மாநாடுகள் நடத்துவதில் திராவிடர் கழகம் எப்போதுமே தனித்துவமானது!
வி.சி.வில்வம்
2025 பிறந்திருக்கிறது! புத்தாண்டு தினத்தில் அறிக்கைத் தந்த தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில், திருச்சியில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது தேசிய மாநாடு மிக மிகச் சிறப்பான வரலாறு படைத்தது!’’, எனப் பொன்னெழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார்கள்! பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மாநாட்டு வெற்றியில் திளைத்திருக்கும் வேளையில், இந்த அறிக்கையின் பாராட்டு, இந்த டிசம்பர் குளிரில் மேலும் குளிரூட்டி இருக்கிறது!
மாநாடுகள் நடத்துவதில் திராவிடர் கழகம் எப்போதுமே தனித்துவ
மானது!
பல நோக்கங்கள்,
பல செயல் திட்டங்கள் இருக்கும்
ஏதோ கூட்டம், ஏதோ பொழுதுபோக்கு, ஏதோ தற்காலிக நோக்கம் என்பதல்ல திராவிடர் கழக மாநாடுகள்! ஒவ்வொரு மாநாட்டிற்கும் பல நோக்கங்கள் இருக்கும்; பல செயல் திட்டங்கள் இருக்கும்! அங்கே நிறைவேற்றப்படும் தீர்மானங்களைச் செயல்படுத்தும் வரை ஓயாத போராட்டம் இருக்கும்! இன்றைக்குத் ‘‘தமிழ்நாடு’’ என்கிற அடிப்படைக் கட்டுமானத்தின் ஒவ்வொரு தூண்களாக இருப்பவை திராவிடர் கழகத் தீர்மானங்களே!
அப்படியான திராவிடர் கழக மாநாடுகளைத் திராவிடர் கழகத் தோழர்கள் திட்டமிட்டுச் செய்வர். மாநாடு நடப்பது ஏதோ ஒரு இடத்தில் என்றாலும், தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்வர். ஓரிரு வாரங்களிலே மாநாட்டைப் பேசு பொருளாக மாற்றிவிடுவர். மாநில பொறுப்பாளர்களுக்கு மூச்சும், செயலும் மாநாடாக இருக்கும்! விடுதலையின் எழுத்தும், பேச்சும் மாநாடாக இருக்கும்! இவையெல்லாம் நாம் அறிந்ததே!
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்
இரா.தமிழ்ச்செல்வன்
இன்றைக்கும் பகுத்தறிவாளர் கழகமும் தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயக் கூடாதா என்கிற “கேள்விக்குறி” யோடு களம் இறங்கி, புத்தாண்டில் ஆசிரியரின் தனிச் சிறப்பான வாழ்த்துகளையும் பெற்றுவிட்டார்கள்! அண்மைக் காலமாக “பகுத்தறிவாளர் கழகம்” என்கிற வார்த்தையை ‘விடுதலை’யில் அடிக்கடி வாசித்திருப்போம். இதன் ஒட்டுமொத்த கொண்டாட்டங்களின் பின்னணி என்னவென்பதை அறிய பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்தோம்.
2022 இல், 60 இடங்களில் பயிற்சி வகுப்புகள்
‘‘வட சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளராக இருந்த என்னை, மாநில அமைப்புச் செயலாளர் ஆக்கி, பின்னர் 2021 இல் மாநிலத் தலைவராக ஆசிரியர் அறிவித்தார். அறிவித்த அடுத்த ஆண்டு 2022 இல், பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா நிறைவு ஆண்டை செஞ்சியில் நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதே 2022 இல் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொருட்டு 60 இடங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினோம்; இனியும் நடத்துவோம்!
60 கழக மாவட்டங்களில் பகுத்தறிவாளர் கழக அமைப்பு சிறப்பாக இருக்கிறது
அதேபோல நரேந்திர தபோல்கர் நினைவு நாளையொட்டி 2023 ஆம் ஆண்டு, ‘‘அறிவியல் மனப்பான்மைப் பரப்புரைக் கூட்டங்களைத் தமிழ்நாட்டில் 100 இடங்களில் நடத்தினோம். அதுமட்டுமின்றி பகுத்தறிவாளர் கழக அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்திலும், புதிய அமைப்பை உருவாக்கும் திட்டத்திலும் நானும், பொதுச் செயலாளர் வி.மோகன் அவர்களும் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறோம். இன்றைக்கு 60 கழக மாவட்டங்களில் அமைப்பு சிறப்பாக இருக்கிறது என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்!
அகில இந்திய பகுத்தறிவாளர் கழக மாநாட்டை, தமிழ்நாட்டில் நடத்தும் திட்டம் எப்படி வந்தது?
இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் 12 ஆவது மாநாடு
மாவட்டம் தோறும் பகுத்தறிவாளர் கழகக் கூட்டங்கள் நடைபெற்றாலும், மாநில அளவில் ஒருங்கிணைத்து செய்யும் முயற்சியாகவே மேற்கண்ட நிகழ்வுகளை செய்தோம். அதில் கணிசமான வெற்றியும் பெற்றோம்! அதேநேரம் பஞ்சாப் மாநிலம், பர்னாலா நகரில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் 12 ஆவது மாநாட்டிற்குத் தமிழ்நாட்டில் இருந்து 26 தோழர்கள் சென்றோம். அங்குதான் இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவராக நானும், துணைச் செயலாளராக வி.மோகன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
அந்த மாநாட்டில் 2024 ஆவது மாநாட்டை எங்கு நடத்துவது எனக் கேட்க, பல மாநிலத்தவர்களும் நாங்கள் நடத்துகிறோம் எனக் கூறினார்கள். அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆலோசனையின் பேரில், ‘‘தமிழ்நாட்டில் நாங்கள் நடத்துகிறோம்’’, என்றதும் உடனே அனைவரும் சம்மதித்துவிட்டனர். ‘‘தமிழ்நாட்டில் நடத்தினால் எங்களுக்கு மாறுபட்ட கருத்தே கிடையாது. நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள்’’, என அப்போதே வாழ்த்துக் கூறிவிட்டனர்.
மாநாட்டில் பங்கேற்பு ஆயிரம் பேருக்கு மேல்
அகில இந்திய மாநாடு என்றதும் உங்களின் திட்டமிடல் என்னவாக இருந்தது?
1000 பேரைத் திரட்டி விடுவது என்பதுதான் முதலாவதும், கடைசியுமான இலக்காக இருந்தது. அந்த வகையில், பதிவு செய்து வந்தவர்கள் மட்டும் 850 தோழர்கள். இதில் வெளி மாநிலத்தில் இருந்து 300, தமிழ்நாட்டில் இருந்து 550, உள்ளூர் தோழர்கள் மற்றும் தன்னார்வலர்களைச் சேர்த்து 1000 பேரைத் தாண்டிவிட்டோம் என்பதே மகிழ்ச்சிக்குரிய செய்தி! பொதுவாக மற்ற மாநிலங்களில் நடைபெற்ற அகில இந்திய மாநாடுகளில் 400 பேர் தாண்டியதில்லை என்றே தோழர்கள் கூறினார்கள்.
ஆக 1000 பேர் எனத் திட்டமிடும் போது, அதற்குரிய பொருளாதாரம், வருபவர்களுக்கான ஏற்பாடுகள், நிகழ்ச்சி நிரல் என மூன்றையும் முடுக்கிவிட்டோம். பதிவுக்குழு, வரவேற்புக் குழு, தங்குமிடம், அரங்க அமைப்பு, உணவு ஏற்பாடு, மேடை நிர்வாகம், கலை நிகழ்ச்சிகள், விருந்தோம்பல், பத்திரிகை செய்திகள் எனத் தனித்தனியாகத் திட்டமிட்டோம்.
இதுதவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மற்றும் மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டோம். அந்த வகையில் இந்த மாநாட்டிற்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராட்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கருநாடகம், கேரளா, கோவா, குஜராத், இமாச்சல்பிரதேசம், அசாம், மத்தியப்பிரதேசம் ஆகிய 16 மாநிலங்களில் இருந்து 300 தோழர்கள் திரண்டனர். இதே டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மகாராட்டிரா மாநிலத்தில் நரேந்திர தபோல்கர் அமைப்பின் மாநாடும் நடைபெற்றது. அதேபோல விஜயவாடா பகுதியிலும் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. இந்தத் தேதிகள் குறுக்கிடாமல் இருந்தால், இன்னும் பல தோழர்கள் வந்திருப்பார்கள்.
தோழர்களோடு தொடர்ந்து
தொடர்பில் இருப்பதும் மிக முக்கியமானது
இந்த வெற்றிக்கான காரணமாக நீங்கள் பார்ப்பது எதை?
தோழர்கள் சந்திப்புதான்! தமிழ்நாடு முழுவதும் போனோம்! நான் 20 கழக மாவட்டங்கள், வி.மோகன் 17 மாவட்டம், ஆ.வெங்கடேசன் 10, வா.தமிழ் பிரபாகரன் 13 என 60 கழக மாவட்டங்களுக்கும் சென்றோம். தோழர்களை அவ்வப்போது நேரில் சந்திப்பதும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் மிக முக்கியமானது. செஞ்சி மாநாடு உள்ளிட்ட தமிழ்நாடு தழுவிய பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகள் வெற்றி பெற இதுவே காரணமாக அமைந்தது!
மாநாடு தந்த மனநிறைவு என்ன?
‘‘இந்தியாவில் பகுத்தறிவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்கள் பெரியாரையும், ஆசிரியரையும் இவ்வளவு தூரம் உள்வாங்கி இருப்பது மேலும் சிறப்பு! ஆசிரியர் குறித்து பிற மாநிலத் தோழர்கள் பேசியது எல்லாம் வியப்பின் உச்சம்! வரலாறு அதைப் பதிவு செய்யும்! அதேபோல தெலங்கானாவில் உள்ள மானவ விகாச வேதிகா என்கிற அமைப்பில் உள்ளவர் தம் மகனுக்கு ‘‘வீரமணி’’ எனப் பெயர் சூட்டியுள்ளார். ஆசிரியர் புத்தகங்களைப் படித்ததன் விளைவு என்று அவர் கூறினார்.
பெரியாரை இன்னும் கூடுதலாகக் கொண்டு சேர்த்திருக்கிறோம்!
மேலும் திராவிடர் கழக நூல்களை மொழிபெயர்ப்பதில் அவர்களின் ஆர்வம் கூடியிருக்கிறது. அதேநேரம் அவரவர் மொழிகளிலும் பகுத்தறிவு நூல்களை எழுதி வருகிறார்கள். இந்தியா முழுக்கவுள்ள பகுத்தறிவாளர்களுக்குப் பெரியாரை இன்னும் கூடுதலாகத் கொண்டு சேர்த்த வகையில், இந்த மாநாடு எங்களுக்குப் பெரும் நிறைவைத் தந்துள்ளது’’, எனப் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் கூறினார்.
இந்த மாநாட்டு வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர்களுக்கும் அவர் தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன்
2021 ஆம் ஆண்டில் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற வி.மோகனிடம் பேசியபோது, ‘‘இந்த மாநாட்டை சென்னையில் வைத்துக் கொள்ளலாமே, அங்கு விமான நிலையம், தொடர்வண்டி வசதி, தங்குமிடம் எல்லாம் வாய்ப்பாக இருக்கிறதே என எண்ணினோம். ஆசிரியர் சொன்னார்கள், ‘‘நீங்கள் சொல்கிற அனைத்தும் திருச்சியிலும் இருக்கிறது; கூடுதலாகப் ‘பெரியார் உலகம்’ அங்குதான் இருக்கிறது’’, என்றார்கள்.
உடனே திட்டமிடலை தொடங்கினோம். தமிழ்நாடு குறித்த பெரிய எதிர்பார்ப்பு இந்தியாவில் இருக்கிறது. இது பெரியார் மண் என்பதை அவர்களும் கூறுகிறார்கள். அதனை மேலும் வலிமைப்படுத்த தமிழ்நாடு முழுவதும் பயணம் சென்றோம். மாநாடு நடத்துவது ஒருபுறம், அதேநேரம் பகுத்தறிவாளர் கழகத்தை இன்னும் கூடுதலாகக் கட்டமைக்க வேண்டும் என்று தோழர்களிடம் பேசினோம். இப்போது கூட வேலை செய்யாவிட்டால், அடுத்த தலைமுறைக்கு நாம் குற்றம் செய்தவர் ஆவோம் என்றெல்லாம் நம் கவலையைப் பகிர்ந்து கொண்டோம். தோழர்களும் புரிந்து கொண்டார்கள்.
அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நம்மிடம் அதிகம் எதிர்பார்த்தார்கள். அதை நாம் நிறைவேற்றியும் கொடுத்துள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் பகுத்தறிவாளர் கழகம், பெண்ணுரிமை, நாத்திகம், சுயசிந்தனையாளர்கள் மாநாடு என ஆசிரியர் தலைப்புக் கொடுத்தார்கள். மற்ற மாநிலங்களில் இது தனித்தனியாக இருக்கும். தமிழ்நாட்டில் இவையனைத்தும் ஒருங்கே இருப்பதன் அடையாளமாக இப்படி எழுதினார்கள்!
2022 – பஞ்சாப் மாநாட்டில் 600 ரூபாய் பதிவுக் கட்டணம். நாம் 100 ரூபாய் சேர்த்து 700 அறிவித்தோம். நல்ல வரவேற்பு இருந்தது. மாநாடு சிறப்பாக முடிந்துவிட்டது. இது ஒரு வேலைத் திட்டம், அவ்வளவுதான்! மாவட்ட ரீதியாக வருகை தந்தவர்கள், உழைத்தவர்கள் பட்டியல் நம்மிடம் இருக்கிறது. அவர்களுக்கு நன்றி கூறவும், வராதவர்களின் தேவைகளைக் கவனத்தில் கொள்ளவும் மீண்டும் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர
இருக்கிறோம்!
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு நன்றி!
அதுமட்டுமின்றி எங்களுக்கு அடுத்து உருவாக வேண்டியவர்களையும் நாங்கள் தயார் செய்து வருகிறோம். அதற்கு முன்னோட்டமாக இந்த மாநாட்டில் கூட இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம்! இந்த மாநாட்டின் வெற்றிக்குப் பெரும் பலமாக இருந்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என வி.மோகன் தெரிவித்தார்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன்
பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆ.வெங்கடேசன் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, ‘‘முதலில் மாநிலப் பொறுப்பாளர்கள் வெளிப்படையாகப் பேசிக் கொண்டோம். ‘‘அகில இந்திய மாநாடா?’’ என்கிற தயக்கம் இருந்த போது, ‘‘அதெல்லாம் சிறப்பாக நடத்திவிடுவோம்’’, எனத் தமிழ்ச்செல்வன் முடுக்கிவிட்டார். பிறகு திட்டமிடல், கூட்டத்தை வரவழைக்க ஏற்பாடு எனப் பணிகள் தீவிரம் அடைந்தன. புயல், மழை என அச்சுறுத்திய நேரத்திலும், நான் 10 மாவட்டங்களுக்குப் போய் வந்தேன்.
வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழ்நாட்டை மறக்கவே கூடாது!
‘‘முடிவு செய்துவிட்டால் பின் வாங்கக் கூடாது, செய்து முடித்து விட வேண்டும்’’ என்கிற எண்ணம் அதிகமானது. இன்றைக்கு ஒரு வேலையைக் கொடுத்தால், அன்றைக்கே நான் முடித்துவிடுவேன். தினமும் காலை 8.30 மணிக்கு நான் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் பேச வேண்டும். இதுதான் எனக்கான செயல் திட்டம். இதுதவிர மாநிலச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர், செயலாளர்கள், அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கப் பொறுப்பாளர்கள் என அனைவரோடும் இணைந்து திட்டமிட்ட காணொலிக் கூட்டங்கள் நடந்தன. அகில இந்திய அளவில் வருகிறவர்கள், திரும்பும் போது தமிழ்நாட்டை மறக்கவே கூடாது என்கிற உத்வேகம் எங்களுக்கு இருந்தது. அதனைச் செய்து முடித்திருக்கிறோம் என நம்புகிறோம்’’, என்றார் ஆ.வெங்கடேசன்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வா.தமிழ்பிரபாகரன்
மற்றொரு பொதுச் செயலாளரான வா.தமிழ் பிரபாகரன் கூறும்போது, ‘‘பல்வேறு பணிகளில் நான் ஈடுபட்டிருந்தாலும், மாநாடு என்பது எனக்குப் புது அறிமுகம். 13 மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்தேன். பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழகத் தோழர்களின் அன்பு நெகிழ்ச்சியாக இருந்தது. சில ஊர்களில் குடும்பம், குடும்பமாக வந்திருந்தார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு இது நல்ல பயிற்சியாக இருந்தது.
மாநாட்டிற்கு 3 நாட்கள் முன்பே திருச்சி சென்றுவிட்டேன். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நமது தோழர்கள் வந்திருந்தனர். உணவு ஏற்பாடு, தங்குமிடம் குறித்து எந்தக் குறையும் அவர்கள் கூறவில்லை. கூடுதலோ, குறைவோ ஏற்றுக் கொண்டார்கள். மாநாடு முடிந்த பிறகு பெரும்பாலான தோழர்களிடம் பேசினேன். பெரியார் நூற்றாண்டு வளாக ஊழியர்களின் பங்கும் மிகச் சிறப்பானது.
எந்தப் பணி கொடுத்தாலும் செய்துவிடலாம் என்கிற தைரியமும் வந்துள்ளது!
அண்மைக் காலமாகப் பகுத்தறிவாளர் கழகத்தின் செய்திகளை ‘விடுதலை’யில் அதிகமாகப் பார்க்கிற போது, எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. அதுவும் ஆசிரியர் அவர்கள் அறிக்கையில் பாராட்டி எழுதியதும், தோழர்கள் பலர் பாராட்டிய வண்ணம் உள்ளனர். தோழர்களுடன் தொடர்ந்து இணக்கமாக இருக்க வேண்டும் என்பதும், இனி எந்தப் பணி கொடுத்தாலும் செய்துவிடலாம் என்கிற தைரியமும் வந்துள்ளது’’, என வா.தமிழ் பிரபாகரன் கூறினார்.
பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் என்றாலும், அகில இந்திய பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்குப் பெரும் பணியைச் செய்த பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம் அவர்களிடம் பேசியபோது, ‘‘வருகைப் பதிவு எனக்குக் கொடுக்கப்பட்டது. அகில இந்திய அளவில் வரக்கூடிய பதிவுகள், தமிழ்நாட்டுப் பதிவுகள், அதற்குரிய இணைய விண்ணப்பப் படிவங்கள் என அனைத்தையும் செய்வது எனது பணி. இதுதொடர்பான இடர்ப்பாடுகள், அய்யங்கள் என அகில இந்திய அளவில் இருந்து தொலைப்பேசிகள் வந்த வண்ணம் இருந்தன.
தமிழ்நாட்டிற்கு வந்த தோழர்களை நிறைவாக அனுப்பினோம் என்கிற உணர்வு ஏற்பட்டது
இதுதவிர தங்குமிடம் ஏற்பாடு, உணவு, போக்குவரத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்தேன். அந்த வகையில் 850 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் வெளி மாநிலம் 300, தமிழ்நாடு 550. வெளி மாநிலத்தில் இருந்து வந்த 200 பேருக்கும், எந்தச் சிரமமும் இன்றி தங்குமிட ஏற்பாடுகளைச் செய்தோம். மாநாடு 28, 29 என்றாலும், மாநாட்டின் முந்தைய நாள் இரவு தொடங்கி, பிந்தைய நாள் காலை வரை நாம் உணவும், தங்குமிடமும் உறுதி செய்திருந்தோம். தமிழ்நாட்டிற்கு வந்த தோழர்களை நிறைவாக அனுப்பினோம் என்கிற உணர்வு ஏற்பட்டது.
அவர்களின் நட்பு கிடைத்ததும் மகிழ்ச்சி!
அதேநேரத்தில் நிறைவு நாள் பொதுக் கூட்ட மேடையிலும், ஆசிரியரின் புத்தாண்டு அறிக்கையிலும் மாநாட்டைக் குறித்தும், அனைவரின் உழைப்பைப் பாராட்டியும் எழுதியிருப்பது பெரும் அங்கீகாரம். ஆசிரியரின் நெஞ்சத்தில் இடம் பிடித்துவிட்டோம் என்பதே எங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது’’ எனப் பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம் கூறினார்.
இந்த மாபெரும் மாநாட்டின் சிறப்பிற்குப் பகுத்தறிவாளர் கழகத்தின் எண்ணற்ற பொறுப்பாளர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பணிபுரியும் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், தன்னார்வலர்களாக செயல்பட்ட மாணவச் செல்வங்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பணியாளர்கள், விடுதி ஒருங்கிணைப்பாளர், அதன் ஊழியர்கள், சமையல் கலைஞர்கள், ஓட்டுநர்கள், காவலாளிகள் என ஒவ்வொருவரும் நினைவு கூறத்தக்கவர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு வெற்றியில் அவர்களின் பங்கும் உண்டு என்கிற வகையில் பகுத்தறிவாளர் கழகம் மேலும் பல சாதனைகளைப் புரிய, புத்தாண்டில் வாழ்த்துவோம்!