சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாத இறுதியில், திருச்சியில் இருந்தபோது, துறையூர் மாவட்டக் கழகத் தலைவர் துடிப்புடன் இயங்கும் தோழர் மணிவண்ணன் அவர்களும் (குடும்பத்தாரும்) அவர்களுடன் ப.க. ஆசிரியர் கொள்கை வீரர் தோழர் சண்முகம் அவர்களும் வந்து சந்தித்து வாழ்த்துப் பெற்ற போது இரண்டு ஆங்கிலப் புத்தகங்களை தந்தார்கள்.
பிரபல ஊக்குவிப்பு எழுத்தாளர் Ryan Holiday அவர்கள், முற்றிலும் புதுமையான கோணத்தில் எழுதிய ‘The obstacle is the way’ என்ற அந்நூலைப் படித்தேன்.
பயனுள்ள கருத்துரைக் கருவூலமாக அது திகழ்ந்தது.
இந்த நூலின் மய்யக் கருத்தினை முதல் அட்டையின் கீழேயே, புத்தகத் தலைப்பை ஒட்டி அமைக்கப்பட்ட முதல் அட்டை பக்கத்திலேயே அந்த நூல் விளக்கியுள்ளது.
The Ancient Art of Turning Adversity to Advantage
எது நமக்கு கெடுதலாக நுழைகிறதோ, அதை நமக்குப் பயன்படக் கூடிய ஒரு லாபகரமாக மாற்றிக் கொள்வது எப்படி? என்று உள்ள வலிமையை ஏற்படுத்த உதவி பெறும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த அரிய ஆங்கில நூல்!
கொடுத்த நாள் முதல் இன்றுவரை – இடைஇடையே நேரம் கிடைத்த போதெல்லாம் படித்து இன்புறக் கூடிய வாய்ப்பு எமக்குக் கிட்டியது!
‘நவில் தொறும்’ இந்நூலை – ‘பயில்தொறும்’ பண்புடையாளர்களாகிய நமது நண்பர்கள் தந்து மகிழ்ந்தனர்; என்னையும் ஈர்த்தனர். அந்த இன்பம் ஈத்துவக்கும் இன்பமாக வேண்டாமா?
அது பற்றிதான் ‘வாழ்வியல் சிந்தனை’ சாளரங்கள் மூலம் உங்கள் அனைவருக்கும் வழங்கவே இந்த சில தொடர் கட்டுரைகள்.
பழைய வரலாற்றுச் சாதனை சிகரங்களின் வாழ்வில் எப்படி அவர்களுக்கு வந்த தடைகளை மாற்றி, அந்தத் தடைகளையே தங்களது வெற்றிக்கான தடங்களுக்கு அவற்றினையே படிக்கட்டுகளாக்கி உயர்ந்தனர் என்பதை இன்றைய இளந்தலை முறைகளும் மற்றும் வரும் தலைமுறைகளும் கற்றுத் தெளிந்து, பாடங்களாக்கி பார் போற்ற உயரவும் முடியும்!
ஏற்படும் தடங்கல்களை, தடைகளை, தடங்களாக்கி லட்சியப் பாதையாக்கி அவற்றின்மீது நடந்து சென்று இன்பக் கரையில் நின்று வென்றுகாட்ட மனஉறுதி, கடும் உழைப்பு, தோல்வியிலும் துவளாத துணிவுடன், அதனை எதிர்கொண்டு வெற்றியை துய்த்து மகிழ முடியும் நம்மால்!
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’தான்! நல்லவனுக்கு – திறமைசாலிக்கு இடர்களும் இன்பத் தோணிகளே, சாயாமல், சரியாமல், கவிழாமல், கலங்காமல், கவலை போக்கி ‘களிப்பருளும் களிப்பாக’ மாற்றும் கலை மிகப் பல முதிய, மூத்த, முதிர்ந்த தத்துவ ஞானிகளின் வாழ்க்கை நிகழ்வுகள், வல்லமை பொங்கும் அறிவுரைகள், அதன்மூலம் அவர்களைக் காப்பாற்றிய செயல்முறைகள் என்ற பேராயுதங்கள் பற்றி மிக அருமையாக, ஆற்றொழுக்காக விளக்கும் இந்த நூல், தெளிந்த நீரோடையில் சலசல வென்ற ஓசை பொங்க ஓடுகிறது! அது நமது சிந்தையிலும் செய்முறை நேர்த்தி மூலமும் நம்மை அச்சத்திலிருந்து வெளியேற்றி, இடுக்கண் வந்தாலும் மகிழத் தக்க வகையில் அறிவுறுத்தும் ஆசான் போன்று அனுபவக் குவியலை அள்ளி அள்ளித் தருகிறது!
‘கற்றனைத் தூறும்’ அறிவுக்கு இந்நூல் ஓர் அருமையான எடுத்துக்காட்டு.
மேலும் தொடருவோம், சுவைப்போம்!