இந்திய வரலாற்றில், சித்தார்த்தராம் கவுதம புத்தருக்கு பின், பார்ப்பனியம் எனும் நச்சு மரத்தை, அழிப்பதற்கு கையில் வாளேந்திய,மாபெரும் இரு தலைவர்கள் அறிவாசன் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரும்.
இந்தியாவின் கொடுங்கோன்மைத் தத்துவமான பார்ப்பனியத்தை எதிர்த்து தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரையில், பதில் இல்லை.
“சக மனிதனை மனிதனாக மதிக்க மறுக்கும் ஒரு தத்துவத்தை, மதம் என்று ஏற்றுக் கொள்வது மனிதத்தன்மையா?” என்ற அவரின் கேள்விக்கு இன்றுவரையிலும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
இதனைப் போன்ற கேள்விகளை எழுப்புவதில் மட்டும் நாயகர் அல்ல தந்தை பெரியார்.
தன் மீது வீசப்பட்ட அத்தனை கேள்விக்கணைகளுக்கும் மிகச் சரியாக பதிலடி கொடுப்பதிலும் நாயகர் தந்தை பெரியாரே!
தந்தை பெரியார் அவர்கள் கேள்விகளுக்கு தனித்துவமான முறையில் பதில் அளித்துள்ள முறையை இங்கே பதிவிடுகிறோம்.
கேள்வி : பெண்களுக்கு உரிமைகள் கொடுக்க வேண்டும், கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே அவர்களுக்கு என்னென்ன உரிமைகள் கொடுக்க வேண்டும்?
தந்தை பெரியார்: ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளதோ அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
கேள்வி: கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லை! என்று காலமெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறீர்களே, ஒரு நாள் கடவுள் திடீரென உங்கள் முன் தோன்றினால் என்ன சொல்வீர்கள் ?
தந்தை பெரியார்: கடவுள் இருக்கு என்று சொல்லி விடுவேன் அவ்வளவுதான்.
கேள்வி: ஹிந்தியை திணிக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடுகிறீர்கள். நீங்கள் எவ்வளவுதான் தீவிரமாக தொடர்ந்து போராடினாலும், ஒரு நாள் ஹிந்தியை திணிக்கத்தானே போகிறார்கள்?
தந்தை பெரியார்: மனிதர்களுக்கு சாவு என்றாவது ஒரு நாள் வரும். அதற்காக நாம் இப்பொழுதே கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்ய வேண்டுமா?
கேள்வி: சுயநலம், பொதுநலம் இவற்றை இரண்டையும் விளக்குங்கள் அய்யா?
தந்தை பெரியார்: மழை பொழிவது பொதுநலம். குடை பிடிப்பது சுயநலம்.
கேள்வி: மதச்சார்பின்மை என்றால் எல்லா மதங்களையும் சமமாக பாவிப்பது என்று சொல்கிறார்களே அய்யா, தங்களது விளக்கம் என்ன?
தந்தை பெரியார்: ஒரு பெண் கன்னித்தன்மை உடையவள் என்றால், அவள் எந்த ஆணையும் சேராதவள் என்று அர்த்தம். அதற்குப் பதிலாக இவள் எல்லா ஆண்களையும் சமமாக பாவிப்பவள் என்று சொன்னால் எப்படியோ அதைப் போலத்தான் மதச்சார்பின்மை என்றால் எல்லா மதங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று சொல்வதாகும். எந்த மதத்தையும் சாராமல் இருப்பது தான் மதச்சார்பின்மை.
கேள்வி: தமிழ், தாய் மொழியாக உள்ள தமிழ்நாட்டில், ஆங்கிலத்தை படியுங்கள் என்று சொல்கிறீர்களே, நீங்கள் என்ன ஆங்கிலேயருக்கு பிறந்தவரா?
தந்தை பெரியார்: ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த ஆகாய விமானத்தில் பயணம் செய்கிறீர்கள். ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த ரயில் வண்டியில் பயணம் செய்கிறீர்கள். ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த தொலைபேசியில் பேசுகிறீர்கள். நீங்கள் ஆங்கிலேயர்களுக்கு பிறந்தவர்களா?
கேள்வி: அரசியலில் அவ்வப்பொழுது நிலையை மாற்றிக் கொள்கிறீர்களே ஏன் அய்யா? ஒரு காலத்தில் தீவிரமாக எதிர்த்த காங்கிரசை இன்றைக்கு ஆதரிக்கிறீர்களே! அய்யா. ஏன்?
தந்தை பெரியார்: ஒரு நேரத்தில் மழை பொழிகிறது. மழை பொழிகிறது என்பதற்காக நான் குடை பிடித்தேன். அந்த மழை நின்று விட்டது. அதற்காக நான் குடையை மடக்குகிறேன். அப்பொழுது குடை பிடித்தீர்களே அய்யா. இப்பொழுது ஏன் மடக்கி விட்டீர்கள்? என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது.
(சமூக நீதியை ஆதரித்த அரசியல் கட்சிகள் எதனையும் தந்தை பெரியார் ஆதரிக்காமல் விட்டதில்லை. அதேபோல சமூக நீதியை ஆதரிக்காத எந்த கட்சியையும் தந்தை பெரியார் ஆதரித்ததும் இல்லை)
கேள்வி: வெறும் 3 சதவீதம் இருக்கின்ற பார்ப்பனர்களை பார்த்து பயந்து நாம் அவர்களை எதிர்க்க வேண்டுமா?
தந்தை பெரியார்: நூற்றுக்கணக்கான மக்கள் சந்தைகளுக்கு போகிறோம். அங்கே திருடர்களும், கொள்ளை அடிப்பவர்களும் ஒருவரோ இரண்டு பேர் தான் வருகிறார்கள். இந்த நிலையில் மடியைப் பத்திரமாகப் பாதுகாப்பது ஏன்?
கேள்வி: தங்களால் பயன் அடைந்தவர்கள் ஏன் அய்யா தங்களை திரும்ப வந்து பார்ப்பதில்லை?
தந்தை பெரியார்: என்னால் ஆக வேண்டிய காரியம் அவர்களுக்கு முடிந்து விட்டது. அதனால் தான் அவர்கள் என்னை பார்க்க வரவில்லை.
இன்னும் இதுபோல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதில் சொன்னவர் தான் தந்தை பெரியார்.
ஒருமுறை பொதுக்கூட்டத்தில், பேசி முடித்தவுடன் வழக்கம் போல தந்தை பெரியார் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கேள்வி எழுதப்பட்ட துண்டு சீட்டுகளைப் படித்து பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.
கேள்விகளின் நாயகர் மட்டும் அல்ல ! பதில்களின் நாயகரும் பெரியார் !
வாழ்க தந்தை பெரியார் !
வளர்க பகுத்தறிவு !
வணக்கம் பெரியார் உலகம்!