ஒன்றிய பிஜேபி அரசு திணிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்பதில் நயவஞ்சகமாக திணிக்கப்பட்டுள்ள குலக்கல்வியை நுட்பமாகப் புரிந்துகொண்டு குலத் தொழில் எதிர்ப்பு மாநாடு சென்னையில் வரும் 29.12.2024 அன்று நடத்தவிருப்பது – பாராட்டத்தக்கது – வரவேற்கத் தக்கதாகும்.
ராஜாஜி 1952இல் சென்னை மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது திணிக்கப்பட்ட குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பே இந்த ‘விஸ்வகர்மா யோஜனா’வாகும்.
“புழுவை முள்ளில் வைத்து மீனைப் பிடிப்பது போல” – ‘நிதி உதவி’ என்ற ஆசையைக் காட்டி, பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது (வயது வரம்பு 18) என்ற சூழ்ச்சி இதற்குள் அடங்கி இருப்பதைப் புரிந்துகொண்டு, பரம்பரையாக ஜாதித் தொழிலை செய்து வரும் மக்கள் கிளர்ந்து எழ வேண்டிய தருணம் இது.
இதற்கு வழிகாட்டியாக இருக்கும் தங்கள் அமைப்பு சார்பாக நடத்தப்பட உள்ள குலத்தொழில் எதிர்ப்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம்!
வண்ணார் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினர் காட்டும் இந்த எடுத்துக்காட்டான நல்வழி முறையை ஜாதித் தொழிலைச் செய்துவரும் மற்ற பிரிவினரும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் முயற்சிக்கு மீண்டும் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்