அண்ணா பல்கலைக்கழகத்தில்
புதிய கட்டுப்பாடுகள்
சென்னை, டிச.27 மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிகழ்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்முறை நிகழ்வை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளேயும் நுழைவு வாயில்கள் முன்பும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், வெளிநபர்கள் சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் மட்டுமே உள்ள செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
ஏறத்தாழ 190 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. பாலியல் வன்முறை நிகழ்வை தொடர்ந்து, எந்தெந்த வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை, காவல்துறையினர் 2 ட்ரோன்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையே, பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகம் சார்பில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அண்ணா பல்லைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் கே.எஸ்.ஈஸ்வரகுமார், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி டீன் எஸ்.மீனாட்சி சுந்தரம், கல்லூரி டீன் கே.ஆர்.சீதாலட்சுமி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அடையாள அட்டை
அதன்படி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
யாரேனும் அடையாள அட்டையை தொலைத்திருந்தால் உடனடியாக மாற்று அடையாள அட்டை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் சில கட்டுப்பாடுகளும் சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி சான்றிதழ்படி முடிவு செய்ய வேண்டும்
வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, டிச.27 ஒருவரின் வயதை தீர்மா னிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு, அரி யானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலைவிபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு இழப் பீடு கோரி, ரோதக்கில் உள்ள மோட்டார்வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவரு டைய குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
பள்ளி சான்றிதழ் அடிப்படை யில், இறந்தவரின் வயது 45 என்று கணக்கிட்ட தீர்ப்பாயம், அவருடைய குடும்பத்துக்கு ரூ.19 லட்சத்து 35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தர விட்டது. அதை எதிர்த்து பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆதார் அட்டை அடிப் படையில் கணக்கிட்டால், இறந்த வரின் வயது 47 என்று கூறிய உயர் நீதிமன்றம், இழப்பீட்டு தொகையை ரூ.9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத்தது.
இந்த உத்தரவை எதிர்த்து. இறந்த நபரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பள்ளிச் சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 தான் என்று அவர்கள் கூறினர்.
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு அளித்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது:- 2015ஆம் ஆண்டின், சிறார் நீதி சட்டத்தின் 94ஆவது பிரிவின் படி, பள்ளி சான் றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்ததேதி அடிப்படையில்தான் வயது தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஆதார் அட்டை வழங்கும் தனித்துவ அடையாள ஆணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், “ஆதார் அட்டையை அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பிறந்த தேதிக்கு அது ஆதாரம் அல்ல” என்று கூறியுள்ளது. ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி இத்தக வலை தெரிவித்துள்ளது.
எனவே, வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.