தமிழர் தலைவர் ஆசிரியர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் என்பது அவருக்காக அல்ல; தமிழ்ச் சமுதாயத்திற்காக!
திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பிரிக்க முடியாது!
தந்தை பெரியாரின் கருஞ்சட்டைப் படை இருக்கும்வரை பயம் இல்லை!
ஒரத்தநாடு, டிச.27 ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் என்பது அவருக்காக அல்ல; இந்த தமிழ்ச் சமுதாயத்திற்காக! திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பிரிக்க முடியாது! தந்தை பெரியாரின் கருஞ்சட்டைப் படை இருக்கும்வரை பயம் இல்லை” என்று அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
22.12.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் மாலை 6 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 92 ஆவது பிறந்தநாள் விழா, ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ தமிழ்நாடு – கேரள முதலமைச்சர்களுக்குப் பாராட்டு, நன்றி! திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தொடக்கத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கலைக்குழு வினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி தலைமை வகித்து உரையாற்றினார்.
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் துரைராசு, ஒரத்தநாடு நகர தலைவர் ரவிச்சந்திரன், நகர இளைஞரணித் தலைவர் ச.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தொடக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர்
வழக்குரைஞர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் ஆகியோர் தொடக்க உரை நிகழ்த்தினர்.
உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழி யன், திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். ஒரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.
அமைச்சர் கோவி.செழியன் உணர்வுமிகு உரை
அமைச்சர் கோவி.செழியன் ஆற்றிய உரை வருமாறு:
திராவிட இயக்கத்தின் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்புடைய கொள்கைகளையும், பகுத்தறிவு கொள்கைகளையும் நாடு முழுவதும் பரப்பி வருகிற எனது அன்புச் சகோதரி மதிவதனி நீண்ட நெடிய நேரம் உரையாற்ற இருக்கிறார். தந்தை பெரியாரின் பயணத்தில், தடைக்கல்லையும் படிகளாக மாற்றுகிற ஆற்றல் எப்படி உண்டோ, அதை மீண்டும் உண்டு என்பதை ஒரத்தநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாள் நிகழ்ச்சி நிலை நாட்டியிருக்கிறது. ஒரத்தநாடு என்பதற்கு வேறொரு பெயரும் உண்டு. திராவிட இயக்கத்திற்கு, திராவிட கொள்கைக்கு அய்யா பிறந்த ஈரோடு எப்படி குருகுலமோ, பெரியார் திடல் எப்படி காப்பகமோ, அதுபோல திராவிடர் கழகத்திற்கு எஃகு கோட்டையாக இருக்கும் ஒரு பகுதி இந்த ஒரத்தநாடு. திராவிட இயக்கத்திற்கு உழைத்த, பாடுபட்ட தலைவர்கள் அதிகம் இருப்பதால்தான் கண்ணந்தங்குடி, கீழையூரில் தமிழர் திருநாள் பொங்கல் விழா– மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழாவில் பங்கேற்க வர வேண்டும் என்று அன்பு அண்ணன் ஜெயக்குமார் அன்போடு அழைத்தார். அடுத்த நிகழ்ச்சிக்கும் அழைப்பிதழ்கள் சேர்த்தே தந்தார்கள்.
கருப்புச்சட்டைக்காரர்கள் அழைத்தால்
ஓடோடி வந்துவிடும் எளிய தொண்டன்
தாய்க்கழகம் அழைத்து விட்டது, சேய் கழகத்தின் பிள்ளை இந்த கோவி.செழியனுக்கு வேறு என்ன வேலை? அழைத்தது நீங்கள் அல்லவா, தவிர்க்க முடியுமா? ஆயிரம் சுமைகள் இருந்தாலும் வேலைகள், இருந்தாலும் கருப்புச்சட்டைக்காரர்கள் அழைத்தால் ஓடோடி வந்துவிடும் எளிய தொண்டன் இந்த கோவி.செழியன்.
காரணம் எங்கள் ரத்தத்தில் ஊறிக் கிடக்கும் திராவிட சிந்தனையும், பெரியார் வென்றெடுத்த கொள்கை உணர்வும் என் உதிரத்தில் ஓடுகிற காரணத்தால்,
வைக்கம் நூற்றாண்டு விழா எப்பேர்ப்பட்ட வரலாற்று பொக்கிசம்! நூற்றாண்டு (Dravidian milestone) கண்ட இயக்கம். திராவிட இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா, தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழா, அறிஞர் அண்ணாவிற்கு நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா, இனமானப் பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா என்று இத்தனை நூற்றாண்டுகள் கண்ட அரசியல் இயக்கம் திராவிட இயக்கம் என்ற வரலாறு வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லை.
தமிழர் தலைவர் ஆசிரியர் நூற்றாண்டு காணவேண்டும்!
இன்றைக்கும் ஆசைப்படுகிறோம்; பிறந்தநாள் விழா காணுகின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், அன்னை மணியம்மையார் ஆகியோர் நூற்றாண்டு கடந்தும் கொள்கையால் வாழ்வதைப்போன்று, சிறப்புற்ற தலைவராக அய்யா ஆசிரியர் இருக்க வேண்டும். அதற்கு ஒரத்த நாட்டின் கழகத் தோழர்களும் வலுவூட்ட வேண்டும். அவர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் என்பது அவருக்காக அல்ல, இந்த தமிழ்ச் சமுதாயத்திற்காக,தமிழ் சிந்தனையாளர்களுக்காக.
பெரியார் வென்றெடுத்த கொள்கை கோட்பாட்டினைக் கொண்ட தீர்மானங்கள்!
இன்றைக்குக் கூட நமது முதலமைச்சர்18 தீர்மானங்களை கொண்டு வந்தார். அதில் அரசியல் தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்கள் அய்யா பெரியார் வென்றெடுத்த கொள்கை கோட்பாட்டினைக் கொண்ட தீர்மானங்கள். ‘‘கருப்புச்சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன்’’ என்பதைப் போல கருஞ்சட்டை படை இருக்கும் வரை தளபதி பெரியாரின் பயணத்தைத் தொடர்வார். ஸநாதனத்திற்கு எதிர்ப்பு வந்த போது சளைத்துப் போனாரா? சட்டப்பேரவையில் தலைவர் கலைஞரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி – அரசியல் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் அரசு சார்பில் அழைக்க வேண்டிய பொறுப்பு அரசு கொறடாவாகிய உங்களுக்கு வழங்குகிறேன் என்றார் முதலமைச்சர்.
அவை முன்னவர், முதலமைச்சர், பேரவைத் தலைவர், பேரவை துணைத் தலைவர் மற்றும் நான் அனைவரும் கலந்தாலோசித்து, யார், யாருக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று பட்டியல் தயார் செய்தோம். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் பெயரும் அதில் இடம்பெற்றது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தோழர் முத்தரசன்,தோழர் கே.பாலகிருஷ்ணன் என எல்லோரது பெயர்களும் இருந்தன.
முக.ஸ்டாலினின் பிரதிநிதித்துவம் ஆசிரியருக்கு உண்டு!
பெயர்ப் பட்டியல் முடியும் நேரத்தில் முதலமைச்சர் என்னை அழைத்துக் கேட்டார். ‘‘எல்லோர் பெயர்களும் பட்டியலில் இருக்கிறதே, ஆசிரியரின் பெயரும் அதில் இருக்கிறதா? என்று கேட்டார். நான் வெட்கித் தலைகுனிந்து சொன்னேன், ‘‘சட்டமன்ற பிரதிநிதித்துவம் இல்லாததால் அவர் பெயர் இல்லை’’ என்றேன். அதற்கு முதலமைச்சர் சொன்னார், ‘‘சட்டமன்ற பிரதிநிதித்துவம் திராவிடர் கழகத்திற்கு இல்லை என்றாலும், இந்த முக.ஸ்டாலினின் பிரதிநிதித்துவம் ஆசிரியருக்கு உண்டு. எனவே, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை அழைக்க வேண்டும்’’ என்றார்.
நான் அறிந்த வரையில் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத தலைவர் சட்டமன்றத்தில் அழைக்கப்பட்டு, அமர்த்தப்பட்டார் என்றால் அது ஆசிரியர் கி.வீரமணியை தவிர, வேறு யாரும் இல்லை.சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஆசிரியரை முதலமைச்சர் கைப்பிடித்து அழைத்து சட்டமன்றத்தில் அமர வைத்தார். இதுவே திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பிரிக்க முடியாது என்பதற்கு இன்னொரு சாட்சி.
தலைவர் கலைஞர் கூறியது
‘‘எனக்கு ஆயிரம் இன்னல்கள், துன்பங்கள் துயரங்கள் ஏற்படுகின்ற போதெல்லாம் நான் மருந்து தேடிச் செல்கின்ற இடம் பெரியார் திடல். அதுதானே மாமருந்து. நான் அறிந்தவரை, மேடையில் ஆதாரங்களோடு பேசு கின்ற ஒரே தலைவர் ஆசிரியர் மட்டும் தான்” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அறிக்கைகள் வெளியிடுவது என்பது வேறு; அரசி யல் கருத்திற்கு, ஆனால், ஆக்கப்பூர்வமான கருத்து தேவை என்பதற்காக ஆசிரியர் அவர்கள் இரவு 12 மணி வரை காத்திருந்து, நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல் வாங்கிப் படித்து பிறகு அறிக்கை வெளியிடுகிறார்.
அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளிலும் அம்பேத்கரின் படம்!
இந்தியாவின் Constitution எழுதப்பட்ட 75 ஆவது ஆண்டு விழா; அதற்காக முதலமைச்சர் கூறியது, ‘‘அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளிலும் அம்பேத்கரின் படம் வைத்து Constitution விழா எடுக்க வேண்டும்’’ என்று கூறினார். நாடாளுமன்றத்தில் உள்ள நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும் ‘‘அம்பேத்கர், அம்பேத்கர்’’ என்ற முழக்கமிட்டு, அம்பேத்கர் பெயரை விளிப்பார்கள்; பெரியார் பெயரை சொல்வார்கள். காரணம், இது அம்பேத்கர் பூமி, பெரியார் மண் என்று முழங்கினர்.
அமித்ஷாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; பட்டென எழுந்து, ‘‘அம்பேத்கர் அம்பேத்கர் என்று கூறுகிறீர்களே! அதற்குப் பதிலாக நீங்கள் கடவுளின் பெயரை உச்சரித்தால், உங்களுக்கு புண்ணியமாவது கிடைத்திருக்கும்’’ என்றார்.
திமுகவின் சக்தியை எந்தக் கொம்பனாலும் அழிக்கமுடியாது!
மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டு, ‘‘பாவம் செய்தவர்களுக்குத்தான் ‘புண்ணியம்’ தேவை; நாங்கள் அதில் உடன்பட்டவர்கள் இல்லை. மனிதப் பற்றாளர்கள். மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் திமுகவின் சக்தியை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
அறிவுப் பெட்டகம் தந்தை பெரியார்
பெரியார் பேசும் மேடைகளில் துண்டு சீட்டு எழுதி கேள்வி கேட்பார்கள். அப்படி ஒரு நாள் ஒரு துண்டு சீட்டில், ‘‘நான் ஒரு முட்டாள்’’ என்று எழுதி இருந்தது. அதை பெரியார் பிரித்து, ‘‘நான் ஒரு முட்டாள்’’ என்று படிப்பார்; அதைப் பார்த்து கேலிக் கிண்டலுமாக சிரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நம் அறிவுப் பெட்டகம் தந்தை பெரியார் அவர்கள், அதைப் பிரித்து, ‘‘யாரோ ஒரு தோழர் கேள்வியை எழுதாமல், அவருடைய பெயரை மட்டும் எழுதி இருக்கிறார். அந்தத் தோழர் எழுந்து நின்று கேள்வி கேட்கலாம்’’ என்று கூறினார்.
நேரு ஒருமுறை சென்னைக்கு வருகிறார்; சென்னையில் இரண்டு நாள்கள் தங்குகிறார். அவர் ஒரு பகுத்தறிவுவாதி. ‘‘உலக நாடுகளுடன் ஒப்பிடப்பட்ட இந்தியாவின் சட்டம் (World Comparison to Indian Law) என்னும் ஆங்கில சட்ட வழி புத்தகம் இருக்கிறது. அதைப் படிக்க முடியவில்லை. அந்தப் புத்தகம் டில்லியிலும், பம்பாயிலும் மட்டுமே கிடைக்கும். அதற்கு அடுத்ததாக சென்னையில் கிடைக்கும். சென்னை வருகிற பொழுது அந்தப் புத்தகம் கன்னிமாரா நூலகத்தில் கிடைக்கும்; எனவே, அந்தப் புத்தகத்தை வாங்கி வாருங்கள்” என்று தனது உதவியாளரிடம் கூறுகிறார்.
அவரின் உதவியாளர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி. அவர் நூலகத்திற்கு வந்து நூலகரிடம் விஷயத்தைச் சொல்லி, அந்த நூலை கேட்கிறார்.அந்த நூலகர் உள்ளே சென்று தேடி விட்டு, பிறகு வந்து அந்த நூலை இப்பொழுதுதான் ஒருவர் வாங்கிக் கொண்டு சென்றதாகக் கூறுகிறார்.
‘‘ஒரு தோழர் அந்த புத்தகத்தை வாங்கிச் சென்று இருக்கி றார். நாளை காலை 10 மணிக்கு அந்த புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்’’ என்று நேருவிடம் கூறினார் அவரது உதவியாளர்.
நேருவிற்கு ஆச்சரியம்! புத்தகம் வந்தே இரண்டு மாதம்தான் ஆகிறது. புத்தகத்தைப் படிக்க முடியவில்லை; இங்கு வந்து படிக்கலாம் என்று பார்த்தால், எனக்கு முன்பாக ஒருவர் அதை வாங்கி படிக்கிறாரா? என்று ஆச்சரியப்பட்டு, யார் அந்தப் புத்தகத்தை படிக்க எடுத்துச் சென்றார்? என எண்ணி நேருவிற்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருந்தார்.
மறுநாள் காலை, அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு வர தன் உதவியாளரை அனுப்பியிருந்தார் நேரு. நூலகரும் அந்தப் புத்தகத்தினை நேருவின் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.அதைப் பிரித்துப் பார்க்கிறார் நேரு. நான் படிக்க நினைத்த ஆங்கில புத்தகத்தை (World Comparison to Indian Law) ஒருவர், இரண்டு முறை வாங்கி படித்திருக்கிறார்; அவரை பார்க்க வேண்டும் என தன் உதவியாளரை அனுப்பி, அந்த நூலகரிடம் விவரம் கேட்டு வரச் சொன்னார். அந்த நூலகர் ஒரு துண்டு சீட்டில் பெயரை எழுதிக் கொடுத்தார். நேரு அந்தத் துண்டுச் சீட்டைப் பிரித்து பார்த்தார்.
அதிலிருந்த பெயர் சி.என்.அண்ணாதுரை. இப்படிப் படித்துப் படித்து பேசிப் பேசி, வளர்ந்த இயக்கம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும்.
லாரி ஓட்டுநரும் – அண்ணாவும்!
ஒருமுறை விழுப்புரம் கூட்டு ரோடு உளுந்தூர்பேட்டை பிரிவு சாலையில் ஏழு, எட்டு நபர்கள் நிற்கிறார்கள். ஒரு மணல் லாரி வேகமாக வருகிறது, அவர்களை நோக்கி. அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அந்த லாரியை மறித்து, ‘‘அய்யா எங்களை உளுந்தூர்பேட்டை வரை அழைத்துச் செல்லுங்கள்’’ என்று கேட்டனர். லாரியை நிறுத்திய ஓட்டுநர் சொன்னாராம், ‘‘நான் அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்க உளுந்தூர்பேட்டைக்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறேன். உங்களை நிறுத்தி, ஏற்றி இறக்கி விட்டுக் கொண்டு செல்ல கால தாமதமாகும். எனவே உங்களை அழைத்துச் செல்ல முடியாது’’ என்று கூறி, ஓட்டுநர் அங்கிருந்து கிளம்பும்போது, அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர், ‘‘அய்யா, அண்ணாவின் பேச்சைக் கேட்க வேகமாக போவதாகச் சொல்கிறீர்களே, அந்த அண்ணாதுரையே நான்தான்’’ என்று சொன்னாராம். இப்படி எவ்வளவு கஷ்டம், எவ்வளவு உழைப்பு. அவ்வளவு எளிதில் கிடைத்து விட்டதா? இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி. திடீரென வந்ததா – பெரியாரின் புரட்சி!
நாடு முழுவதும் கொள்கை பிரச்சாரம் செய்த ஒரு ஏழைத்தோழன் நான்!
இப்படிப்பட்ட இயக்கத்தை வழி நடத்துகின்ற பெருமை இன்றளவும் 29 வயது இளைஞரைப் போல் கருஞ்சட்டைப் போராளி ஆசிரியரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? எனவே தான் நாம் அவரின் பிறந்த நாளை, விழா எடுத்துக் கொண்டாடுகிறோம்.இங்கு பேசுகின்ற இந்த கோவி.செழியன் பணக்காரனா? மிட்டா மிராசா? என்னுடைய தாய் யார்? தந்தை யார்? என்று எதுவும் தெரியாது.ஆள் பலம் இல்லை, பண பலம் இல்லை, படைபலம் இல்லை.லட்சக்கணக்கான மேடைகளில் ஏறிச் சொல்லுவேன், இந்த கோவி.செழியனுக்கு பின்புலம் என்ன என்று பெரியார் வாழ்க! அண்ணா வாழ்க! தலைவர் கலைஞர் வாழ்க! திராவிட சிந்தனை வாழ்க! திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்க! என்று 35 ஆண்டு காலம் நாடு முழுவதும் தோழர் மதிவதனியைப் போல் கொள்கைப் பிரச்சாரம் செய்த ஒரு ஏழைத்தோழன்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில், ஒரே தொகுதியில் மூன்று முறை நிறுத்தி வெற்றி பெற வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம்; துணை நின்ற இயக்கம் எங்கள் தாய்க் கழகமான திராவிடர் கழகம்.
ஒரு தாழ்த்தப்பட்டவரை அரசு கொறடாவாக அறிவித்தது திராவிட முன்னேற்றக் கழகம்!
கருஞ்சட்டைப் போராளிகள் வீதி வீதியாகச் சென்று போராடினார்கள்.இரண்டு முறை எதிர்க்கட்சி, மூன்றாவது முறை டெல்டா மாவட்டத்திற்கு வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தோம்; தலைமைக் கழகம், ‘‘அரசு கொறடா’’ வாய்ப்பு வழங்கியது. மூன்று ஆண்டுகள் கடந்த பின்பு, அமைச்சரவையில் மாற்றம் என்று செய்தி வந்தது. வார பத்திரிகை, மாத பத்திரிகை என அனைத்து சமூக ஊடகங்களிலும் இச்செய்தி பரவியது. கிடைக்கும், இல்லை யென்றாலும் நல்ல பதவியை தலைவர் தருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். அரசு கொறடா என்பது முதலமைச்சரின் நம்பிக்கையை பெற்றவர்களுக்குக் கிடைப்பது என்று அனைத்துக் கட்சிகளிலும் கூறுவார்கள். இந்த ஒரத்தநாட்டில் சொல்கிறேன் எத்தனையோ அரசு கொறடாக்கள் இருந்தாலும், ஒரு தாழ்த்தப்பட்ட தோழனை கோவி.செழியனை முதல் முறையாக அரசு கொறடாவாக அறிவித்தது திராவிட முன்னேற்றக் கழகமும், தலைவர் ஸ்டாலின் அவர்களும்தான்.
காஞ்சிபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா; நமது ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டார். பவள விழா முடிந்து நானும், பேரவைத் துணைத் தலைவரும் காரில் ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து, ‘‘கோவி.செழியன் வாழ்த்துகள்’’ என்றார். ‘‘நன்றி தலைவரே’’ என்று கூறினேன், காரணம் கூட கேட்கவில்லை.
பிறகு கைப்பேசி எடுத்துப் பார்த்தபோது, அமைச்சர வையில் புதிய மாற்றம்: நான்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், சேலம் ராஜேந்திரன், கோவி.செழியன் என்று அறிவிப்பு வந்துகொண்டிருந்தது.
திராவிட இயக்கமும், திராவிட சிந்தனையும்தான்!
சில நிமிடங்களில் முக்கிய செய்தியாக, ‘‘யார் யாருக்கு எந்தத் துறை என்று வந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு துறை. இதில் கோவி.செழியனுக்கு என்ன துறை? என்று பார்த்தோம். உயர்கல்வித்துறை அமைச்சர். ‘‘கற்றல் கற்பித்தலும் அவன் தொழில்; அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரிகளுக்கு மட்டுமானதாக இருந்தது.’’ ஒருவேளை காலில் பிறந்த சூத்திரன் கல்வி கற்றால் அவனுக்குத் தண்டனை அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்பது மனுஸ்மிருதி – மனுநீதி . ஆனால் பெரியாரின் புரட்சி என்னவென்று தெரிகிறதா? அய்யா ஆசிரியரின் உழைப்பு என்னவென்று தெரிகிறதா? அறிஞர் அண்ணாவின் ஆற்றல் என்னவென்று தெரிகிறதா? இவர்களைத் தாங்கிப் பிடித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் படைப்பு. கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஏழை, எளிய தோழன். இன்னும் சொல்லப்போனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த, குடிசை வீட்டில் பிறந்த தோழன் கோவி.செழியனை உயர்கல்வித்துறை அமைச்சராக ஆக்கியது திராவிட இயக்கமும், திராவிட சிந்தனையும், திராவிட முன்னேற்ற கழகமும்தான். இந்த இயக்கத்தையும், இந்த சிந்தனையையும் யாராலும் வெல்லவும் முடியாது, தடுக்கவும் முடியாது.
திராவிட இயக்க சிந்தனையை வாழ்நாள் முழுக்கப் பேசலாம்!
என்னைப் போன்ற கோடிக்கணக்கான கோவி.செழியன்கள் இருக்கும் வரை தந்தை பெரியாரின் புகழ் இம்மண்ணில் இருக்கும். ஒரு மதிவதனி முடங்கிப் போனால் ஆயிரம் மதிவதனிகளை பெரியார் பிரசவித்துக் கொண்டிருப்பார். நம் இனமானக் காவலர் நம் ஆசிரியர் நம்மை நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைப்பார். எனவே, பெரியாரின் சிந்தனை, அண்ணாவின் சிந்தனை கலைஞரின் சிந்தனையை பேசினால் வாழ் நாள் முழுக்கப் பேசலாம்.
– இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் உணர்ச்சி மிகுந்த கருத்துரை நிகழ்த்தினார்.