடம், அய்யா ‘‘நீங்கள்தான் முதலமைச்சராக வரவேண்டும்; வேறு யாரையும் தேடாதீர்கள்” என்று சொன்னார்.
‘‘அய்யா, நானா முதலமைச்சர்? வேண்டாம்” என்று சொன்னார் காமராசர்.
‘‘இல்லை, இல்லை. நீங்கள் முதலமைச்சராக இருங் கள்; எதிர்ப்புகள் வரும்; அந்த எதிர்ப்புகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார் தந்தை பெரியார் அவர்கள்.
நல் ஆட்சியில் இருக்கின்றவர்களைப் பாதுகாப்பதுதான்
திராவிடர் கழகத்தின் பணி!
இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் பணி அதுதான். நல் ஆட்சியில் இருக்கின்றவர்களைப் பாதுகாப்பதுதான் எங்களுடைய வேலை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், காமராசர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், முதல் உத்தரவு என்ன போட்டார் தெரியுமா?
நம்முடைய பிள்ளைகளுடைய படிப்பில் மண்ணைப் போட்ட குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.
தோழர்களே, இன்றைக்குப் பட்டதாரிகளாகவும், பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், நீதிபதி களாகவும் வந்திருக்கிறார்களே, அன்றைய குலக்கல்வித் திட்டத்தை பெரியார் எதிர்த்து, காமராசர் ஒழிக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் படிக்க இத்தனை கல்லூரிகள் வந்திருக்குமா?
நாமெல்லாம் சலவைத் தொழிலை செய்திருப்போம்; மலம் எடுக்கின்ற தொழிலை செய்திருப்போம்; சவரக் கத்தியை கையில் எடுத்திருப்போம். அவரவர் குலத்தொழிலை செய்துகொண்டிருப்போம்.
பெரியாருடைய சிறப்பு என்ன என்பதுபற்றி நிறைய பேருக்குத் தெரியாது. இன்றைக்குக்கூட திராவிட இயக்கத்திற்கு ஏற்பட்டு இருக்கின்ற சோதனைகளைத் தாண்ட முடியும். ஆனால், மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் திடீரென்று மயக்கமடைந்து விழுந்து விட்டால்கூட, உடனே கையைப் பிடித்து நாடி சரியாக துடிக்கிறதா? என்று பார்க்கிறார்கள். மூக்கின் அருகே கையை வைத்துப் பார்க்கிறார்கள், மூச்சு வருகிறதா? என்று.
பிராண வாயுவுக்கு நன்றி செலுத்துகின்றோமா?
சுவாசிப்பு என்பது மிகவும் முக்கியம். பிராண வாயு உள்ளே போய்விட்டு வருகிறது, அதுதான் நாம் உயிரோடு இருக்கிறோம்; யாருக்காவது அதற்கு நன்றி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் வந்திருக்கிறதா? அல்லது அதனுடைய முக்கியத்துவத்தையாவது புரிந்து கொண்டிருக்கின்றோமா?
பிராண வாயு இல்லை என்றால், மனிதன் உயிர் வாழ முடியாது என்கிற எண்ணமாவது நமக்கு வந்திருக்கிறதா, இதுவரையில்? நம்மை இயக்கிக் கொண்டிருப்பது அதுதான். எப்பொழுது அதனுடைய முக்கியத்துவம் தெரியும்? ஒரு மனிதனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் பொழுதுதான், அதனுடைய முக்கியத்துவம் தெரியும்.
மருத்துவமனைக்குச் சென்று, ஆக்சிஜன் வைக்க லாமா? அதை செய்யலாமா? இதைச் செய்யலாமா? என்று அந்த மனிதரைக் காப்பாற்ற முயற்சி செய் வோம்.
நாடு மூச்சுத் திணறல் ஏற்பட்டு திணறுகின்ற நேரத்தில் தடுத்து நிறுத்தி காப்பாற்றியவர்கள் இரண்டு பேர்!
அதுபோன்று குலக்கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட நேரத்தில், இந்த நாடு மூச்சுத் திணறல் ஏற்பட்டு திணறுகின்ற நேரத்தில், அதனைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றிய பெருமை இரண்டு பேரை சாரும்.
ஒன்று பெரியார்; இரண்டு பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர்.
பெரியார் அவர்கள் காமராசரை ஆதரித்ததால், இராஜகோபாலாச்சாரியாருக்கு ஆத்திரம் ஏற்பட்டு, ‘‘கருப்புக் காக்கையை கல்லால் அடி” என்று சொன்னார்.
நிலைகுலைந்து பேசிய இராஜகோபாலாச்சாரியார்
இந்த அளவிற்கு நிலைகுலைந்து இராஜகோபாலாச் சாரியார் பேசியது இல்லை. ஏனென்றால், அவ்வளவு பெரிய எதிர்ப்பு உருவானது என்றவுடன், அவருடைய நிலையை விட்டு அவர் தாழ்ந்து பேசினார்.
முதலமைச்சர் காமராசர் அவர்கள் கிராமப்புறங் களுக்குச் செல்லும்பொழுது, கிராமப்புற விவசாயிகள் அவரிடம் ‘‘அய்யா எங்கள் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் படிக்கவேண்டும்; அதற்காக இந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றனர்.
முதலமைச்சர் காமராசர் அவர்கள் அதிகாரிகளை அழைத்து, ‘‘இந்த ஊரில் பள்ளிக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றவுடன்,
அதிகாரி தலையை சொறிந்துகொண்டு நிற்கிறார்; ‘‘என்னய்யா, அதில் என்ன பிரச்சினை இருக்கிறது!” என்று சொல்லுங்கள் என்றார் முதலமைச்சர் காமராசர்.
கல்விச் சட்டத்தில் அய்ந்து மைல் தூரத்தில்தான் ஒரு பள்ளிக்கூடம் இருக்கவேண்டும்; அய்ந்து மைல்களுக் குள் இன்னொரு பள்ளிக்கூடம் வைக்கக் கூடாது என்று சொன்னார்கள்.
உடனே முதலமைச்சர் காமராசர் அவர்கள் சரி, சரியென்று விட்டுவிடவில்லை.
(தொடரும்)