‘‘அன்னி பெசண்ட் அம்மையார் கூட. கீதைக்கு வியாக்கியானம் எழுதித்தான் பெரிய ஞானியானார். வியாக் கியானம் எழுதியதோடு மட்டுமல்ல. கிருஷ்ணனோடு அன்றாடம் பேசுவதாகவும் கூறிப்பெருமை பெற்றுக் கொண்டார்.
நம் அதிகாரிகளும் மந்திரிகளும் கீதையைப் புகழ்ந்து கூறித் தான் தம் பதவிகளை நிலைக்க வைத்துக் கொள்ளுகிறார்கள்.
வாழ்க்கையில் எந்த அளவுக்கும் உபயோகப்படாத மிகச் சாதாரண அந்த நூலுக்கு அவ்வளவு பெருமை இருக்கக் காரணம் அது ஓர் ஆரிய நூல். ஆரிய தர்மத்தை அதாவது ஆரிய உயர்வை வலியுறுத்தும் நூல் என்பதால்தான். இதை நீங்கள் உணரவேண்டும். திருக்குறளுக்கு அத்தகைய பெருமை இல்லாமற் போனதற்குக் காரணம் இது ஓர் திராவிடநூல் என்பதுதான். இதனையும் நீங்கள் நன்றாக உணரவேண்டும்.
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள்தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள். உணர்வது மட்டுமல்ல. நன்றாக மனத்தில் பதிய வையுங்கள்!
மேலும் திருக்குறள் ஆரிய தர்மத்தை- மனுதர்மத்தை – அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணரவேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க என்பதற்காகவே எழுதப்பட்ட ஒரு நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை.
மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு. ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகத்தான் என்னால் கருதமுடிகிறது.
‘‘திருக்குறள் ஆரியக்கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச்செய்ய, அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்று தான் நான் கருதுகிறேன்.
உதாரணமாக மனுதர்மம்-வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள்-பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் – உண்டு என்று உபதேசிக்கிறது.
‘பிராஹ்மண க்ஷத்திரியே வைஸ்த: த்ரயோவர்ணாத் விஜரதய: ” சதுர்த்த ஏகஜ” திஸ்து சூத்ரோ நாஸ்திது பஞ்சம்:
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்ற இம்மூவரும் துவிஜர்கள் நான்காவது ஜாதியான சூத்திரன் ஒரே ஜாதி இவனுக்கு உபநயனமில்லாததால் த்விஜாதியாக மாட்டான் என்கிறது மனுதர்மம்.
திருக்குறள் – மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறது.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (குறள் -972)
மனுதர்மம் – மாம்சம். மச்சம் சாப்பிட வேண்டும். யாகம் செய்யவேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தரவேண்டும் என்கிறது.
மத்யம் மாம்ஸம் சமீனம் சமுத்ரா, மைதுனமேவச : ஏதே பஞ்சமகாரா: ஸ்யுர் மோக்ஷதா ஹியுகே யுகே.
கள். இறைச்சி, மீன், சமுத்ரா. மைதுனம் இவ்வைந்தும் மோட்சத்திற்குச் சாதனங்கள்.
திருக்குறள் – ஜீவ இம்சையே கூடாது,மாம்சம் சாப்பிடக் கூடாது, யாகம் கூடாது என்கிறது.
‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்” (குறள் -260)
“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று” (குறள் – 259)
மனுதர்மம் – பிறவியினாலேயே பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்கிறது.
அனார்யமார்ய கர்மாணம் ஆர்யம் சானார்ய கர்மிணம்; ஸம்ப்ர தார்யா ரவீத் தாதா, நஸமென நாஸமாவிதி”
ஆரியன் (பார்ப்பான்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியனும் ஆகப்போவதில்லை. அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனுமாகமாட்டான்.
“ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு : கர்மஸமாதிசத்?
எதேஷமேவ வர்ணானாம் சுஸ்ரூஷா மனஸயய”
பொறாமையன்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளை இட்டிருக்கிறார்.
திருக்குறள் – ஒழுக்கம் உண்டானால்தான் பார்ப்பான் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளலாம்: ஒழுக்கமற்றவன் பார்ப்பானாயிலும் கெட்டவன் என்கிறது.
“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (குறள் -134)
மனுதர்மம் – ஒரு மனிதன் செல்வனாகப் பிறந்து சுக போகத்துடன் வாழ்வதற்குக் கடவுள்தான் காரணம் என்கிறது.
விஸ்ரப்தம் ப்ராஹ்மண சூத்ராத் த்ரவ்யோ பாதான மாசரேத்: நஹிதஸ்பாஸ்தி கிஞ்சித் ஸ்வம் பர்த்ளு ஹார்யயனாஹிச
சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாகப் படைக்கப்பட்டிருத்தலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனுமில்லை.
திருக்குறள் – ‘ஒரு மனிதனை ஏழையாகப் பிறப்பித்து வருந்த வைப்பது கடவுளானால் அக்கடவுள் ஒழியவேண்டும்’ என்கிறது.
”இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக இவ்வுலகியற்றி யான்” (குறள் -1062)
மனுதர்மத்தில் – பிராமணன் சூத்திரன் என்று மக்களைப் பல ஜாதியினராகப் பிரித்துப் பல இடங்களில் வருணாச்சிரம தர்மம் கூறப்பட்டிருக்கிறது.
வேதத்தில் 180 ஜாதிகள் கூறப்பட்டிருக்கின்றன. மனுஸ்மிருதியிலும் சூத்திரரினும் தாழ்ந்த ஜாதிகள் பல கூறப்பட்டிருக்கின்றன.
திருக்குறளில் – ஒரு இடத்தில் கூட ‘பிராமணன் சூத்திரன்’ என்கிற வார்த்தைகள் இல்லை. பார்ப்பான் என்றுதான் கூறப் பட்டிருக்கிறது வர்ணாச்சிரம தர்ம வாசனையே கிடையாது.
இப்படி அநேக கருத்துகள் ஆரிய தர்மத்துக்கு மாறாகக் கூறப்பட்டிருக்கின்றன. சுருங்கக் கூறினால் – புத்தர் செய்த வேலையைத்தான் திருக்குறள் செய்திருக்கிறது. புத்த தர்மமும் ஆரியத்திற்கு மாறான தர்மம்தான். அதனால்தான் அது இந்நாட்டு ஆரியர்களால் அழிக்கப்பட்டது. ஆரிய தர்மத்தை எதிர்த்து அழித்து ஒழிப்பதற்காகத்தான் திருக்குறள் பாடப்பட்டதென்பது அதை ஆராய்ச்சி செய்வோர் எவருக்கும் விளங்காமற் போகாது.