அரசமைப்புச் சட்டத்தை சாட்சியாக வைத்து திருமணம் செய்துகொண்ட மணமக்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரானவற்றை ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்து வருகிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி ஒற்றுமையாக போராடி வருகின்றன. எனினும், பாஜக மக்களுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட, பாஜகவினர், பாஜக வேட்பாளர்கள், தலைவர்கள் என அனைவரும் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்.
அதனை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினர். இதனால் எதிர்க்கட்சிகள் குறிப்பாக ராகுல் காந்தி அரசமைப்புச் புத்தகத்தை கையில் வைத்தும் பிரச்சாரம் செய்தார்.
சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள கபு என்ற பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பட்டதாரிகளான பிரதிமா – ஏமன் இணையர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி மதச்சடங்குகள், மங்கள் சூத்ர(தாலி), குங்குமம், மேல தாளம் உள்ளிட்டவை எதுவும் இல்லாமல், மிகவும் எளிமை முறையில் திருமணம் செய்துகொள்ள எண்ணினர்.
அதன்படி இந்த மணமக்கள் அரசமைப்புச் சட்டப் புத்தகம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஒளிப்படத்தை சாட்சியாக வைத்து, திருமண உறுதிமொழியை ஊர் பெரியவர்கள் வாசிக்க அதனை இருவருமே வாசித்து ஊரார் வாழ்த்துக்களோடு திருமணம் செய்துகொண்டனர்.
பிரதிமா – ஏமன் ஆகியோரின் முடிவு அவர்கள் பெற்றோர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்வு அனைவர் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த நிகழ்வு குறித்து மணமகன் ஏமன் கூறுகையில், “ஆடம்பர செலவுகள், சம்பிரதாயங்கள் இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. இந்த முடிவு எங்களது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்” என்றார்.