தமிழ் சமூகத்தில் எவ்வித அறிவியல் மனப்பான்மையும் இல்லாமல், மக்கள் நம்பிக் கொண்டிருந்த பல்வேறு விதமான மூட நம்பிக்கைகளை தந்தை பெரியார் மற்றும் திராவிடர் கழக பகுத்தறிவு பிரச்சாரங்களால் விழிப்படையச் செய்து, அதனால் இங்கே பல மூட நம்பிக்கைகள் மறைந்தாலும் சோதிடமும், ஜாதகமும் மறையாமல் மக்களை பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடைக் கற்களாக உள்ளது. வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு வருகிறது. பல உயிர்களை பலி கொண்டு வருகிறது.
இந்நிலையில் இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக சோதிடம் அறிவியல் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். சோதிடம் என்பது அறிவியல் அல்ல; அது ஒரு போலி (Pseudo science) அறிவியல் என்று திராவிட கழகம் பலமுறை ஆதாரத்துடன் விளக்கியும் உள்ளது.
சூரியனை சுற்றித் தான் சூரிய குடும்பம் என்று சொல்லும் அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன என்பது அறிவியல் உண்மை. ஆனால் சோதிடத்தை கணிப்பவர்கள் பூமியை மய்யமாகக் கொண்டு தான் சூரியன் உள்பட அனைத்து கோள்களும் சுற்றுகின்றன என்று நம்பிக் கொண்டு சோதிடத்தை கணிக்கிறார்கள். இப்படி இருக்கையில் சோதிடம் எப்படி அறிவியலாகும்.
சோதிடம் குறித்து தந்தை பெரியார்
“மத சித்தாந்தங்களிலுள்ள நம்பிக்கையே மாந்தரின் பகுத்தறிவைச் சிதைத்து, அவர்களை சோதிட தீர்க்க தரிசிகள் என்று சொல்லப் படுகின்றவர்களின் மாய வலைகளில் எளிதில் அகப்படுமாறு செய்கின்றது. மறைவாக உள்ள இடத்தைக் காண வேண்டுமென்பதில் மனிதனுக்கு ஆவல் அதிகம்; அதனால் இனி வரப்போகும் எதிர்காலச் சம்பவங்களை முன்னமே உணர்ந்து, அவைகளால் தனக்கு, தற் காலத்திலிருந்து கஷ்ட நிஷ்டூரங்கள் ஒழிவதற்கு ஏதாவது வழியுண்டா வென்பது பற்றி அளவு கடந்த ஆசையோடும் விசாரிக்கத் தொடங்கு கின்றான்” என்கிறார். இந்த ஆசையே சோதிடம். இதை தவிர இதில் எந்த அறிவியலும் இல்லை.
தந்தை பெரியாரைத் தொடர்ந்து கழகம் தொடர் பிரச்சாரம் செய்து வந்தாலும் இன்றைய விஞ்ஞான ஊடகங்கள் நம் பிரச்சாரத்தை மிஞ்சிய நிலையில் சோதிடத்தை பரப்பி வருகின்றன.
வீட்டின் வரவேற்பறையில், அறிவியலால் உருவான கருவியை பயன்படுத்திக் கொண்டு, அறிவியலுக்கு அப்பாற்பட்ட புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை இயக்கினால் போதும் இன்றைய ராசி பலன்கள் என்று ஒவ்வொரு தொலைக்காட்சி அலை வரிசைகளிலும் சோதிடர்கள் சோதிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டுத்தான், அதன் மீது நம்பிக்கை கொண்டுதான் இன்றைக்கு என்ன கலர் உடை அணிய வேண்டும், எந்த நேரத்திற்கு வெளியே செல்ல வேண்டும், விபத்து ஏதாவது நடக்குமா? நடந்து செல்ல வேண்டுமா? வாகனத்தில் செல்ல வேண்டுமா? எத்தனை மணிக்கு பல் தேய்க்க வேண்டும். ஏன்? உள்ளாடை என்ன கலரில் போட வேண்டும் என்பது வரை முடிவு செய்யும் பெருங்கூட்டமே இங்கே உள்ளது. (வெவ்வேறு தொலைக்காட்சி ஊடகங்களும் வெவ்வேறு நாளிதழ்களும் ஒரே ராசிக்கு, பலவிதமான சோதிடப் பலன்கள் சொல்லுகிறார்கள் என்று பலமுறை நம் கழகம் அம்பலப்படுத்தி உள்ளது.)
கடவுளுக்கு என்ன வேலை
உலகத்தில் நடப்பவை அனைத்தும் ஆண்டவன் செயல் தான் என்கிறீர்கள். அவனன்றி ஓரணுவும் அசையாது ; சூரியனைப் படைத்ததும் அவனே! சந்திரனை விட்டவனும் அவனே! அவன் ஆணைப்படி தான் மனித வாழ்வு அமையும் என்பது தானே மத வாதிகளின் கருத்து? அப்படி இருக்கையில் சோதிடத் தின் அடிப்படையே கோள்களின் சுழற்சியாலும், நட்சத்திரங்களின் நடப்பினாலும், அவரவர்கள் பிறக்கும் போது கோள்களின், நட்சத்திரங்களின் இருப்பிடங்களினாலும் தான் அந்த மனிதனுடைய, அவனைச் சார்ந்தவர்களுடைய வாழ்க்கை இயங்குகிறது என்றால்? இங்கே கடவுளுக்கு என்ன வேலை. உங்கள் நம்பிக்கையிலே நீங்கள் உண்மையாக இல்லையே, உங்கள் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக அல்லவா செயல்படுகிறீர்கள் என்பார்.
1975 ஆம் ஆண்டில் 19 நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட 186 அறிஞர்கள் கூட்டறிக்கை யினை கையொப்பம் இட்டு வெளியிட்டனர். அதில் “மக்களின் வாழ்க்கைக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்றும். கோள்கள் மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்த விதமான அறிவுப் பூர்வமான ஆதாரமும் கிடையாது. பகுத்தறிவை பாழாக்குகிறது என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர்.
எதிரெதிர் கருத்து
கடவுள் மறுப்பாளர்கள், விஞ்ஞானிகள் சொல் வதை கூட நம்ப வேண்டாம். கடவுள் நம்பிக்கையாள ராகிய “காந்தியார்” என்ன சொல்லுகிறார் பாருங்கள். “சோதிடம்” என்பதை ஒரு கலை என்று ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால், கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் ஒரு நாளும் அதன் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கக் கூடாது என்கிறார்.
ஆக, கடவுள் நம்பிக்கையாளர்களும் சோதிட நம்பிக்கையாளர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிரான கருத்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இதிலிருந்து மக்களுக்குள் இருப்பது தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவது தான் – தங்கள் எதிர் காலத்தை பற்றிய ஆசை, ஆர்வம் , பயம்.
இந்த ஆசை, பயத்தை பயன்படுத்தி தான் மதவாதி களும், சோதிடர்களும், ஊடகங்களும் மக்களை ஏமாற்றி, மூட நம்பிக்கையை வளர்த்து அவர்கள் செல்வச் செழிப்பில் கொழிக்கிறார்கள்.
மேல் நாட்டில் ஒவ்வொரு மனிதனும் அறிவாளிகள் சொன்னபடி கேட்கிறான். இங்கேயோ அய்யர் என்ன சொல்கிறார் என்று பார்க்கிறான் என்பார் பெரியார்.
அது போன்று தான் இன்றைக்கு ஏ.அய். தொழில் நுட்பத்தில் நாம் சொல்வதை இயந்திரம் செய்யும் இக் காலத்தில், தன் அன்றாட வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டுமென்று, அறிவியலுக்கும், அறிவுக்கும் சம்பந்தமில்லாத யாரிடமோ கேட்டுக்கொண்டு , அதன் படி நடந்து நேரத்தையும், பணத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள்.
அறிவுக்கு சம்பந்தமில்லை
சோதிடம், ஜாதகம், வாஸ்து இது போன்றவைகள் எவ்வித அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லாத நிலையில்,
இந்திய அரசமைப்புச் சட்டம் 51Ah மக்களிடையை அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை, சீர்திருத்த உணர்வு வளர்க்க வேண்டுமென்று சொல்லுகிறது.
அதன் அடிப்படையில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை நம் திராவிட மாடல் அரசாங்கம் எடுத்து வந்தாலும் சோதிடம், ஜாதகம் விடயத்தில் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக உள்ளது என்று அமைதி காப்பதாக நினைக்கின்றோம். ஆளும் பா. ஜா. க. ஒன்றிய அரசு மூட நம்பிக்கையை மூலதனமாக கொண்டு உருவான அரசு. அது ஒருபோதும் மூட நம்பிக்கையை ஒழிக்கும் பணியை செய்யாது. மூடநம்பிக்கையை வளர்க்கத் தான் பார்க்கும், வளர்த்துக் கொண்டுதான் வருகிறது. ஆனால்,திராவிட இயக்கங்கள் பகுத்தறிவை மூலதனமாக கொண்டு வளர்ந்தவை.
திராவிட மாடல் அரசின் பணி
மக்களின் அறியாமையை விரட்ட நாம் பாடுபடுகிறோம். அரசும் இந்தக் காரியத்தில் துணிந்து இறங்க வேண்டும் ‘திராவிட மாடல்’ அரசும் துணிந்து செயல்பட வேண்டும்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூட அவரவர் நம்பிக்கைகள் தான். அதை ஏன் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை என்பதால் தானே. அதைவிட பலமடங்கு மக்களின் வாழ்க்கைக்கும், சிந்தனைக்கும் கேடு விளைவிக்க கூடியது இந்த சோதிடமும், ஜாதகமும். இதனால் ஏற்படும் உயிர் பலிகளும் ஏராளம். ஆகவே, அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கையை வைத்து ஏமாற்றும் சோதிடம், ஜாதகம் , போன்றவற்றை தடைச் செய்ய வேண்டும் என்ற தந்தை பெரியாரின் நினைவு நாளில், அவர் பல ஆண்டுகளுக்கு முன் வைத்த கோரிக்கையானது இப்போதாவது நிறைவேற்றப்பட வேண்டும்.
விழிப்புணர்வு
இவற்றை தடை செய்த நாடுகள் பல உள்ளன. அப்படி உடனடியாக தடைச் செய்ய முடியாவிட்டால், தடைசெய்யப்படும் வரை புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு!
புகைப்பிடித்தல் புற்றுநோயை உருவாக்கும்!
புகைப்பிடித்தல், மது அருந்துதல் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு!
பாதுகாப்பாகக் இருப்பீர்! மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்!
என்று திரைப்படம் துவங்குவதற்கு முன்பாக மக்களுக்கு புகை, மது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது போல.
சோதிடம் அறிவியலுக்கு புறம்பானது!
சோதிடம் உங்கள் வாழ்க்கையை சீரழிக்கும்!
சோதிடம், ஜாதகம், வாஸ்து இவைகள் அனைத்தும் மூட நம்பிக்கை!
பாதுகாப்பாக இருப்பீர் சோதிடம் பார்ப்பவர்களிட மிருந்து என்று சோதிடம், ஜாதகம் போன்றவற்றை நிரந்தரமாக தடை செய்யும் வரை, மக்களிடையே இவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திரைப்படம் துவங்குவதற்கு முன்பும் மிக முக்கியமாக தொலைக்காட்சிகளில் தொடர்கள் தொடங்கு வதற்கு முன்பும், சோதிடம் சார்ந்த காட்சிகள் தொடரில் வரும் போதும் ஒளிபரப்புச் செய்ய வேண்டும்.
– பெ. கலைவாணன்
திருப்பத்தூர்