தந்தை பெரியாரின் தோழரான கண்ணப்பர் மதுரைக்கு, ரயிலில் பயணம் செய்தார். வண்டி திண்டுக்கல்லில் நின்றபோது இரண்டாவது வகுப்பில் அமர்ந்து பயணம் செய்த கண்ணப்பர், மூன்றாம் வகுப்பில் இருந்த பெரியாரைச் சந்தித்துப் பேச வந்தார். கண்ணப்பர், தந்தை பெரியாரிடம் ஒரு சுயமரியாதைத் திருமணத்தில் நடந்த சொற்பொழிவில் தாம் பேசியதைப்பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர் ஒருவர், ஓ இப்படிப் பேசி இருந்தால் ஜனங்கள் உங்களைச் சும்மா விட்டு விடுவார்களா? என ஆத்திரத்தோடு கேட்டார். கண்ணப்பரும் கோபமாக, பேசியதில் என்ன தப்பு?’ என்றார் பதிலுக்கு பார்ப்பனர் மிகக் கடுமையான சொற்பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்.
கண்ணப்பரும் அவரோடு கூடக்கூட எதிர்க் களம் புரிந்தார். இதைக் கவனித்த பெரியார், தோழர் கண்ணப்பரை நோக்கி, ‘அவர் அவருடைய வைதீக உணர்வில் பேசிக் கொண்டுள்ளார். அவருக்குச் சமாதானம் சொல்லாமல் கூடக் கூடப் பேசி – சமாதானம் சொல்லக் கிடைத்த வாய்ப்பையும் நழுவ விடுகிறீரே’’ என்றார். அதற்கு அந்தப் பார்ப்பனர் அவர்களுக்கெல்லாம் உங்களால் சமாதானம் சொல்ல முடியாதய்யா – இவர்கள் எல்லாம் அந்த ராமசாமி நாயக்கரின் சீடர்கள். அவன் புத்தி தானே இவர்களுக்கும் இருக்கும் என்றார்.
தந்தை பெரியார் தோழர் கண்ணப்பருக்கு ஜாடை காட்டி அடக்கி விட்டார். வண்டி கொடைக்கானல் வந்தவுடன் கண்ணப்பர் இறங்கி இரண்டாம் வகுப்பு பெட்டிக்குச் சென்றுவிட பெரியார் எழுந்து கழிப்பறைக்குச் செல்ல பெரியாரின் அருகே அமர்ந்து இருந்தவர் அந்தப் பார்ப்பனரை நோக்கி உங்களோடு பேசிக் கொண்டு இருந்தவர் யாருன்னு தெரியுமா எனக் கேட்க, அந்தப் பார்ப்பனர், யாரோ கிழவர் – சூத்திரர் போல் தெரிகிறது. ஆனாலும் மகா பெரிய மனுசன் போலிருக்குது என்றார். அதற்கு அவர் இவர் ‘தானய்யா ராமசாமி நாயக்கர்’’ என்றார்.
சிறிது நேரம் கழித்து தன் இருக்கையில் அமர வந்த தந்தை பெரியாரைப் பார்த்தவுடன் அந்தப் பார்ப்பனர் எழுந்து தன் இரு கரத்தையும் கூப்பி மன்னிக்க வேண்டும் என ஆரம்பித்து பத்திரிகையில் வரும் செய்திகளையும், பார்ப்பனர்கள் சொல்லிக் கொள் வதையும் கேட்டு நான் அந்தப்படி நினைத்து விட்டேன்.
இன்று ஒரு பெரிய சுப நாளாகும் – பெரியவாளை நான் சந்தித்தது எனது பாக்கியம் என்று சொல்லி தொடர்ந்து பேசி வந்தார். தன்னுடைய பெயர்
கே. சுப்பிரமணிய அய்யர் என்றும், காரைக்குடியில் ‘இன்சூரன்ஸ் ஏஜண்டாக’ இருப்பதாகவும், சொல்லிக் கொண்டு வெட்கமடைந்த தன்மையோடு மதுரையில் இறங்கிக் கொண்டார்.
தன்னை நேருக்கு நேராக பார்ப்பனர்கள் விமர் சனம் செய்த போதும். அவர்களுக்கு தன்னுடைய கொள் கையை விளக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கருதினாரே தவிர, அவர்கள் மேல் கோபப்படவில்லை – பெரியாரின் பொறுமை யாருக்கு வரும்?
நன்றி: திராவிட முழக்கம் இதழிலிருந்து…
ச. இரணியன், திருமுல்லைவாயில்