வெளி மாநிலக் காவல்துறை அதிகாரி வியப்பு!
உத்தரப் பிரதேசத்தில் சைபர் கிரைம் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளியைப் பிடிக்க முராதாபாத் – ராம்பூர் மாவட்ட காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சென்னை வந்திருந்தனர்.
அவர்கள் சென்னை வந்த நாளன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சென்னை பெரியார் திடலில் உள்ள டிஜிட்டல் (எணினி) நூலக திறப்பு விழா (24.12.2024) பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் நடந்துகொண்டிருந்தது.
அப்போது ஒரு மாநில முதலமைச்சர் நூலகத்தை திறக்கச் செல்கிறார், அதற்கு காவல்துறை பாதுகாப்பளிக் கிறது என்பதை அறிந்துகொண்ட உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரிக்கு வியப்பை ஏற்படுத்தியது.
தனது பணியை முடித்துக்கொண்டு மீண்டும் உத்தரப் பிரதேசம் திரும்பும் முன்னர் பெரியார் திடல் செல்ல வேண்டும் என்று காவலர்களிடம் சொல்ல அவர்களும் பெரியார் திடல் குறித்த விவரத்தை கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அவர் 27.12.2024 அன்று பெரியார் திடல் வந்தார். முதலில் பெரியார் நினைவிடம் சென்ற அவர் அய்யாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஒளிப்படங்களையும், நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த அய்யாவின் பொன்மொழிகளையும் வியந்து பார்த்தார்.
அதன் பிறகு அவர் நூலகம் சென்று ஆங்கிலத்திலுள்ள அய்யாவின் நூல்களை வாசித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் புதிதாக திறந்த எணினி நூலகம் குறித்து கேட்டு அங்கு சென்று பார்வையிட்டு வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவருடன் சென்ற நூலக உதவியாளரிடம் ‘‘ஒரு மாநில முதலமைச்சர் நூலகத் திறப்பு விழாவில் பங்கேற்கிறாரா?’’ என்று வியப்பு மேலிட கேள்வி கேட்டார்.
அதனை அடுத்து அவரிடம் திடலில் வைக்கப் பட்டிருந்த – வைக்கம் நூற்றாண்டு நினைவு மண்டபம் மற்றும் நூலகத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திறந்து வைத்த ஒளிப்படங்கள் குறித்து விளக்கியதும் அவர் திகைத்து நின்றுவிட்டார்.
கல்வி வளர்ச்சிக்கும் – அறிவின் கலங்கரை விளக்காக இருக்கும் நூலகங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தரும் முக்கியத்துவம் குறித்து அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்ட கல்விக்கான திட்டங்களைக் குறித்துக் கூறியதும் அவர் கண்களில் ஏக்கம் தெரிந்தது, ஆனால் அவர் அரசுப்பணியாளராக இருப்பதால் வெளியே கருத்து சொல்ல முடியவில்லை.
அவர் திடலை விட்டுச் செல்லும் போது புத்தக விற்பனை நிலையத்தில் இருந்து சச்சி ராமாயண், ஹிந்தியில் பெரியாரின் சிந்தனைகள் மற்றும் இனிவரும் உலகம் ஹிந்தி நூல்களோடு ஆங்கில நூல்களையும் வாங்கிச் சென்றார்.
– பாணன்