இரண்டாம் நாள் காட்சிகள் – மாட்சிகள்
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Rationalist associations – FIRA) – 13ஆம் தேசிய மாநாடு டிசம்பர் 2024 – 28,29 ஆகிய நாள்களில் திருச்சியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டின் இரண்டாம் நாள் நடவடிக்கைகள் பல தரப்பு நிகழ்ச்சிகளோடு நடந்து நிறைவடைந்தது. FIRA அமைப்பானது இந்திய அளவில் – அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்ற பகுத்தறிவாளர் அமைப்புகளை, உறுப்பினர் அமைப்பாகக் கொண்டு செயல்பட்டு வரும் கூட்டமைப்பாகும். இந்த மாநாட்டில் பல மாநிலங்களிலிருந்தும் பகுத்தறிவாளர் தோழர்கள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டது மாநாட்டின் சிறப்புகளுள் ஒன்றாக இருந்தது.
முதல் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் பெரிதும் உள் அரங்க நிகழ்வுகளாக நடைபெற்ற நிலையில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வெளியிடங்களிலும், உள் அரங்கங்களிலும் பல்வேறு தளங்களில் நடந்தேறியது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
மாநாட்டில் பேசுபவர்கள் இரு தரப்பினராகப் பங்கேற்ற – ஒரு நிகழ்வு தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள மாநாட்டுப் பேராளர்கள் மற்றும் தோழர்களை உள்ளடக்கி ‘அறிவியல் வழியில் நடப்போம்; அறிவியல் மனப்பான்மை கொண்டு செயல்படுவோம்’ என்ற செய்தியினை வெளிப்படுத்தும் வகையில் பெருந்திரள் நடை (Mass March) நடைபெற்றது. திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து தொடங்கி புத்தூர் – பெரியார் மாளிகையில் பெருந்திரள் நடை நிறைவடைந்தது.
பெருந்திரள் நடை தொடங்குவதற்கு முன்பாக தந்தை பெரியாரின் சிலைக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் செயலாளர்கள் வீ. மோகன், வெங்கடேசன், தமிழ்ப் பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பகுத்தறிவாளர் கழகப் புரவலரான தமிழர் தலைவர் ‘பெருந்திரள் நடை’யினை தொடங்கி வைத்தார். பெருந்திரள் நடையில் பங்கேற்றோர் அனைவரும் ‘அறிவியல் வழி நடப்போம்’ ‘அறிவியல் மனப்பான்மை கொண்டு செயல்படுவோம்’ என்று கூறும் செய்தியினை தாங்கிய பதாகைகள் மற்றும் செய்தி அட்டைகளை (Placards) கையில் தாங்கிய வண்ணம் அமைதியாகச் சென்றனர். முழக்கம் எதுவுமின்றி செய்தியை மட்டும் வெளிப்படுத்திடும் வகையில் பொது மக்கள் கவனத்தை ஈர்த்திடும் வகையில் நடைபெற்று பெரியார் மாளிகை வளாகத்தில் பெருந்திரள் நடை நிறைவடைந்தது.
‘பெரியார் உலகம்’ – பார்வையிடல் –
மரக்கன்றுகள் நடுதல்
மற்றொரு நிகழ்வாக வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்த தோழர்கள் திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ (Periyar World) அமைந்து வருவதை பார்வையிடச் சென்றனர்.
‘பெரியார் உலகம் கட்டமைக்கப்படும் இடத்தில் தற்போது உள்ள நிலைமையையும், திட்டப்படி கட்டி முழக்கப்பட உள்ள விவரங்களையும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பேராளர்களுக்கு எடுத்துரைத்தார். தமிழ்நாட்டிலேயே உயரமான சிலையாக (155 அடி – 95 அடி சிலை + 60 அடி பீடம்) தந்தை பெரியார் சிலை அமைந்திட உள்ளதையும், அந்த இடத்தில் பெரியார் ஆய்வகம், நூலகம், அறிவியல் பூங்கா, குழந்தைகள் பூங்கா இன்னும் பல கருத்தூட்டும் பகுதிகள் உருவாகிட உள்ளதையும் அறிந்து பேராளர்கள் வியப்பும், மகிழ்ச்சியும் கொண்டனர்.
மரக்கன்று நட்டனர்
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆம் தேசிய மாநாட்டின் பேராளர்கள் ‘பெரியார் உலகம்’ அமையும் இடத்திற்கு வந்ததன் நினைவாக ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டனர். மொத்தம் 153 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மீண்டும் அரங்க நிகழ்ச்சிகள்
நான்காவது ஆய்வரங்கம் ‘பெண்களும் மூடநம்பிக்கைகளும்’ என்ற தலைப்பில் தொடங்கியது. ஆய்வரங்கத்தின் தலைவராக FIRA அமைப்பின் மமதா நாயக் உரையாற்றினார். ஆய்வுக் கட்டுரைகளை மருத்துவர் ராதிகா முருகேசன் (தமிழ்நாடு), காரே மல்லேசம் (தெலங்கானா), பஸந்தி ஆச்சார்யா (ஒடிசா) ஹரிஷ் கே. தேஷ்முர் (மகாராட்டிரா) சமர்ப்பித்து உரையாற்றினர். தொகுப்புரையினை FIRA அமைப்பின் மோனிகா சிறீதர் புரதன் ெஷட்டி வழங்கினார்.
சிறப்பரங்கம்
அடுத்து ‘மதச்சார்பற்ற, அறிவியல் சார்ந்த, சுயமரியாதை புத்துலகை நோக்கி…’ எனும் தலைப்பில் சிறப்பரங்க அமர்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அனைந்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளருமான கோ. கருணாநிதி தலைமை வகித்து உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரும், சீரிய பகுத்தறிவாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தனது உரையில் அமைச்சர் குறிப்பிட்டதாவது:
இன்றைக்கு தமிழ்ச் சமூகம் ஒப்பீட்டளவில் உயர்நிலைக்கு வந்ததற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் ஆற்றிய சமுதாய அரசியல் பணிகள் ஆகும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மக்களுக்கு ஆவன செய்து புத்துலகிற்கான பயணத்தை நடத்தி வருகிறார். அரசியல் அதிகாரத்தால் மக்களை வளப்படுத்துவது எப்படி என்பதற்கு எடுத்துக்காட்டான ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறார். ஒரு பகுத்தறிவாளராக ஆட்சி நடத்தி வருவது பிற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கே ஒரு முன் மாதிரி ஆட்சியாக வழங்கிக் கொண்டு வருகிறார். தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்ட நிகழ்ச்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை கேரள மாநில அரசின் ஒத்துழைப்புடன் சேர்ந்து நடத்தி முடித் துள்ளார். போராட்டம் நடந்த வைக்கம் சென்று வருவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தினசரி பேருந்து பயண சேவையினை வழங்கியுள்ளதை தமிழ்நாடு அரசு பெருமையாக கருதுகிறது.
இவ்வாறு அமைச்சர் தன் சிறப்புரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
தமிழர் தலைவர் உரை
சிறப்பரங்கத்தின் நிறைவுரையில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கூறியதாவது:
நாட்டில் பரவலாக – குறிப்பாக வடபுலத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லப்படுவது ‘ஸநாதனம்’ என்பதாகும். அதன் பொருள் ‘என்றைக்கும் மாறாதது; நிரந்தரமானது’ என்பதாகும். எந்நாளும் மாறாதது என்பது அறிவியலுக்கு புறம்பானது. மாறி வரும் சூழலில், கடைப்பிடிக்கப்படும் ‘நம்பிக்கையும்’, மாறுதலுக்கு உரியதே. ‘மாறாதது என்றால் மக்களுக்குப் பயனளிக்காதது’’ என்பதே அதன் பொருளாக இருக்க முடியும்.
அத்தகைய ‘ஸநாதனத்தை’ அன்றைக்கே எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். ‘பெரியார்’ எனும் சொல் அடிக்கடி பயன்பாட்டில் இருப்பது, ஒரு தலைவரின் பெயரை – போற்றுவதற்கு மட்டுமல்ல; ஒரு தத்துவத்தின் பெயர் மக்களை சமத்துவ நிலைக்கு, அறிவியல் சார்ந்த நிலைக்கு கொண்டு சென்று மானமும் அறிவும் மிக்க சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்திட வழி காட்டிடும் தத்துவத்தினை போற்றுவதற்காகும்.
பெரியாருடைய போர் முறை என்பது எதிரியின் (கொள்கையின்) மூலபலத்தை முறிப்பதாகும். அப்படிப்பட்ட நிலையில்தான் சமூக உயர்வு – தாழ்வுகளை ‘தானே’ ஏற்படு்த்தியதாகக் கூறும் கடவுளை உண்மையில் இல்லாத கடவுளை – அந்த ‘கடவுள் நம்பிக்கை’ மக்கள் சமத்துவ நிலைக்கு கொண்டு செல்லவில்லை என்பதாக கடுமையாக எதிர்த்து சமுதாய பணி ஆற்றினார். மருத்துவ முறைகளில் இரண்டு வகைகள் உண்டு. நோயை மருந்து கொடுத்து குணப்படுத்துவது ஒரு வகை – மற்றொன்று அறுவைச் சிகிச்சை செய்து நோயிலிருந்து குணப்படுத்துவது – பெரியாரின் சமுதாயப் பணி என்பது அறுவை சிகிச்சை அளித்து குணப்படுத்துவது (Surgeon’s Cure) போன்றதாகும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் அதற்குரிய தீர்வுகள் உலகில் எங்குமே வரலாற்றில் காணப்படவில்லை. பெரியாருடைய தத்துவம் மானுட மேம்பாட்டிற்கானது. அந்த வகையில் ஒரு பகுதிக்கு மட்டும் சொந்தமானதல்ல; உலகில் வாழும் மாந்தர் அனைவருக்கும் உரிய வகையில் அவர்களை உயர்வடையச் செய்து இழிநிலை வாழ்வை போக்கி இன்ப வாழ்வு வாழச் செய்திடும் தத்துவமாகும்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இணையரங்க நிகழ்ச்சி
மாநாட்டு நடவடிக்கைகள் அதுவரை ஓர் அரங்க நிகழ்ச்சிகளாக தொடர்ந்தவை – பிற்பகல் உணவிற்குப்பி்ன்னர் இணையாக இரண்டு அரங்கங்களாக நடைபெற்றன. ஒரு அரங்கில் FIRA அமைப்பின் பொதுக் குழு, தீர்மான நிறைவேற்றம், தேர்தல் ஆகிய நடவடிக்கைகள் நடைபெற்றன.
மற்றொரு அரங்கில் ஆய்வு அமர்வு நடடிக்கைகள் தொடர்ந்தன. நான்கு தலைப்புகளில் முன்னர் நடைபெற்ற ஆய்வரங்கங்களில் கால நெருக்கடி காரணமாக தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வாய்பில்லாதவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றினர்.
இந்த அமர்விற்கு பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் தலைமை வகித்து உரையாற்றினார். ஆய்வுக் கட்டுரகளை எஸ்.என். அன்புமணி (தமிழ்நாடு), வி. இளவரசி சங்கர் (புதுச்சேரி), பர்வீன் ரதே (ஒடியா), கு. சோமசுந்தரம் (தமிழ்நாடு), சிப்பிராஜ் (தமிழ்நாடு) எம். சபீர் முகம்மது (தமிழ்நாடு) பாபு பித்தோலன் (கேரளா), இசட் பிரையன் ஆடம்ஸ் ஜான் (தமிழ்நாடு), சுவப்னா சுந்தர் (தமிழ்நாடு), நல்லயன் நடராஜன் (தமிழ்நாடு), ஜி. ஆறுமுகம் (PMIST, வல்லம், தமிழ்நாடு) ஆகியோர் சமர்ப்பித்து விளக்கவுரையாற்றினர்.
ஆய்வரங்கத்தின் தொகுப்புரையினை திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீ.ம.வீரமர்த்தினி வழங்கினார்.
நிறைவு நிகழ்ச்சி
இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் FIRA பொதுக் குழு ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் குரல் எடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட FIRA பொறுப்பாளர்கள் பாராட்டப் பட்டனர். FIRA தேசிய தலைவர் பேராசிரியர் நரேந்திரநாயக், தேசிய செயலாளர் முனைவர் சுரேஷ் கோதேராவ் உரைக்குப் பின்னர் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் வீ. மோகன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவுரை
FIRA மாநாட்டின் நிறைவுத் தொகுப்புரையினை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் வழங்கினார். மாநாடு நடைபெற அனைத்து ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் நிலையில் நன்றி கூறினார். இறுதியாக இரண்டு நாள் FIRA மாநாட்டின் நிகழ்வுகளுக்கு நன்றி தெரிவித்து துணைத் தலைவர் இ.டி. ராவ் உரையாற்றினார்.
இரண்டு நாள் மாநாடு, பல்வேறு கொள்கை சார்ந்த உரைகள், விவாதங்களுடனும் செயல் திட்டங்களுடனும் நடைபெற்று இனிதாக நிறைவு பெற்றது.