மருத்துவர் மீனாம்பாள்
35 ஆண்டுகளாகத் தலைசிறந்த மருத்துவராகவும், சிறு வயது முதலே திராவிடர் கழகக் கொள்கையிலும் இருந்துவரும் மருத்துவர் மீனாம்பாள் அவர்களை இந்த வார மகளிர் சந்திப்பிற்காக, பாடி பகுதியில் அமைந்துள்ள அவரின் இராஜம் மருத்துவமனையில் சந்தித்தோம்!
வணக்கம் டாக்டர்! தங்களைக் குறித்து
அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
வணக்கம்! எனது பெயர் மீனாம்பாள். வயது 68 ஆகிறது. நான் பிறந்தது திருச்சி, சிறீரங்கத்தில். எனது பெற்றோர் இராஜம் – ரங்கசாமி. நான் சென்னை வந்து 60 ஆண்டுகள் ஆகிறது. எனது தந்தை திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்கும் போதே, திராவிட மாணவர் கழகத்தில் இருந்தவர்கள். அரசுப் பணியில், குறிப்பாகக் கல்வித் துறையில் பட்டயக் கணக்கராக (Chartered Accountant) பணியாற்றியவர்கள். எனக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள். நாங்கள் நான்கு பேருமே சிறு வயதில் பெரியாரைச் சந்தித்துள்ளோம். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். சென்னை, திருச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் பார்த்துள்ளோம். பெரியார் அவர்களோடு வேனில் செல்லும் வாய்ப்பையும் நான் பெற்றுள்ளேன்.
உங்களின் மருத்துவப் படிப்புக்
குறித்துக் கூறுங்கள்?
அதைச் சொல்ல வேண்டும் என்றால், ஆசிரியர் அவர்களிடம் இருந்தே தொடங்க வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் வாங்கிக் கொடுத்து, தம் காரிலேயே மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றவர் ஆசிரியர் அவர்கள். அது என் வாழ்நாளின் பொக்கிசம்! அப்படி அழைத்துச் சென்றது கல்லூரிக்குத் தெரிந்து, என்னை ஆசிரியரின் அக்கா மகள் என்பதாக நினைத்து, கடைசி வரை அப்படியே தொடர்ந்தது. மருத்துவப் படிப்பு முடித்ததும், சென்னை பெரியார் திடலில் உள்ள “பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனையில்” பணிபுரியும் வாய்ப்பையும் ஆசிரியர் வழங்கினார்கள்.
அந்த மருத்துவமனை 30.05.1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில், இராஜா சர் முத்தையா (செட்டியார்), நீதிபதி பி.வேணுகோபால், மருத்துவமனை கவுரவ இயக்குநர் கே.இராமச்சந்திரா, மருத்துவர் ஹெச்.எஸ்.பட் ஆகியோர் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையில் எவ்வளவு காலம் பணியாற்றினீர்கள்?
பெரியார் மருத்துவமனையில் பணி செய்த போதே, மகப்பேறு மருத்துவத்திற்கு மயக்க மருந்து கொடுக்கும் பயிற்சியை 6 மாதங்கள் கற்றேன். அதையும் ஆசிரியர் வழிகாட்டுதலில், அவர்களின் ஏற்பாட்டில்தான் செய்து முடித்தேன். எனக்குச் சிறு வயது முதலே, வெளியில் வேலைக்குச் செல்லக் கூடாது, பலருக்கும் நாம் வேலை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. எனவே பெரியார் மருந்துவமனைத் தவிர வேறெங்கும் நான் பணி செய்தது கிடையாது.
அதேநேரம் 1981 ஆம் ஆண்டு சென்னை கொரட்டூரில் தனி மருத்துவமனை ஒன்று தொடங்கினேன். “இராஜம்” என்கிற எனது அம்மாவின் பெயரை வைத்தேன். அதையும் ஆசிரியர் அவர்கள் தான் தொடங்கி வைத்தார்கள்.
ஆக, திராவிடர் கழகத்தின் மருத்துவப் பணிகளிலும்
உங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளீர்கள்?
ஆமாம்! ஆசிரியர் அவர்கள், குருதிக் குடும்பம், கல்விக் குடும்பம், கொள்கைக் குடும்பம் என அடிக்கடி சொல்வார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் கொள்கைக் குடும்பத்தில் வருவோம்! கொரட்டூரில் தொடங்கப்பட்ட மருத்துவமனை, இப்போது “பாடி” பகுதியில் பெரிய அளவில் செயல்படுகிறது. 35 ஆண்டு காலம் மருத்துவப் பணியை முடித்திருக்கிறேன்.
எனினும் பெரியார் மருத்துவமனைப் பணிகள் என்பது எப்போதும் நெருக்கமானது. பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை என்பது “பெரியார் அர்பன் ஹெல்த் போஸ்ட்” என உயர்ந்தது. அதாவது
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும் சிறப்பு அனுமதியை ஆசிரியர் அவர்கள் பெற்றார்கள். பிறகு “பெரியார் அர்பன் ஃபேமிலி வெல்ஃபேர் சென்டர்” என உயர்வு பெற்று, 20 படுக்கைகளுடன், அறுவை சிகிச்சை அரங்கமும் உருவானது.
ஆசிரியர் அவர்களின் இயக்கச் சாதனைகள் தோழர்கள் அறிந்ததே! அதேநேரம் மருத்துவப் பங்களிப்புகள் குறித்தும் கூறுங்களேன்?
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அதன் இயக்குநராக மருத்துவர் கவுதமன் அவர்கள் இருக்கிறார். அதேபோல மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்களுடன் நான் பணியாற்றிய காலம் என்றும் மனதில் நிற்பவை. பெரியார் திடல் மருத்துவமனையில் எத்தனையோ புகழ் பெற்ற மருத்துவர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அதன் பட்டியலே பெரியது. ஏழை, எளிய மக்களுக்குப் பெரியார் மருத்துவமனையின் சேவைகள் அளப்பரியது!
தவிர பெரியார் பிறந்தநாள், நினைவு நாள், ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளின் போது இலவச மருந்துவ முகாம், குருதிக்கொடை முகாம் நடத்துவோம். தவிர மகளிர் நலம், குழந்தைகள் நலம், கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய், நீரழிவு, காது மூக்கு தொண்டை, கண் பரிசோதனை எனப் பல்வேறு முகாம்கள் நடைபெறும். 2013 ஆம் ஆண்டு “பெரியார் மருத்துவர் அணியை” ஆசிரியர் தோற்றுவித்தார்கள்.
அதேபோல பெரியார் மெடிக்கல் மிஷன் எனும் அமைப்பையும் உருவாக்கினார்கள். “நல வாழ்விற்கான” அறிவுரைகளும் பெரியார் மருத்துவமனையில் வழங்கப்படும்!
உங்களின் திருமண வாழ்க்கைக் குறித்துக் கூறுங்கள்?
இணையர் பெயர் சந்திரகுமார். வங்கியில் பணிபுரிந்து தற்சமயம் ஓய்வு பெற்றுள்ளார்கள். 1982 ஆம் ஆண்டு பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்தது, நடத்தியது இரண்டுமே ஆசிரியர்தான்! முதலில் தாலி கட்டிக் கொண்டாலும், பிறகு அதைக் கழற்றிவிட்டேன். எங்களுக்கு ஒரே மகள். அவர் பல் மருத்துவராகவும், அவரின் இணையர் மனநல மருத்துவராகவும் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்களின் திருமணத்தையும் ஆசிரியர்தான் நடத்தி வைத்தார்கள். எங்கள் பேத்தி எழுதிய ஆங்கிலக் கவிதை நூலையும் சென்னையில் ஆசிரியர் வெளியிட்டார்கள். எங்கள் பேத்தி பெயர் சந்தனா. ஆசிரியர் அவர்களின் மகள் அருள் அவர்கள் வைத்த பெயர். பெற்றோர்களின் பெயரை இணைத்து வைக்கப்பட்டது.
கொள்கையில் இவ்வளவு வெளிப்படையாக இருக்கிறீர்களே, மருத்துவமனை வளர்ச்சிக்கு இதனால் பாதிப்புகள் எதுவும் வந்ததில்லையா?
எங்கள் மருத்துவமனையில் எந்தக் கடவுள் படமும் இருந்ததில்லை. மாறாக எனது அறையில் பெரியார் – மணியம்மையார், ஆசிரியர் – மோகனா அம்மா படம்தான் இருக்கிறது. ஆசிரியர் அவர்களின் அறிமுகம் கிடைத்து 60 ஆண்டுகள் ஆகிறது. ஆசிரியர் அவர்களுடன் சிறியளவில் பிரச்சாரச் சுற்றுப்பயணமும் சென்றுள்ளேன். தவிர ஆசிரியர் எழுத்துகளில் இருந்து அணுகுமுறைகள், தன்னம்பிக்கை போன்ற பல்வேறு வாழ்வியல் சிந்தனைகளைக் கற்றுள்ளேன்.
அந்த வகையில் மருத்துவமனைக்கு வரக் கூடியவர்களுக்குத் தரமான சிகிச்சை, சிறந்த அணுகுமுறை, மனிதநேயம் போன்றவற்றை வெளிப்படுத்தும் போது, அவர்களுக்கும் கடவுளின் தேவை எழுவதில்லை.
ஆசிரியர் அவர்கள் குறித்துத் தங்கள் கருத்து?
இந்த நேர்காணல் முழுக்கவே ஆசிரியர் அவர்கள் குறித்துதான் கூறியிருக்கிறேன். இயக்கத் தோழர்களுக்கு மட்டுமல்ல; எங்களைப் போன்ற பல மருத்துவர்களுக்கும் ஆசிரியர் அவர்கள் தான் குடும்பத் தலைவர்! அதேபோல எங்களின் பாசத்திற்குரிய மோகனா அம்மா அவர்கள், அதிக வெளிச்சத்திற்கு வராதவர்கள். அவர்களிடமும் வாழ்க்கைக்குத் தேவையான நிறைய விசயங்களைக் கற்றுள்ளேன். எனக்கு மிகப்பெரிய உற்சாகம் தரக்கூடியவர்.
ஆசிரியர் அவர்கள் முழுநேரமும் பொதுவாழ்வில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு முழுவதுமாகத் துணை இருந்து, உடல்நலத்தைப் பேணக் கூடியவர்கள். என்றைக்கும் எங்களின் நன்றிக்கு உரியவர்கள் மோகனா அம்மா!
எங்கள் தந்தையார் இறந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கொடை செய்தோம். அதையொட்டிய படத்திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஆசிரியர் பெருமை சேர்த்தார்கள். எங்கள் தாயார் கரோனா சமயத்தில் இறந்து போனார்கள். அதுபோன்ற நிகழ்வுகளிலும் ஆதரவாக இருந்தவர்கள் ஆசிரியரும், அம்மாவும்! தாய் தந்தை பெயரில் அறக்கட்டளை ஒன்றும் உருவாக்கியுள்ளோம்”, எனத் தம் நினைவுகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார் மருத்துவர் மீனாம்பாள் அவர்கள்!