திராவிட மடல் அரசு அதனை ஏற்க மறுப்பது வரவேற்கத்தக்கது!
ஈரோட்டில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
ஈரோடு, டிச.27 மனுதர்மத்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கின்ற முயற்சிதான் ஒன்றிய அரசின் 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு ‘‘ஆல்பாஸ் திட்டம் ரத்து” என்பது, தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றக்கூடிய முதலமைச்சரின் ‘திராவிட மாடல்’ அரசு இதில் மிகத் தெளிவாக இதனை எதிர்க்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
25.12.2024 அன்று ஈரோட்டிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
ஒரு கெட்ட வாய்ப்பு!
அருமைத் தோழர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுடைய இல்லத்திற்குப் பலமுறை வந்துள்ளேன், அவரே எதிர்கொண்டு அழைத்த நிலை மாறி, இன்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய நினைவிடத்திற்குச் சென்று, அவருக்குப் புகழ்வணக்கம் செலுத்தக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது ஒரு கெட்ட வாய்ப்பே ஆகும்.
அவர் இடம் யாராலும்
எளிதில் நிரப்பப்பட முடியாதது!
தந்தை பெரியார் அவர்கள் ‘‘இயற்கையின் கோணல் புத்தி” என்று ஒரு வார்த்தையைச் சொல்லுவார். மிக சிக்கலான ஓர் அரசியல் சூழ்நிலையில்கூட, எதையும் துணிச்சலாகவும், தன் கருத்தை மாற்றிக்கொள்ளாத உறுதி உள்ளவராகவும் இருக்கக்கூடிய அருமைத் தோழர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு என்பது, இழக்கக் கூடாத ஒருவரை இழந்தோம் என்பது மட்டுமல்ல; எளிதில் அவர் இடம், யாராலும் நிரப்பப்பட முடியாத ஒன்றாகும்.
அதுவும் இந்தக் குடும்பத்தில், திருமகன் ஈ.வெ.ரா. அவர்களுடைய மறைவையே, நாம் மறக்க முடியாத நிலையில், அந்தச் சோகத்திலிருந்து வெளியே வருவதற்குமுன், இப்படி இன்னொரு அதிர்ச்சிக்குரிய ஒரு நிகழ்வு நடந்தது என்பது, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரிய சோகமாகும்.
பொதுவாழ்க்கைக்கும் பாடமாக இருந்து நமக்கெல்லாம் வழிகாட்டுகிறார்!
பொதுவாழ்க்கையில் அவர் சம்பாதித்ததெல்லாம் புகழ், பெருமை என்பதுதான். அப்படிப்பட்ட எடுத்துக்காட்டான ஒருவர், இன்றைக்குப் படமாக மாறிவிட்டார். படமாக மட்டுமல்ல, என்றைக்கும் மிகச் சிறந்த பொதுவாழ்க்கைக்கும், கொள்கை உணர்வோடு இருக்கக்கூடிய பொதுவாழ்க்கைக்கும் அவர்தான் பாடமாக இருந்து அவர்தான் நமக்கெல்லாம் வழிகாட்டுகிறார்.
ஒன்றிய அரசின் ‘‘ஆல்பாஸ்” நடைமுறை ரத்து!
செய்தியாளர்: 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களது ‘‘ஆல்பாஸ்” நடைமுறையை ரத்து செய்திருக்கிறதே ஒன்றிய அரசு, அதுபற்றி தங்கள் கருத்து என்ன?
ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை மாநில அரசுகள் பின்பற்றவேண்டும் என்கிற அவசியம் இல்லை!
தமிழர் தலைவர்: நம்முடைய தமிழ்நாடு அரசு கல்வியமைச்சர் மூலமாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
கல்விப் பட்டியல் என்பது ஒத்திசைவுப் பட்டியலில் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கிறது.
ஒன்றிய அரசு ஒரு நிலைப்பாடு எடுத்தால், அதையே மாநில அரசுகள் பின்பற்றவேண்டும் என்கிற அவசியம் கிடையாது.ஆகவே, தமிழ்நாடு கல்வியமைச்சர் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.
‘‘ஒன்றிய அரசு இதனைச் சொல்லியிருக்கலாம். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், பழைய நிலையே நீடிக்கும்” என்று கூறியுள்ளார்.
கோவிட் தொற்று வந்த காலகட்டத்தில், அந்தத் தொற்று எல்லாப் பிள்ளைகளுக்கும் மனதளவில் ஒரு சங்கடத்தை, தளர்ச்சியை உண்டாக்கியது. அதிலிருந்து அவர்கள் வெளியே வரவே நீண்ட காலமாயிற்று.
மாணவர்களின் மனநிலையை மேலும் பாதிக்கும்
5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்பது மாணவர்களின் மனநிலையை மேலும் பாதிக்கும்.
ஆர்.எஸ்.எஸினுடைய மறைமுகத் திட்டம்தான்
நம்முடைய கல்வி அமைப்பைத் தகர்க்கவேண்டும் என்பதற்காகத்தான் இதனைச் செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸினுடைய மறைமுகத் திட்டம்தான் இது.
நெஸ்ட் தேர்வு, அந்தத் தேர்வு, இந்தத் தேர்வு என்று சொல்கிறார்கள். நம்முடைய மாணவர்கள் கல்லூரிக்கே செல்லக்கூடாது என்பதற்காக ‘‘விஸ்வகர்மா யோஜனா” என்ற திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.
பெரியார் கொள்கையைப் பின்பற்றக்கூடிய முதலமைச்சர்!
கைவினைஞர்களுக்கோ, அந்தக் கலைகளுக்கோ நாம் எதிரியல்ல. இதற்கும், ஜாதிக்கும் முடிச்சுப் போடக்கூடாது. தனித்தன்மையோடு, தமிழ்நாடு அரசு, ‘திராவிட மாடல்’ அரசு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய வழியில், பெரியார் கொள்கையைப் பின்பற்றக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் மிகத் தெளிவாக இருக்கிறார்.
ஆகவேதான், அந்தக் கொள்கையிலிருந்து அரசு மாறாது; மாறவும் விடமாட்டோம்.
தமிழ்நாடுதான் எல்லா துறைகளுக்கும் வழி காட்டியாக இருக்கிறது. கல்வித் துறையில் தனித்தன் மையோடு இருக்கக் கூடியது ‘திராவிட மாடல்’ அரசு.
மனுதர்மத்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கின்ற முயற்சி!
ஆகவே, மனுதர்மத்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கின்ற முயற்சிதான் ஒன்றிய அரசின் 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு ஆல்பாஸ் திட்டம் ரத்து என்பது.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.