கும்பமேளாவில் குளிக்க – ஆண்டுக்கணக்காக உடலில் தண்ணீர் படாமல் காத்திருந்த அகோரி நிர்வாண சாமியார்கள் – கூட்டம் கூட்டமாக அலகாபாத் நோக்கி அருவருப்பாகச் சென்று கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு வழி எங்கும் பூக்களைத் தூவவும் அவர்களுக்கான வசதிகளைச் செய்யவும் உத்தரப் பிரதேச அரசு ரூ.2700 கோடி செலவழிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா என்ற கேள்விக்கே இடமில்லை. உ.பி. அரசு என்றாலே ஹிந்து மதவாதக் கூடாரம் தானே!
தேவலோகத்தில் அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து மேருமலையை மத்தாக்கி, ஆதிசேசனை கயிறாக்கி பாற்கடலை கடைந்தார்களாம் – அதில் வந்ததுதான் அமுதமாம்.
அந்த அமுதத்தை தேவர்கள் மட்டுமே குடிக்க ஒரு அசுரன் தேவர்கள் உருவம் கொண்டு வந்து அமுதத்தை குடித்துவிட்டானாம் இதனை அறிந்துகொண்டு அமுதம் அடங்கிய பாத்திரத்தை பிடுங்கிய போது, அதில் ஒரு சொட்டு கங்கையும் யமுனையும் கலக்கும் இடத்தில் விழுந்துவிட்டதாம். அதுதான் அலகாபாத் – தற்போது பிரயாக்ராஜ் சங்கமம் என்ற இடமாம், அந்தத் துளி விழுந்த நாள் தான் கும்பமேளா கொண்டாடும் நாளாம்.
சரி எதற்காக அமுதம் குடிக்கிறார்கள்? அனைத்து வசதிகளையும் பெற்று பாவங்கள் நீங்கி இறவா வாழ்வைப் பெறுவதற்கு அமுதம் குடிக்கிறார்களாம்.
சாமியார்களுக்கு எத்தகைய வசதி? இவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குளிக்கிறார்கள். இவர்கள் குளித்த பிறகுதான் இதர பொதுமக்கள் குளிப்பார்களாம்!
2019 ஆம் ஆண்டு கும்பமேளாவிற்கான செலவு 3700கோடி ரூபாய், 2025 ஆம் ஆண்டுக்கான கும்பமேளா செலவு 6382 கோடி ரூபாய்.
இந்த உ.பி. அயோத்தியில் தான் பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் இடித்துத் தரை மட்டமாக்கியது சங்பரிவார்க் கூட்டம்.
பிஜேபி தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் பேர்வழிகளும், சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக 450 ஆண்டு காலம் வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டினார்கள்.
(விவாதத்துக்காகவே வைத்துக் கொள்வோம்! ராமன் கோயிலை இடித்தபோது, மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் என்ன செய்து கொண்டிருந்தான்? ராமன் சக்தி அவ்வளவு தானா என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி?)
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்குக் காரண மாக இருந்த குற்றவாளிகள்மீது எவ்விதத் தண்டனையும் இல்லை. இந்தியாவின் நீதி்த்துறையை என்ன சொல்ல!
இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கச் சொல்லுகிறது. இன்னொரு பக்கத்தில் நிர்வாண சாமியார்கள் ஊர்வலமாக வரும் போது, அவர்களுக்குப் பூமாரிபொழிய அரசு நிதி ஒதுக்குகிறது.
இவ்வளவுக்கும் எல்லா வகையிலும் உத்தரப்பிரதேசம் வளர்ச்சி குன்றிய மாநிலம். கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட எல்லாவற்றிலும் பின் தங்கிய மாநிலம்.
ஆனால் இது போன்ற ஹிந்துமத மூட நம்பிக்கைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொட்டி அழப்படுகிறது.
இதுநாடா?
வெட்கக் கேடா?