இலக்கு நோக்கிய பயணமே இன்பப் பயணம்!

2 Min Read

வாழ்வியல் சிந்தனைகள் வாசக நேயர்களுக்கு நமது புத்தாண்டு மகிழ்ச்சி வாழ்த்துகள்! (1.1.2025)
புத்தாண்டு உறுதிமொழிகளில், தீர்மானங்களை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளோம் சென்ற ஆண்டில்? (2024இல்) என்பதை ஒரு இருப்பு – கணக்கெடுப்பது போல (Stock Taking) எடுத்து – செயல்படுத்தாமல் விடுபட்டவைகள் எவை, எவை என்பதை உளரீதியாக மறுஆய்வு செய்து – தடைகளை அகற்றிட இவ்வாண்டு கடுமையாக முயல வேண்டும் என்ற புது உறுதியை எடுத்து – இவற்றைச் செய்து முடிக்க முடியாமைக்கு உள்ள காரணங்கள் ஏதேனும் தென்பட்டால் அவற்றை அகற்றிட இவ்வாண்டில் திடசித்தத்தோடு, செயற்களத்தில் இறங்கிடுவது அவசியம்! அவசியம்!!

அது நம்மிடம் உள்ள குறைபாடா? நாம்தான் அதற்குக் காரணமா? அல்லது யாருடைய ஒத்துழைப்பு இன்மை முக்கிய காரணமா? அல்லது நமது சோம்பேறித்தனமோ, கழிப்பிணித் தன்மையோ – வேறு காரணமா? என்று நாமும் கலந்து – தேவைப்பட்டால் நமது உயிர் நண்பர்களோ எனக் கண்டறிந்து செயல் மலர்களாக அந்த விழைவுகள் – விருப்பங்கள் – நிறைவேற்றப்பட மீண்டும் வைராக்கியத்துடன் உழைத்து, இலக்கு நோக்கிய வாழ்க்கைப் பயணத்திற்கு – ‘‘வயதைப் பொருட்படுத்தாமல் ஓர் ஊற்றுப் பால் சுரந்து கொண்டே இருக்கும்’’ என்ற உண்மையை ஊர் அறிய, உலகறியச் செய்தல் முக்கியம்!

வெற்றிகளே வந்து நம் காலடியில் தொடர்ந்து விழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு பேராசை!
வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வருவதுதான் வாழ்க்கையின் எதார்த்தம்! நடைமுறை அனுபவம்!!
அது மட்டுமல்ல, என்றும் வெறும் வெற்றிகளே என்றால் அது திகட்டவும் கூடும்! குறிப்பிட்ட வெற்றியின் சுவையை அனுபவிக்க முடியாமலும் போகலாம்!

வெயிலின் கொடுமை வந்து, நம்மை வருத்திக் கொண்டு, தட்ப வெப்பத்தில் சிக்கிக் கொண்ட அனுபவம்மூலம்தான் நிழலின் குளிர்ச்சியை – நிலவுக் குளிர்ச்சிபோல இருக்கிறது என்று பெருமையுடன், நம் வாழ்க்கைப் பயணத்தில் அனுபவித்து மகிழ – வக்கிர மக்களும், அக்கிரமங் களும் விடுபட்ட இன்பத்தை நன்கு துய்த்து மகிழும் வாய்ப்பை ஆரத் தழுவிட முடியும்! இல்லையா?
எனவே தோல்விகளைக் கண்டு துவள வேண் டாம்! மகிழ்ச்சிகளையும் அளவுக்கு மீறி குதித்துக் கூத்தாடிக் கொண்டாட முயல வேண்டாம்! எதிலும் முன் யோசனையோடு, அளவறிந்து வாழ்தலின் நிரந்தப் பயனை நாம் அனுபவிக்க ஒரு வாழ்வியல் கட்டுப்பாட்டை – ஒரு வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொள்ளுவோம்!

‘கொள்வாருமில்லை எனவே ஆங்கே
கொடுப்பாரும் இல்லை’
என்ற தத்துவத்திற்கேற்ப, நமது வாழ்வு எளிமை, சிக்கனம், தெளிவுடன், இலக்கு நோக்கிய, ஆடம்பரத் தொற்று நோய்க்கு அடிமையாகமல், ஈத்துவக்கும் இன்பத்தையே வாழ்வின் இலக்காக்கிக் கொண்டு சுயமரியாதை சுக வாழ்வினை 2025ஆம் ஆண்டிலும் பயணத்தைத் தொடருவோம்.
தடைகள் வரும் நிச்சயமாக,
தடங்களாக அவைகளை மாற்றி
இலட்சியக்கரையை அடைவது உறுதி
– மேலும் விளக்கம் நாளையும்!

(வளரும்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *