ஜனவரி 2024
ஜன.1: புத்தாண்டு நாளில் 12 செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி.-சி.58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்.1 விண்கலம், நீண்ட பயணத்திற்கு பின்பு குறிப்பிட்ட இலக்கை அடைந்து சாதனை படைத்தது. இது இந்தியாவின் மற்றொரு மைல்கல் சாதனை என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஜன.7: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.
ஜன.12: சென்னையில் அயலக தமிழர் நாள் விழா ஜன.11, 12ஆம் தேதிகளில் நடந்தது. நிறைவு விழாவில் 58 நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் கிராம மக்களுடன் சேர்ந்து வெளிநாட்டு பயணிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
ஜன.20: காற்று மாசு ஏற்படுத்தாத 100 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தி.மு.க. இளைஞர் அணி 2ஆவது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடந்தது. 5 லட்சம் பேர் திரண்டனர். ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றக்கோரி தீர்மானம்.
ஜன.22: அசாமில் கோயிலுக்குச் சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். மறுநாள் அசாம் தலைநகருக்குள் அவரது பயணத்திற்கு நுழைய தடை விதிக்கப்பட்டது.
ஜன.29: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற 6 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிப்ரவரி 2024
பிப்.1: ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.2,500 கோடியில் தளவாட வசதிகள் ஏற்படுத்த ஸ்பெயின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பிப்.3: ஒன்றிய அரசைக் கண்டித்து மம்தா விடிய விடிய குளிரிலும் மறியல் போராட்டம்.
பிப்.12: தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கிய வரலாற்றில் முதல் முறையாக அரசு வழங்கிய உரையை ஆளுநர் புறக்கணித்தார். கூட்டம் முடியும் முன்பே வெளியேறினார்.
பிப்.13: டில்லியில் போராட்டம் நடத்துவதற்காக 10 ஆயிரம் டிராக்டர்களில் படையெடுத்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. பிப்.21இல் டில்லி எல்லையில் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது காவல் துறையினருடன் நடந்த மோதலில் ஒருவர் பலியானார்.
பிப்.14: ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதிகள் மறு சீரமைப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிப்.19: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சமர்ப்பித்தார். கிராமப்புற ஏழைகளுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் திட்டம், அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் 3 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவை, கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
பிப்.20: தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல். விவசாய திட்டங்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. மண்ணுயிர் காப்போம் திட்டம் அறிமுகம்.
பிப்.24: நெம்மேலியில் ரூ.1,500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிப்.26: சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும், புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நினைவிடத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
குலசையில் ராக்கெட் தளம்
குலசேகரன் பட்டினத்தில் ரூ.986 கோடி மதிப்பில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிப்.28இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இது உள்பட ரூ.17 ஆயிரம் கோடி திட்டப்பணிகளுக்கு தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சோதனை முயற்சியாக ரோகினி ராக்கெட் (ஆர்.எச்.200) விண்ணில் பாய்ந்தது.
மார்ச் 2024
மார்ச்.2: தஞ்சை மாவட்டம் திருவோணம் புதிய தாலுகாவாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
மார்ச்.7: ரூ.10 ஆயிரத்து 158 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட வடசென்னை அனல் மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மார்ச்.9: பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு.
மார்ச் 11: முஸ்லிமாக மாறும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கி விட்டு திரும்பும், உள்நாட்டிலேயே தயாரான அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி.
மார்ச் 15: புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்கடி ஆகியவற்றை புதிய மாநகராட்சிகளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
ரஷ்யாவில் 5ஆவது முறையாக புதின் அதிபர் ஆனார்.
மார்ச் 28: ஒன்றிய அரசு 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.319 கிடைக்கும்.
புயலை கிளப்பிய தேர்தல் பத்திரம்
அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் உடனே சமர்ப்பிக்க, வங்கிக்கு மார்ச் 11இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் ஆணையம் மார்ச் 14இல் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதா ரூ.6 ஆயிரத்து 60 கோடி திரட்டியது தெரியவந்தது. மாநில கட்சிகள் பெற்ற நிதி விவரமும் வெளியானது. தி.மு.க. 639 கோடியும், அ.தி.மு.க. 6 கோடியும் பெற்றதாக விவரம் வெளியானது.
ஏப்ரல் 2024
ஏப்.1: ஒரே வாகனம் ஒரே ஃபாஸ்டேக் திட்டம் அமலுக்கு வந்தது.
ஏப்.4: மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி பதவியேற்றார். மேலும் 13 பேரும் பதவியேற்றனர்.
அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி.
ஏப்.12: கோவை பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் பேசினர். ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவதற்காக சாலையை கடந்து சென்று ஒரு கடையில் இனிப்பு வாங்கி பரிசளித்தார். நெல்லையிலும் ராகுல்காந்தி பேசினார்.
ஏப்.21: தூர்தர்ஷன் டி.வி. இலச்சினை காவி நிறத்தில் வெளியிடப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
ஏப்.26: 13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. கேரளாவில் வாக்குப் பதிவின்போது சுட்டெரித்த வெயிலுக்கு 6 பேர் பலி.
தமிழ்நாட்டில் 69.94 விழுக்காடு வாக்குப் பதிவு
தமிழ்நாட்டில் ஏப்.19இல் நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. இதில் 69.94 விழுக்காடு வாக்குகள் பதிவானது.
மே 2024
மே 1: தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் இரண்டாம் உலகப் போரின்போது உயிரிழந்த தமிழர்களின் நினைவாக நிறுவப்பட்ட நடுகல்லை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் எம்.எம்.அப்துல்லா எம்.பி. திறந்து வைத்தனர்.
மே 15: 9,10ஆம் வகுப்புகளை தொடர்ந்து 8ஆம் வகுப்பு புத்தகத்திலும் கலைஞர் பற்றிய பாடம் இடம் பெற்றது.
மே 17: குலசேகரன்பட்டினத்தில் 1,500 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசுடன் இஸ்ரோ ஒப்பந்தம்.
மே 18: சிங்கப்பூரில் கரோனா அலை அதிகரித்தது. ஒரே வாரத்தில் 26 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.
மே 22: நாடாளுமன்ற தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் வெளியானது.
கெஜ்ரிவால் ராஜினாமா; அதிஷி புதிய முதலமைச்சர்…
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், மார்ச் 1இல் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. செப்டம்பர் 13இல் உச்சநிதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து 6 மாதங்களிக திகார் சிறையில் இருந்த அவர் விடுதலை செய்யப்பட்டார். இடையில் மே 10இல் தேர்தல் பிரச்சாரத்திற்காக 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியே இருந்தார்.
தான் பிரபராதி என்பதை மக்கள் அறிவிக்கட்டும் என்ற கூறி, செப்டம்பர் 17இல் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 21இல் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார்.
ஜூன் 2024
ஜூன் 2: நிலவின் தென் துருவத்தில் சீனாவின் விண்கலம் தரையிறங்கியது.
ஜூன் 3: நாடாளுமன்ற தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்தது உலக சாதனையாக பதிவு.
ஜூன் 4: நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியானதில் தி.மு.க. கூட்டணி, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் அள்ளியது.
ஜூன் 9: பிரதமராக மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்றது.
தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டார்.
கீழடி பொற்பனைக்கோட்டை உள்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜூன் 23: இந்தியா ஏவிய மறுபயன்பாட்டு ராக்கெட் 3ஆவது சோதனை வெற்றி.
ஜூன் 26: கீழடியில் தா என்ற எழுத்து பதித்த பானை ஓடு கிடைத்தது.
ஜூன் 28: புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகியவை 4 புதிய மாநகராட்சிகளாக அறிவிப்பு.
ஜூலை 2024
ஜூலை 1: நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட மாநில கல்விக்கொளகை குழு, தங்கள் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியது. அதில் 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தத் தேவையில்லை என்று பரிந்துரை செய்திருந்தனர்.
புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இதன்படி வழக்கு பதிவான 3 ஆண்டுகளில் உச்சநிதிமன்றத்திலும் தீர்ப்பு வந்துவிடும்.
ஜூலை 5: இங்கிலாந்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது. கீர் ஸ்டார்மர் புதிய பிரதமரானார்.
ஜூலை 17: தனிநபர் பெயரில் 10 சிம் கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது.
ஜூலை 22: 2,500 சதுர அடி மனையில் 3,500 சதுர அடி கட்டடம் கட்டுவதற்கான ஒப்புதலை ஆன்லைனில் எளிதாக பெறும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜூலை 29: இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு நாளொன்றுக்கு உதவித் தொகை ரூ.350 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
காலை உணவுத் திட்டம்
அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் காலை உணவுத் திட்டத்தை ஜூலை 15இல் காமராஜரின் 122ஆவது பிறந்த நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 2024
ஆக. 1: அருந்ததியர் உள் ஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
ஆக. 8: நாடாளுமன்றத்தில் 44 திருத்தங்களுடன் வக்பு வாரிய சட்ட மசோதா தாக்கல். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பால் மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
ஆக. 9: மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆக. 15: சுதந்திர நாள் விழாவில் சந்திரயான்-3திட்ட இயக்குநர் வீரமுத்து வேலுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
ஆக. 21: சென்னையில் நடைபெற்ற விழாவில் ரூ.51 ஆயிரம் கோடி முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கலைஞர் புத்தகங்களை நாட்டுடைமையாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆக. 29: விவசாயத்தை மேம்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் அமலுக்கு வந்தது.
செப்டம்பர் 2024
செப். 17: தி.மு.க.வின் 75ஆவது ஆண்டு பவள விழா, பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பிறந்த நாள் விழா ஆகிய தி.மு.க. முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. விழா மேடையில் கலைஞர் செயற்கை அறிவு தொழில்நுட்பத்தில் தோன்றி பேசினார்.
செப். 22: இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2ஆவது சுற்று ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டதில் திசநாயகே அதிபராக தேர்வு. செப்.22இல் பதவியேற்றார். மறுநாள் பிரதமராக ரினி அமர சூரியா பதவியேற்றார்.
செப். 23: தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செப். 28: இந்திய அளவில் பாரம்பரிய சுற்றுலாத் தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதை குடியரசு துணைத் தலைவரிடம் கீழடி ஊராட்சி தலைவர் பெற்றுக்கொண்டார்.
செப். 29: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3ஆம் கட்ட அகழாய்வில் தங்க நாணயம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.
அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஆக.27இல் அமெரிக்கா சென்றார்.
ஆக.30:இல் அமெரிக்காவில் முதலமைச்சர், பங்கேற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.900 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செங்கல்பட்டில் ரூ.400 கோடியில் புதிய தொழிற்சாலை (செப்.1) சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் பொறியியல் மய்யம் நிறுவுவதற்கும் (செப்.4), தமிழ்நாட்டில் ரூ.2 ஆயிரம் கோடியில் தொழில் மய்யம் அமைக்க அமெரிக்க நிறுவனத்துடனும் (செப்.5), சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் ரூ.850 கோடி முதலீடு செய்ய 3 அமெரிக்க நிறுவனங்களுடனும், (செப்.6) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
செப்.6:இல் அமெரிக்காவில் தமிழர்களுடன் முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்டுமான கருவி உற்பத்தியை விரிவுபடுத்த கேட்டர்பில்லர் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தமும் (செப்.12), முதலமைச்சர் அழைப்பை ஏற்று (செப்.13) ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் செயல்பட ஒப்பந்தமும் கையெழுத்தானது.
செப்.14: இல் சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வந்ததாக தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சரானார்
தமிழ்நாடு அமைச்சரவை செப்.28ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்களாக இருந்த செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு பதில் செந்தில் பாலாஜி (மின்சாரம் மற்றும் மதுவிலக்கு), ஆவடி நாசர் (சிறபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை), கோவி.செழியன் (உயர்கல்வித் துறை), ராஜேந்திரன் (சுற்றுலாத்துறை) ஆகியோர் புதிய அமைச்சர்களாக (செப்ட29) பதவியேற்றனர். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
6 அமைச்சர்களின் இலாகா மாற்றம்
6 அமைச்சர்களின்(செப்.2) இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சரான க.பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டன.
அக்டோபர் 2024
அக். 3: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்குப் போக்குவரத்து தொடங்கியது.
கலைஞர் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அக். 7: சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடியில் அமைக்கப்பட் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அக். 18: தூர்தர்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திராவிடம் என்ற சொல்லை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது சர்ச்சையானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தினார்.
நவம்பர் 2024
நவ. 5: மாவட்ட அளவிலான கள ஆய்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கினார்,. அங்கு ரூ.158 கோடியில் கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காவை திறந்து வைத்தார்.
நவ. 9: விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்திலான மணி கண்டெடுப்பு.
நவ. 17: ஒலியை விட பல மடங்கு வேகமாக செல்லும் நீண்ட தூர ஏவுகணையை இந்தியா ஒடிசாவில் வெற்றிகரமாக சோதித்தது.
நவ. 22: திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘டைடல்’ பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
நவ. 23: வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
நவ. 29: ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.
மீண்டு(ம்) வந்தார் டொனால்டு டிரம்ப்…
அமெரிக்க தேர்தல் முடிவு நவ.6இல் வெளியானது. இதில் டொனால்டு டிரம்ப் (78) வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளை எதிர்கொண்ட டிரம்ப் இந்த வெற்றியின் மூலம் வருகிற ஜன.20இல், அமெரிக்காவின் 47ஆவது அதிபர் ஆனார். அவரது கட்சியை சேர்ந்த ஜே.டி.வான்ஸ், துணை அதிபரானார். இதனால் இவருடைய மனைவி உஷா, அமெரிக்காவின் 2ஆவது பெண்மணி அந்தஸ்தை பெற்றார். இவர் இந்தியாவின் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவில் அமையும் புதிய அரசில் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமிக்கு முக்கிய பதவி வழங்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் வெற்றியை தொடர்ந்து அவரது நண்பரான எலான் மஸ்க்கின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்து (நவ.23) சொத்து மதிப்பு ரூ.29 லட்சம் கோடியை கடந்து உலக வரலாற்றிலேயே பெரும் பணக்காரரானார்.
டிசம்பர் 2024
டிச. 5: 12ஆம் வகுப்பில் எந்த பாடப் பிரிவில் படித்திருந்தாலும்,இளங்கலை படிப்பில் எந்த துறையிலும் சேரலாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) புதிய விதிமுறைகளை வெளியிட்டது.
டிச. 10: 3டி வடிவிலான தொழில்நுட்பத்தில் மனித மூளையின் தெளிவாக படங்களை உலகிலேயே முதன்முறையாக சென்னை அய்.அ.ய.டி. வெளியிட்டது.இது ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைகளுக்கு உதவும்.
டிச. 12: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவைக் வட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டிச.17: இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்க எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால், கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வைக்கத்தில் நூற்றாண்டு விழாவையொட்டி புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம், நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மன்மோகன்சிங் மரணம்
பொருளாதார நிபுணரும், மேனாள் பிரதமருமான மன்மோகன்சிங் (92) டிச.6இல் மரணம் அடைந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் 1991-1996 வரை நிதி அமைச்சராக இருந்தபோது தாராளமயமாக்கல் உள்பட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். 2004-2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தனர்.