தூங்கிய தமிழரை தட்டி எழுப்பி
திராவிட ராக்கிய தந்தையின் கைத்தடி
அடிமை விலங்குகளை எல்லாம்
உடைத் தெறிந்த பெரியாரின் கைத்தடி
தலை குனிந்துழன்ற எளியோரை
தன்மானத் தோடு நிமிர்த்திய கைத்தடி
நாற் சந்தில் நின்ற நலிந்தோர்க்கு
நற் பாதை காட்டிய வழிகாட்டி
அறியாமை இருள் அடியோடு போக்கிய
அறிவாசானின் அடையாளமான கைத்தடி
ஏணியாய் நின்று ஏதிலியார் எல்லாரையும்
ஏற்றிக் காத்த பெரியாரின் கைத்தடி
எங்கள் ஆட்சி எம் தந்தை
தங்களுக்கே என்று சொன்ன அண்ணா
தலைவர் நெஞ்சில் தைத்த முள்ளை
கலைஞர் அகற்றினார் அவர் வழியில்
வைக்கத்து வெற்றி நூற்றாண்டு விழா
வைக்கத்தில் பெரியார் நினைவகமும் நூலகமும்
வையத்தாருக்கு வழங்கிய நம் முதல்வருக்கு
வைக்கம் வீரரின் கைத்தடி பரிசானது
போதும் இது போதும் இதனினும்
பெரிய பரிசேதும் இனி உண்டோ
பேசவும் இயலாது பெருமிதத்தால் பூரித்துப்
பொங்கிய மகிழ்வோடு நின்ற மாட்சி
திராவிட மாடல் எதுவென்று ஏகடியம்பேசித்
திரிந்தோர்க்கு இதுதான் அந்த ஒப்பிலா
திராவிடம் என ஓங்கி முழங்கிய நாள்
இவர்தாம் பெரியார் என்றுணர்த்திய நாள்
இது நினைவு நாளல்ல இது எழுச்சிநாள்
புதுப் புனல் பாய்ச்சிய புரட்சி நாள்
நன்னன் குடியிலிருந்து
அவ்வை தமிழ்ச்செல்வன்