தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் ஊக்கத்தொகை யார் யாருக்கு கிடைக்கும்? அரசாணை வெளியீடு

viduthalai
2 Min Read

சென்னை,ஜன4.- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு, 2023-2024ஆம் ஆண்டிற்கான பொங்கல் ஊக்கத் தொகை மற்றும் பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதில், ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

யார் யாருக்கு?

இந்த நிலையில் யார் யாருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதற்கான அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களாக இருந்து, குறிப்பிட்ட ஊதிய விகிதங்களின்படி ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும்; மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், அதாவது 1.10.2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள்,
சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள் அல்லது துப்புரவுப் பணியாளர்கள் அல்லது துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உள்பட மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஒட்டு மொத்த பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500 வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இந்த அரசாணை தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இந்தப் பொங்கல் பரிசுத்தொகை, 2.1.2025 நாளன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

சுதந்திரப் போராட்ட வீரர்கள்

உலேமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவித் தொகை பெறுபவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் சிறந்த மனிதர்களுக்கான சமூக உதவித் தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள், பணியில் இருக்கும் பணியாளர்களுக்குப் பொருந்தக்கூடிய தற்காலிக மிகை ஊதியம் (தற்காலிக போனஸ்) பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்,
‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு பதவிகளில் இருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் உள்பட ஓய்வூதிய முன்னோடித் திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் – குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்தப் பொங்கல் பரிசுத் தொகை அரசு செலவில் பணவிடை மூலம் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *