மகாராட்டிர மாநிலம் தானேவில் 12 வயது சிறுமியைக் கடத்தி கொலை செய்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில், கடந்த திங்களன்று (டிச.23) வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.
பின்னர், சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், டிசம்பர் 24 அன்று காலை 10 மணியளவில் அம்மாவட்டத்திலுள்ள பிவாண்டி எனும் ஊரின் மயானத்தின் சுவரின் அருகில் காணாமல்போன சிறுமியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர், காவல்துறையினர் அச்சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய் விற்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காகப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாத நிலையில், அவர் பாலியல் வன்புணர்வு ஏதேனும் செய்யப்பட்டரா என்று உடற்கூராய்வின் அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் கிழக்கு கல்யாண் நகர் பகுதியில் பேரணியில் ஈடுப்பட்டனர்.
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால், அவரைப் பிடித்து விசாரித்தபோது தற்போது சிறுமி காணாமல் போனதற்கு அவர் காரணமில்லை எனத் தெரியவந்தது.
இந்நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புல்தான் மாவட்டதைச் சேர்ந்த விஷால் கவுலி (வயது-35) என்ற நபரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் அவருக்கு உதவியதாக அவரது மனைவி சாக்சி கவுலியும் (25) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவியும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விஷால் கவுலி ஏற்ெகனவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு இந்த நிகழ்வில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றவாளி மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இதிலிருந்து வெளிேயவர ஜோதிடர் ஒருவரை அணுகியுள்ளார் என்றும் அவர் வயதுக்கு வராத பெண்ணைப் பலி கொடுத்தால் உன்மீதுள்ள வழக்குகள் அனைத்தும் மெல்ல மெல்ல விலகிவிடும் என்றும் கூறியிருந்தாராம். இதனை அடுத்து தனது மனைவியிடம் இதைக்கூறி மனைவியின் உதவியோடு சிறுமியைக் கடத்திச் சென்று நரபலிகொடுத்துள்ளார் எனத் தெரிகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
கடவுள் நம்பிக்கை – மதநம்பிக்கை என்பது மனிதனுடைய மூளையை நோய்க் களமாக்கியி ருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?
கடவுளும், மதமும் மனித வளர்ச்சிக்குத் தடை என்று பகுத்தறிவாளர்கள் சொன்னால், இவற்றின்மீது விமர்சனம் வைத்தால், ‘அய்யய்யோ எங்கள் மனத்தைப் புண்படுத்துகிறார்களே என்று ஒப்பாரி வைப்பது எத்தகைய பைத்தியக்காரத்தனம்!
மனிதன் காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்த கால கட்டத்தில் இயற்கை சீற்றத்தால் பெருந் துயரத்திற்கும், உயிர் இழப்புக்கும் ஆளான நிலையில், அவனுக்கு ஏற்பட்ட அச்சம் தான் கடவுள் நம்பிக்கையாக, கடவுள் சக்தியாக உருப் பெற்றது.
அறிவியல் வளர்ந்த காலத்திலும், நரபலி நடக்கிறது என்றால் இதனைக் காட்டுமிராண்டித்தனம் என்று தந்தை பெரியார் சொன்னால், தந்தை பெரியார் சிலைகளின் பீடத்தில் அறிவார்ந்த வாசகங்களைப் பொறித்தால், பெரியார் சிலையை உடைப்போம் என்று கூச்சல் போடுகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?
இவர்கள் திருந்தவில்லை – தந்தை பெரியார் கணித்தபடி காட்டுமிராண்டிகளாகவேதான் இருக்கிறார்கள் என்று தானே பொருள்!