அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி
திருச்சி, டிச.30 நாள்தோறும் சென்னையிலிருந்து – வைக்கத்திற்கும்; வைக்கத்திலிருந்து சென்னைக்கும் பேருந்து இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
நேற்று (29.12.2024) திருச்சியில், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி விவரம் வருமாறு:
தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன்.
பெருமை
இந்த சிறப்புமிகு நிகழ்வில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இங்கே நடைபெற்ற பல்வேறு அமர்வுகளில், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருகை தந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களாக உரையாற்றி இருப்பது நம்முடைய தமிழ் மண்ணிற்கும், அய்யா பெரியார் அவர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கின்ற நிகழ்வாகும்.
இந்த நிகழ்வின் மூலமாக ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகின்றேன்.
ஆசிரியரின் கோரிக்கை!
கடந்த 12 ஆம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா வைக்கத்தில் நடைபெற்றது. அவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கேரள முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்வில், ஆசிரியர் வைக்கம் வெற்றி விழா நினைவாக, வைக்கத்திலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து வைக்கத்திற்கும் ஒரு பேருந்தை இயக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறியிருந்தார்கள்.
சென்னை – வைக்கம்;
வைக்கம் – சென்னை பேருந்துகள் இயக்கப்படும்! அந்த அடிப்படையில், இரண்டு பேருந்துகள் வைக்கம் – சென்னை என்ற வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்படுகின்ற பேருந்து, மறுநாள் காலை 8.30 மணியளவில் வைக்கம் சென்றடையும்.
அதேபோல, வைக்கத்திலிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படுகின்ற பேருந்து, மறுநாள் காலை 8 மணிக்கு சென்னை வந்தடையும்.
இரண்டு பேருந்துகள் அந்த வழித்தடத்தில் இயக்கப்படவிருக்கிறது..
கொள்கை
ஒரு கொள்கை வெற்றியாக வைக்கம் நிகழ்வு அமைந்தது என்றால், அந்த வெற்றி விழாவினைத் தொடர்ந்து, நேரில் சென்று பார்த்து வர விரும்புகின்ற, அந்த வரலாற்றை அறிய விரும்புகின்ற, கொள்கை உணர்வு கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இந்தப் பேருந்து அமையும்.
ஆசிரியர் அய்யா வைத்த வேண்டுகோளை, தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு, நிறைவேற்றியிருப்பதை மகிழ்ச்சியோடு உங்களிடம் அறிவிக்கின்றேன்.
இங்கே நடைபெறுவது பகுத்தறிவாளர் மாநாடு. பகுத்தறிவு கொண்டவர்கள் மட்டும் உரையாற்றினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
பொங்கல் விழாவிற்குச் சிறப்புப் பேருந்துகள்
செய்தியாளர்: பொங்கல் விழாவினையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமா?
அமைச்சர்: தீபாவளியின்போது பிரச்சினைகள் இல்லாமல் பொதுமக்கள், அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சிறப்புப் பேருந்துகள் எவ்வாறு இயக்கப்பட்டதோ, அதேபோல, பொங்கல் விழாவினையொட்டியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அது தொடர்பாக, விரைவில் சென்னையில் சிறப்புக் கூட்டம் நடைபெறவிருக் கிறது. அப்போது எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பதும் அறிவிக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளில்
அதிகக் கட்டணம்
செய்தியாளர்:தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக் கிறார்களே, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
அமைச்சர்: அது தனியார் பேருந்து அல்ல; ஆம்னி பேருந்து.
ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரையில், இந்தியா முழுவதும் இதேபோன்ற நிலையில்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கடந்த தீபாவளியிலிருந்து இப்பிரச்சினைகள் இல்லாமல் இருக்கிறது. அதற்கு முன்பாக, விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தபொழுது, அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தீபாவளியின்போது அதுபோன்ற பிரச்சினைகள் எழவில்லை. இன்னும் சொல்லப்போனால், தனியார்ப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து இயக்கினோம். அதனால், ஆம்னி பேருந்துகள் சில பேருந்துகள் அரசு ஒப்பந்தப்படிதான் இயங்கின.
இந்த ஆண்டைப் பொறுத்தவரையில், ஆம்னி பேருந்துகள், அவை வழக்கமான எண்ணிக்கையைவிட, குறைந்த எண்ணிக் கையில்தான் இயங்கின என்பதை அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களே அறிவித்திருக்கிறார்கள். எனவே, அந்தக் கட்டண உயர்வு என்பது, நம்முடைய அரசுப் பேருந்துகளைக் கூடுதலாக இயக்குவதன் காரணமாகத் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.
அரசு பேருந்துகளில் ஜி.பி.எஸ். சோதனை
செய்தியாளர்: அரசு பேருந்துகளில் ஜி.பி.எஸ். சோதனை நடத்தியிருக்கிறீர்களே, அந்தச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுமா?
அமைச்சர்: சென்னையில் முதற்கட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது. அடுத்தடுத்த கட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.
– இவ்வாறு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
‘இனமுரசு’ சத்யராஜ் – ஆ. இராசா எம்.பி., ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டு
இனமுரசு சத்யராஜ், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி. ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.
மாநாட்டு மேடையில் கிருஷ்ணகிரி மாவட் டத்தைச் சேர்ந்த மணமக்கள் வீரமணி – பூஜா ஆகியோ ருக்கு தமிழர் தலைவர் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தார்.