கடந்த டிசம்பர் 28,29 ஆகிய இரு நாட்களிலும் திருச்சி – பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அரங்கில் அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு (FIRA) வெகு எழுச்சியோடு, நேர்த்தியாக நடைபெற்றது.
அகில இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பான ஃபிராவுடன் (FIRA) தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்திய மாநாடு இது.
இரு நாள்களும் காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இம்மாநாடு முதல் நாள் இரவு 9.30 மணி வரையிலும், இரண்டாம் நாள் மாலை பொதுக் கூட்டம் இரவு 9.30 மணி வரையிலும் இடைவெளி இல்லாத நிகழ்ச்சிகளாக நடைபெற்றன.
தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் பல மாநில மாநாடுகளை சிறப்பாக நடத்தியதுண்டு.
திருச்சியில் இதே கல்வி வளாகத்தில் இரு முறை உலக நாத்திகர்கள் மாநாடு நடைபெற்றது உண்டு. (ஜனவரி 7,8,9 – 2011 மற்றும் ஜனவரி 5,6,7 – 2018).
சென்னையில் பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் தொடங்கி வைத்தார் 6.9.1970. (சென்னை பாலர் அரங்கம் – அவ்வரங்கம் புதுப்பிக்கப்பட்டு இப்பொழுது கலைவாணர் அரங்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
தந்தை பெரியார் ரூபாய் ஆயிரம் நன்கொடை வழங்கி, பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி வைத்தார்.
அந்தத் தொடக்க விழாவில் தந்தை பெரியார் கூறிய ஒரு கருத்து சுருக்கென்று தைக்கக் கூடியதாகும்.
‘இப்பொழுதுதான் மனிதர்களின் கழகத்தைத் தொடங்கி வைக்கிறேன்!’’ என்றார். அந்த ஒரு வரி அனைவரையும் சிந்திக்க வைத்தது.
மனிதன் என்றால் ஆறாவது அறிவான பகுத்தறிவை உடையவன்; அத்தகைய மனிதன் இப்பொழுதுதானே பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்குகிறான் – அதனால்தான் அவ்வாறு குறிப்பிட்டேன் என்றார் தந்தை பெரியார்.
பகுத்தறிவாளர் கழகத்திற்குத் தலைவராக அன்றைய சட்டமன்ற செயலாளர் சி.டி. நடராசன் அவர்களும் துணைத் தலைவர்களாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கா. திரவியம் அய்.ஏ.எஸ்., ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். (அப்பொழுது தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலாளராகவும், பிற்காலத்தில் தலைமைச் செயலாளராகவும் மிசோராம் மாநில ஆளுநராகவும் இருந்தவர். 97 வயதிலும் சிறப்புடன் அதே கொள்கை உணர்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளார்)
அப்பொழுது அரசு வழக்குரைஞராக இருந்த எஸ். மோகன் – (பிற்காலத்தில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கினார்) இருந்தனர்.
அரசு அதிகாரிகள் ஹிந்துமத எதிர்ப்பு வகுப்புத் துவேஷப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்களே என்று சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ‘கல்கி’ இதழில் கையொப்பமிட்டு பொருமினார்.
பகுத்தறிவாளர் கழகம் அரசியல் அமைப்பல்ல என்று தெரிந்திருந்தும், மூடநம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தால், அது பார்ப்பன ஆதிக்கத்தின் ஆணி வேரை ஆட்டி விடுமே என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்!
இன்றைக்கு இருக்கிற ஒன்றிய பி.ஜே.பி. அரசு – மூன்று முறை வன்முறை செயல்களுக்காக தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் அரசுப் பணியில் சேரலாம் என்று வழி வகுத்திருப்பதை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் முகவுரையில் அரசு மதச்சார்பற்றது (Secularism) என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ற பிரிவு மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும், எதையும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் உரிமையையும் மக்களிடத்தில் தூண்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லுகிறது.
இந்தச் சட்டப் பாதுகாப்போடு இந்திய அளவில் அரசுப் பணியாளர்கள், அதற்கென்று ஓர் அமைப்பை அதிகாரப் பூர்வமாக அமைத்து செயல்பட சட்டப்படியான உரிமையுண்டு.
திருச்சியில் கடந்த சனி, ஞாயிறுகளில் நடந்து முடிந்த அகில இந்திய அளவிலான பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு – இந்தத் திசையில் சிறப்பாக வழிகாட்டக் கூடியதாக அமைந்திருந்தது.
ஏற்பாடுகள் எல்லாம் துல்லியமாக – கண்களில் ஒத்திக் கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்தன. பற்பல இன்றிமையாத தலைப்புகளில் பல அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு, பல மாநிலங்களைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் வழங்கிய கருத்துகள் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய அறிவு வெளிச்சமாக அமைந்திருந்தன.
அரசுக்கும், மக்களுக்கும் வழிகாட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலை நிகழ்ச்சிகளும், மந்திரம், மாயாஜாலம் என்று மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்க்கு மரண அடி கொடுக்கும் வகையில் அரங்கேற்றப்பட்ட ‘‘மந்திரமா? தந்திரமா?’’ நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
பகுத்தறிவாளர் கழகப் புரவலராக 1970 முதல் இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிற ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி மற்றும் மேனாள் – இந்நாள் அமைச்சர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களும் பங்கேற்று வெளிப்படுத்திய கருத்துகள், மக்களாகப் பிறந்த எந்தப் பகுதியினரையும் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் ஒளி விளக்குகளாகும். மாநாட்டைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டு நேர்த்தியாக நடத்திய பொறுப்பாளர்களுக்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள்!