ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1: குஜராத் மாநிலம் பாபு நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது ஹிந்துத்துவவாதிகள் அவ்விழாவுக்கான அலங்கார ஏற்பாடுகளை சிதைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது எதைக் காட்டுகிறது?

– ப.மலர்விழி, கோவை

பதில் 1: மதவெறியின் கோரத்தாண்டவம் குஜராத்தில் எவ்வளவு என்பதுடன், ஹிந்துத்துவாவின் அரசியல் பரிசோதனை ஆளுமைக் கூடமாகவும் குஜராத் திகழ்கிறது. இதுதான் “குஜராத் மாடல்” என்பதை உலகம் புரிந்து வருகிறது! வளர்ச்சி மைனஸ் – ஜீரோவை நோக்கியே போகும் பரிதாப நிலையில்!

– – – – –

கேள்வி 2: ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம் – தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ‘கலைஞர் கைவினைத் திட்டம்’ வேறுபாட்டிலிருந்து புலப்படுகின்ற அத்திட்டங்களின் அடிப்படை நோக்கம் என்ன?

– அ.கி.வெங்கட்டராசு, பெரம்பூர்

பதில் 2: ஒன்றிய அரசின் முந்தைய விஸ்வகர்மா திட்டம் குலதர்மக் கல்வியின் புதுப்பதிப்பு. நவீனப்படுத்திய தேன்தடவப்பட்ட விஷ உருண்டை. தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டம், கைவினைஞர் தன்னறிவு, தனி ஆற்றல் பெருக்கி வாழ வைக்கும் கலை மிளிரும் திட்டம். இதில் வினைத் திட்டமே முக்கியம், ஜாதி – வர்ணத் தொழிலுக்கு புத்துயிர் ஊட்டுவதல்ல! ஒன்று சுண்ணாம்பு; மாநிலத் திட்டம் வெண்ணைய். புரிகிறதா?

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 3: வெள்ளையர்களால் ஸநாதனத்திற்கு இழுக்கு ஏற்பட்டது என்று சங்கிகள் கூறிவரும் நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவில் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததே?

– அ.மணிவண்ணன், வேலூர்

பதில் 3: எந்த ஆகமத்தில் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவில் கோயில் நடை திறந்து பக்திக் கடை வசூல் நடத்தும்படிச் சொல்லப்பட்டுள்ளது? ஸநாதனம் பாடும் சங்கிகள் சொல்வார்களா?

– – – – –

கேள்வி 4: உடல் உறுப்பு கொடையில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பது குறித்து தங்கள் கருத்து?

– வே.ஏகலைவன், ஓசூர்

பதில் 4: கடவுளை மற; மனிதனை நினை! தத்துவ விளக்கம். சுயமரியாதை வாழ்வின் வெளிச்சம்!

– – – – –

கேள்வி 5: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் மோதல் போக்கே முதன்மைக் காரணம் அல்லவா?

– க.காளிதாசன், காஞ்சி

பதில் 5: சரியாகச் சொன்னீர். முழுப் பொறுப்பேற்க வேண்டும். எல்லாம் ‘நானே’ என்ற அதன் வேந்தர் எங்கே போனார்? அதை ஏன் மூடி மறைக்கிறார்கள்? துணை வேந்தர் நியமனம் இல்லாததுதானே மூலகாரணம்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 6: கேரள மாநிலத்தை ‘குட்டி பாகிஸ்தான்’ என்கிறாரே ஒரு பா.ஜ.க. அமைச்சர்?

– அ.மெய்யறிவு, மதுரை

பதில் 6: தேசத்துரோக வழக்கு இவர்கள் மீது பாய்வதுதானே நியாயம்? இப்போது புரிகிறதா யார் பிரிவினைவாதிகள் என்று?

– – – – –

கேள்வி 7: பா.ஜ.க. ஆட்சியில் இந்நாட்டின் விளிம்பு நிலை மக்களின் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றனவே?

– ச.வேம்புலி, திண்டிவனம்

பதில் 7: அதென்ன விளிம்பு நிலை என்ற மறைமுகமை. தாழ்த்தப்பட்ட சமூகத்து சகோதரர்கள், பழங்குடி சகோதரர்கள் மீது என்பதை விளங்கும்படி கூறுங்கள். இதை மறைத்து – மலையை மறைத்து அணுவை அகண்டமாக்கி – இதுபோன்ற நேரங்களில் முறையாக உடனே நடவடிக்கை திராவிட மாடல் அரசால் பாய்ச்சப்பட்டதை மறைத்துக் கூறுவேோரின் இரட்டை வேடத்தை எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் விளக்கிட வேகமாக முன்வரவேண்டும்.

– – – – –

கேள்வி 8: விருதுகள் ஒரு மனிதனின் சாதனைக்கான மன மகிழ்ச்சிக்கு மட்டுமா? அதையும் தாண்டி மனிதனை சிறப்பான மனிதனாக்கும் நல்லூக்கியா?

– ஓவியன், அரும்பாக்கம்

பதில் 8: அவரைப் போன்ற ‘தொண்டறங்கள்’ நாட்டில் வளர வேண்டும் – பெருக வேண்டும் என்பதற்காகத்தான். தனிமனிதரை ஊக்கப்படுத்துவது இரண்டாவதுதான்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 9: கடந்த பத்து ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் நாடு முழுவதும் (தமிழ்நாடு தவிர) இடை நிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தங்கள் கருத்து என்ன?

– தி.வேலுச்சாமி, பழனி

பதில் 9: அங்குள்ள கல்விச் சாதனை அது! அங்கே மனுதர்மம் வளருது! இங்கே தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சமதர்மம் வளருது! அதன் சாட்சியஙகள் அவை இரண்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *