சென்னை, டிச.28- சென்னையில் உற்பத்தி தொழில்நுட்பங்கள் தொடா்பான ‘சவுமெக்ஸ்’ கண்காட்சி நேற்று (27.12.2024) தொடங்கியது.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சார்பில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மய்யத்தில் 3 நாள்கள் நடைபெறும் உற்பத்தி தொழில்நுட்பங்கள் தொடா்பான ‘சவுமெக்ஸ்’ கண்காட்சியை ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் வசதி சென்னை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநா் எஸ்.சுரேஷ் பாபுஜி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
தரமான பொருள்
நாடு முழுவதும் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் பொருந்தும் வகையில், திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நிறுவனம் வளா்ச்சியடைய தரமான பொருள்களை உற்பத்தி செய்வதுடன், அவற்றை முறையாக சந்தைப்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலான நிறுவனங்களுக்கு தங்களது பொருள்களை முறையாக விளம்பரப்படுத்தி அவற்றை மக்கள் மத்தியில் எப்படிப் பிரபலப் படுத்துவது? என்பது குறித்துத் தெரிவதில்லை. உற்பத்திப் பொருள்களை முறையாக விளம்பரப் படுத்துவன் மூலம் மட்டுமே விற்பனைகளை அதிகரிக்க முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஒன்றிய அரசின் ‘ஜெம்’ இணையதளத்தில் தங்களது நிறுவனங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அவா் பேசினர்.
இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த 180 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் தலைவா் சி.கே.மோகன், பொதுச் செயலா் எஸ்.வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்