கோவையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

Viduthalai
10 Min Read

தி.மு.க. தலைமையில் இருக்கின்ற இந்தியா கூட்டணி – திராவிடர் இயக்கம் உண்டாக்கிய கூட்டணி – ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் ஏற்படுத்திய கூட்டணி!
இந்தியா கூட்டணி கொள்கைக் கூட்டணி – வெறும் பதவிக் கூட்டணி அல்ல!

கோவை, ஜன.2 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கின்ற இந்தியா கூட்டணி – திராவிடர் இயக்கம் உண்டாக்கிய கூட்டணி – எங்களுடைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் ஏற்படுத்திய கூட்டணி – காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி போன்றவர்கள் இருக்கக்கூடிய கூட்டணி – இது கொள்கைக் கூட்டணி – வெறும் பதவிக் கூட்டணி அல்ல. இது கூட்டணியே தவிர, கூத்தணி கிடையாது. கூட்டணி வேறு; கூத்தணி வேறு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள்
கடந்த 26.12.2024 அன்று மாலை கோவையில் தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள் – ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ – தமிழ்நாடு,கேரள மாநில முதல மைச்சர்களுக்கு நன்றி – ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நேற்றைய உரையின் தொடர்ச்சி வருமாறு:
கொள்கைகளை, லட்சியங்களைப் பார்த்து அடையாளம் காணக்கூடியவர்கள்!
திருமாவளவன், வீரமணி, ஸ்டாலின் யாராக இருந்தாலும், நாங்கள் வருணாசிரம எதிர்ப்புக்கு, சமூகநீதிக்கு ஆதரவுக் கொடுக்கக்கூடியவர்கள். ஏனென்றால், நாங்கள் நபர்களைப் பார்ப்பதில்லை; கொள்கைகளைப் பார்த்து, லட்சியங்களைப் பார்த்து அவர்களை அடையாளம் காணக்கூடியவர்கள்.
எங்களுக்கு ஆதாயம் என்ன என்பதல்ல; இந்த சமுதாயம் தலைநிமிர வேண்டும்.

மான வாழ்வை பெறவேண்டும்;
உரிமை வாழ்வைப் பெறவேண்டும் மக்கள்!
அடுத்த தேர்தல் என்பது சாதாரண ஓட்டுக்காக. ஆனால், தலைமுறை தலைமுறையாக உரிமை இழந்த இந்த மக்கள் மான வாழ்வை பெறவேண்டும்; உரிமை வாழ்வைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் பாடுபடுகின்றோம்.
நன்றாக நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் இளை ஞர்களே, அன்றைய காங்கிரஸ் திலகர் காங்கிரஸ். ‘‘சுயராஜ்ஜியம் எங்களது பிறப்புரிமை’’ என்று சொன்ன சுதந்திரப் போராட்ட வீரர் என்று அவரைச் சொல்வார்கள்.
அந்தக் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்டு எழுதினார் அம்பேத்கர். யாருக்குப் பதிலளித்திருக்கிறார் பாபா சாகேப் அம்பேத்கர்.!
இதோ என் கையில் இருப்பது அம்பேத்கர் எழுதிய புத்தகம்.

பெரியார் பயன்படுத்திய புத்தகம்!
இது பெரியார் அவர்கள் பயன்படுத்திய புத்தகம். பெரியாருடைய கையெழுத்தோடு இருக்கக்கூடிய புத்தகம். பெரியார் அவர்கள் இதனை வாங்கி, பல மேடைகளில் இதைப்பற்றி பேசி, எங்களிடத்தில் விட்டுப் போயிருக்கின்ற அறிவுச் சொத்தாகும்.
நான் இந்தப் புத்தகத்தை எங்கே படித்து முடித்தேன் என்று சொன்னால், உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.
நெருக்கடி காலத்தில், சிறைச்சாலையில் இருந்தபொழுது, வரவழைத்து இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்தேன். இதில் சிறைச்சாலை அதிகாரியின் கையெழுத்தும் இருக்கும். அவருடைய அனுமதி பெற்றுத்தான் சிறையில் கைதியாக இருப்பவர்களிடம் கொடுப்பார்கள்.

25 ஆண்டுகாலத்திற்குமேல்….
அம்பேத்கர் – பெரியார் நட்பு என்பது பிரிக்கப்பட முடியாத நட்பாகும். இந்தியாவிலேயே ஒரு தேசியத் தலைவரும், தந்தை பெரியாரும் அதிகமாக சந்தித்தார்கள் – ஆலோசித்தார்கள் என்று சொன்னால், அது இவர்கள் இருவரும்தான். 25 ஆண்டுகாலத்திற்குமேல் நெருக்க மாக இருந்து, இறுதிக்காலம் வரையில், அந்த உறவு தொடர்ந்தது. முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் எல்லாம், தந்தை பெரியாரை கலந்தாலோசித்துத்தான் முடிவெடுப்பார் அம்பேத்கர்.

ஸநாதனிகளுக்குக் கோபம் ஏன்?
திராவிடர் இயக்கத்தோடு அம்பேத்கர் ஒன்றிப் போயிருந்தார் என்பதற்காகத்தான், ஸநாதனிகளுக்குக் கோபம்.
‘அம்பேத்கர், அம்பேத்கர்’ என்றால் அவர்களுக்குக் கோபம் வருகிறது. அம்பேத்கர் என்றால், பெரியார். பெரியார் என்றால், அம்பேத்கர். ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அதனால்தான் அவர்கள் எரிச்சல டைகிறார்கள்.
தனி மனித வெறுப்பு எங்களுக்குக் கிடையாது!
உங்கள் எரிச்சல், உங்களைத்தான் எரிக்குமே தவிர, உங்களை என்றால், தனிப்பட்ட நபரை அல்ல; தத்துவத்தைச் சொல்கிறேன்; தனி மனித வெறுப்பு எங்களுக்குக் கிடையாது.
அன்றைய காங்கிரஸ் எப்படி இருந்தது? திலகர், ‘‘சுயராஜ்ஜியம் நம்முடைய பிறப்புரிமை” என்று சொன்னதை மட்டும் நிறைய பேர் குறிப்பிட்டுச் சொல்வார்கள். கீதையில் சொல்வார்களே, ‘‘கடமையை செய்; பலனை எதிர்பாராதே!” என்று.

எந்தக் கடமையைச் செய்தார்?
‘‘கீதையின் மறுபக்கம்’’
‘‘உன்னுடைய ஜாதியைக் காப்பாற்றுவதற்காகப் போரிடு’’ என்று வழிகாட்டினார். வருணாசிரம தர்மத்தை யாரும் முழுமையாகப் படித்ததில்லை. எங்களுடைய ‘‘கீதையின் மறுபக்கம்” புத்தகத்தைப் படித்தீர்களேயானால், அதைப்பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியும்.
அந்த பாலகங்காதர திலகர் ஒரு பத்திரிகையில் எழுதுகிறார், ‘‘முடி திருத்துகின்றவனும், சலவைத் தொழில் செய்கின்றவனும், ஆயுள்மான்களும் (செக்கு சுத்துகிறவர்கள்) இவர்கள் எல்லாம் சட்டசபைக்குப் போய் என்ன செய்யப் போகிறார்கள்?” என்று.
இப்படிப்பட்ட காங்கிரஸ்தான் அன்றைய காங்கிரஸ். அம்பேத்கர் அவர்கள் எதிர்த்த காங்கிரஸ்.
இன்றைக்கு உள்ள காங்கிரசோ, ராகுல் காந்தி காங்கிரசோ, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசோ என்பது முற்றிலும் அன்றைய காங்கிரசிலிருந்து வேறு பட்டது.
எதிரிகள் யார்? நண்பர்கள் யார்?
சரியானவர்களை எதிரிகளாகக் கொள்ளவேண்டும். எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பது புரிந்தாலே, ஒரு போரின் வெற்றி அதில் பாதி அடங்கிவிட்டது.
ஹிந்துத்துவா சக்திகள்கூட அன்றைய காங்கிரசில் இருந்தது.

பி.ஜே.பி. எப்பொழுது தொடங்கப்பட்டது?
1980 ஆம் ஆண்டில்தான்.
அதற்கு முன்பு என்ன பெயர் அதற்கு?
‘ஜனசங்கம்’
ஜனசங்கம் எப்பொழுது தொடங்கப்பட்டது?
1951 ஆம் ஆண்டில்.
காங்கிரஸ் கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது?
அதற்கு முன்பு.
அப்பொழுது காங்கிரஸ் கட்சியில் யார் இருந்தார்கள்?
அந்தக் காங்கிரஸ், அன்றைய காங்கிரஸ், ‘‘வரு ணாசிரம தர்மத்தைப்பற்றி எதிர்த்துப் பேசாதே, தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்று பேசாதே, ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் படிக்கக்கூடாது; அவர்களைத் திருத்தவும் முடியாது’’ என்று சொன்ன காங்கிரஸ்.
அதற்குரிய ஆதாரம்தான் அம்பேத்கர்பற்றிய இந்தப் புத்தகம்.

சுரேந்திரநாத் பானர்ஜி!
காங்கிரஸ் கட்சியின் ஆதிகாலத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி என்பவர் இருந்தார். ‘ஜி’ என்று பெயர் முடிந்தாலே, ‘அவாள்’கள்தான்.
‘‘தாழ்த்தப்பட்டவர்களைக் கொண்டு போய் சமமாக பள்ளிக்கூடத்தில் உட்கார வைப்பதா? அவன் நாற்றம் பிடித்தவன், அவர்களோடு நம் பிள்ளைகளை அமர வைக்க முடியுமா?” என்றெல்லாம் பேசியவர்கள்தான் அவர்கள்.
சுரேந்திரநாத் பானர்ஜி சொன்னார், ‘‘குழந்தைத் திருமணம் செய்யக்கூடாது; விதவை மறுமணம் செய்யவேண்டும் என்றெல்லாம் அம்பேத்கர் போன்ற வர்கள் பெண்கள் சீர்திருத்தம்பற்றிச் சொல்கிறார்கள்; அப்படியெல்லாம் பெண்களுக்கு உரிமை கொடுக்கக் கூடாது’’ என்று சொன்னார்.
இதுதான் அன்றைய காங்கிரஸ். இதுதான் ஸநாதனம்.
ஸநாதனத்தைக் காப்பாற்றத்தான் அன்றைக்குக் காங்கிரசில் தீர்மானம் போட்டார்கள்!
இந்த ஸநாதனத்தைக் காப்பாற்றத்தான் அன்றைக்குக் காங்கிரசில் தீர்மானம் போட்டார்கள். ‘‘சீர்திருத்தத்தை அரசியலில் கொண்டு வராதே!” என்று.
இதனைக் கண்டறிந்து, கண்டித்தவர் அம்பேத்கர் அவர்கள்.
இதனைக் கண்டித்துத்தான் பெரியார், காங்கிரசை விட்டு வெளியேறினார்.

ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று ஏன் சொல்கிறோம்?
இதனால்தான், அவர்கள் இருவரும் ஒரே நாண யத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொல்கிறோம்.
ஆகவேதான், ஹிந்துத்துவா சக்திகள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதுதான் அன்றைய காங்கிரஸ்.
அதனால்தான் சொல்கிறோம், அன்றைய காங்கிரஸ் வேறு; இன்றைய காங்கிரஸ் வேறு.
திராவிட இயக்கத்தோடு இன்று இணைந்திருக்கின்ற காங்கிரஸ், சுயமரியாதைக் காங்கிரஸ், சமத்துவக் காங்கி ரசாகும்.
காங்கிரசுக்காக நாங்கள் வக்காலத்து வாங்கவில்லை. யார் சுயமரியாதைப்பற்றி பேசுகிறார்களோ, அவர்க ளுக்கெல்லாம் நாங்கள் தோள் கொடுப்போம். எங்களு டைய சகோதரர்கள் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.
இதுதான் அரசியல். இப்படிப்பட்டவர்கள் பதவி நாற்காலியில் இருந்தால்தான், இப்படிப்பட்ட ஆட்சிகள் இருந்தால்தான், சீர்திருத்த சட்டங்கள் வரும்.

வேண்டா வெறுப்பாக அவர்கள் சமத்துவத்தைப்பற்றி பேசுகிறார்கள்!
இன்றைக்கு ஒரு பெரிய மாறுதல் சமூகத்தில் வந்து விட்டது. அந்த மாறுதலால்தான், வேண்டா வெறுப்பாக அவர்கள் சமத்துவத்தைப்பற்றி பேசுகிறார்கள்.
அதனால்தானே, குலக்கல்வித் திட்டத்தை நேரிடையாகச் சொன்னால், கண்டனம் தெரிவிப்பார்கள் என்று, மறைமுகமாக ‘‘விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை” கொண்டு வந்து, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அவரவர் குலத்தொழிலை செய்வதற்குக் கடன் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.
‘‘எல்லா வங்கிகளிலும் கடன் கொடுப்பார்கள். கடனை வாங்கி தொழிலைத் தொடங்கலாம்’’ என்று ஒன்றிய அரசு கூறுகின்றது.
இங்கே உரையாற்றிய நம்முடைய இராமகிருஷ்ணன் சொன்னாரே, ‘‘பானை செய்கிறவர்கள் குறைந்து போய்விட்டார்கள், செருப்புத் தைக்கிறவர்கள் குறைந்து போய்விட்டார்கள். இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆகவே, உங்களுடைய கலை அழிந்து வருகிறது. அதற்குப் பதிலாக நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வங்கியில் கடன் தருகிறோம்; அந்தத் தொழிலை மேற்கொள்ளுங்கள்” என்று அமித்ஷா சொல்கிறார்.
இதனுள் இருக்கின்ற சூழ்ச்சியை நம்மாள்கள் புரிந்துகொள்ளாமல், பணம் கொடுக்கிறார்களே, அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.
தவிர்க்க இயலாத இந்தச் சூழலில், வயதானவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்; இளைஞர்களே, உங்களுடைய நிலையை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

கேரள மாநிலத்தில் ஒரு பெரிய வரலாற்றுச் சின்னத்தை அமைத்திருக்கிறார்கள்!
இந்த இயக்கம், ‘வைக்கம் ஸ்பிரிட்’ என்பது ஒரு நிகழ்வல்ல, ஒரு விழா நிகழ்ச்சி மட்டுமல்ல. கேரள அரசு அங்கே இடம் கொடுத்தார்கள்; நம்முடைய தமிழ்நாடு அரசு, பெரிய வரலாற்றுச் சின்னத்தை அந்த இடத்தில் அமைத்திருக்கிறார்கள்.
மனிதநேயம், மனித உரிமைக்காக மிகப்பெரிய அளவில் நடந்த போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக வைக்கத்தில் நடத்தினார்கள்.
அதன்படி ஏற்பட்டுள்ள ஒரு புதிய சமுதாய எழுச்சியை, அப்படியே தலைகீழாக மாற்றிவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகளைச் செய்கிறார்கள்.

ஓரணியில் திரளுவோம்!
அதனால்தான், கருப்பா, சிவப்பா, நீலமா, கதர் வெள்ளையா என்று பார்ப்பதில்லை. எல்லோரும் உரிமைக்குக் குரல் கொடுக்கவேண்டிய இந்த நேரத்தில், ஓரணியில் திரளுவோம்!
‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது அனைவரையும் இணைப்பது; யாரையும் பிரிப்பதல்ல.
தத்துவங்கள்தான் எங்களுக்கு எதிரிகளே தவிர, தனி மனிதர்கள் எதிரிகள் அல்ல.
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகத்தைத் தத்துவமாக்கி இருக்கிறார்!
தமிழ்நாடு முதலமைச்சர் நம்முடைய மு.க.ஸ்டா லின் அவர்கள் கட்சி வேறுபாடில்லாமல், கருத்து வேறுபாடில்லாமல், மத வெறியற்ற, ஜாதி வெறியற்ற, பதவி வெறியற்ற மிகப்பெரிய ஒரு புதிய சமுதாயத்தை, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகத்தைத் தத்துவமாக்கி இருக்கிறார்.

அதுதான் ‘திராவிட மாடல்’, அதுதான் சமத்துவ நாளான அம்பேத்கருடைய பிறந்த நாள்; அதுதான் சமூகநீதி நாளான பெரியாருடைய பிறந்த நாள் – சுயமரியாதை நாள் என்று ஆக்கிய ஓர் அரசு இங்கே இருக்கிறது.
அந்த அரசை நாம் காப்பாற்றியாக வேண்டும்; பாதுகாக்கவேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கும் 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள். அதன்படியே செய்து காட்டினார்கள்.
வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லியிருக்கிறார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

எங்களுடைய தோழர்களின் கைகள் எப்பொழுதும் ஓங்கியே இருக்கும்!
இதற்கிடையில், அவர் இப்படித் திரும்பினார், அவர் இப்படி சொன்னார் என்றெல்லாம் சந்து பொந்தில் செய்திகளை நுழைத்து, இந்தக் கூட்டணியைப் பிரிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.
இந்தக் கைகள் எப்பொழுதும் பிரியாது! எங்களுடைய தோழர்களின் கைகள் எப்பொழுதும் ஓங்கியே இருக்கும்.
எனவே, சந்து பொந்துகளில் நீங்கள் யாராவது தலையை விடலாம் என்று நினைத்தால், உங்கள் தலை, உங்கள் கழுத்துதான் நசுங்கிப் போகும்.
கத்திரிக்கோலைப் பார்த்தீர்களேயானால், இரண்டு பிளேடும் பிரிந்ததுபோன்றுதான் காட்சியளிக்கும். ஆனால், அதன் நடுவில் விரலை வைத்தீர்கள் என்றால், உங்களுடைய விரல்தான் துண்டாகிவிடும்.

இந்தியா கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி!
ஆகவே, நன்றாக நினைவில் வைத்துக் கொள் ளுங்கள். இந்தியா கூட்டணி – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கின்ற கூட்டணி – திராவிடர் இயக்கம் உண்டாக்கிய கூட்டணி – எங்களு டைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள் ஏற்ப டுத்திய கூட்டணி – எங்களுடைய திருமா போன்ற எழுச்சித் தமிழர்கள் இருக்கின்ற கூட்டணி – காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி போன்றவர்கள் இருக்கக்கூடிய கூட்டணி – கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் இருக்கக்கூடிய கூட்டணி – இது கொள்கைக் கூட்டணி – வெறும் பதவிக் கூட்டணி அல்ல.

கூத்தணி வேறு – கூட்டணி வேறு!
இன்னொன்றும் சொல்கிறேன், இது கூட்ட ணியே தவிர, கூத்தணி கிடையாது.
கூட்டணி வேறு; கூத்தணி வேறு.
இதனை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
கூத்து+அணி = கூத்தணி.

கூட்டு + அணி = கூட்டணி!
ஆகவே, கூத்தணியா? கூட்டணியா? என்றால், வெற்றி பெறப் போவது, நிலைக்கப் போவது கூட்டணிதான். அடுத்தத் தேர்தலில் மட்டுமல்ல, அவர் சொன்னதுபோன்று, தி.மு.க.வின் நூற்றாண்டி லும் தி.மு.க.தான் ஆட்சியில் இருக்கும் என்று.
உங்களுக்காக – உங்கள் சந்ததிக்காக!
அது திருமாவிற்காக அல்ல; எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்காக அல்ல; உங்க ளுக்காக – உங்கள் சந்ததிக்காக – உங்கள் பெயரப் பிள்ளைகளுக்காக – உங்கள் தாய்மார்களுக்காக – உங்கள் பெயர்த்திகளுக்காக – உங்கள் உணர்வுகளுக்காக.
என்றைக்கும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
மான வாழ்வு! உரிமை வாழ்வு! அதுதான் வைக்கம் உணர்வு!
வைக்கம் உணர்வு பெருகட்டும்!
உலகமே அதன் பரப்பு!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
இயற்கைக்கும் நன்றி! நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *