சுதேசமித்திரன் பத்திரிகை “அதிகார வர்க்கத்திற்கு ஒரு யோசனை” என்கிற தலைப்பின்கீழ் சிறீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பாட்னா முடிவுக்கு விரோதமாய் தஞ்சையில் சுயராஜ்யக் கட்சியார் தேசத்திற்கு நன்மை செய்ய ஏற்பட்டவர்கள் அல்லவென்றும் சுயராஜ்யக் கட்சியாரும் இதரர்களும் கோருகிற சுயராஜ்யம் இந்தியாவுக்கு வேண்டியதில்லை என்று சொன்னாராம் என்றும், காங்கிரஸ்காரர் இப்படிச் சொல்வது அழகல்லவென்றும் சென்னை கீழ்ப்பாக்கம் தேர்தல் சிறீமான் நாயக்கர் மனதை வாட்டி வருகிறதென்றும் இப்படிப்பட்டவர் ஜஸ்டிஸ் கட்சியிலோ வேறு கட்சியிலோ சேர்ந்து கொள்ளலாம் என்றும் எழுதி, நாயக்கர் சுயராஜ்யமே வேண்டாமென்று பேசியதாக பொது ஜனங்கள் நினைக்கும்படி எழுதியிருக்கிறது. இவ்வெழுத்துக்களில் எவ்வளவு அயோக்கியத் தனமும் அற்பத்தனமும் நிறைந்திருக்கிறது என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்வார்கள்.
இதற்குமுன் பல தடவைகளில் நாம் குறிப்பிட்டிருப்பதை, இந்த பிராமண பத்திரிகை கவனிக்காமல் மானம் ஈனமின்றி மறுபடி அதே காரியத்தைச் செய்கிறது.தஞ்சையில், நமக்கு வேண்டிய சுயராஜ்யம் என்ன என்பதைப் பற்றியும், வேண்டாத சுயராஜ்யம் என்ன என்பதைப் பற்றியும் கதர் தீண்டாமையைப் பற்றி பேசும் பொழுது 2,3 மணி நேரம் விபரமாய் பேசியிருக்கிறார்.
அந்தப் பேச்சுக்களைக் கிரமமாய் எடுத்துப் போடாமல் அவர் பேசிய பேச்சிலுள்ள எழுத்துகளைப் பிரித்து தனக்கு வேண்டியபடி வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டு தங்கள் ஜாதி புத்தியை காட்டியிருக்கிறது.
நாட்டில் தரித்திரம் ஒழிவதும்
சுயராஜ்யம் வேண்டாமென்று இந்தியாவில் ஒரு கட்சியும் சொல்ல வில்லை. சுயராஜ்யம் என்பது என்ன என்பதுதான் இப்போது தகராறி லிருக்கிறது. பிராமணர்கள் படிப்பதும் சர்க்காரில் உத்தியோகம் உண்டாக்கு வதும், தம்பிக்கும், மகனுக்கும், தங்கள் கூட்டத்தாருக்கும் உத்தியோகம் சம்பாதித்து கொடுப்பதும்தான் சுயராஜ்யம் என்று சிலரும் சில கட்சிக்காரரும் நினைக்கிறார்கள். ஏழைகள் வயிறாறச் சாப்பிடுவதும், நாட்டில் கைத் தொழில்கள் ஓங்கித் தொழிலாளர் பிழைப்பதும், நாட்டில் தரித்திரம் ஒழிவதும், மனிதர் எல்லோரும் சமம் என்ற உணர்ச்சியில் சுயமரியாதையுடன் வாழ்வதும்தான் சுயராஜ்யம் என்று மகாத்மா உள்பட சிலர் நினைக்கிறார்கள். அதைத்தான் நாம் தேடுகிறோம். இரண்டாவதாக, சுயராஜ்யம், சுயராஜ்யக் கட்சியாரால் வருமானால் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று மகாத்மா சொல்வது உண்மைதான். ஆனால் சுயராஜ்யக் கட்சியார் திட்டத்தில் இவ்வித சுயராஜ்யம் வருமென்கிற நம்பிக்கை எனக்கில்லை. அதனால்தான் நான் அதில் சேரவில்லை என்கிறார். இந்த இரண்டாவது பாகத்தை விட்டுவிட்டு முதல் பாகத்தை மாத்திரம் தங்கள் பத்திரிகைகளில் எழுதி ஏமாற்றப் பார்த்தால் யார் ஒப்புவார்கள். இதைப்பற்றி விவரமாக அடுத்த வாரம் எழுதுவோம்.
– குடிஅரசு – துணைத் தலையங்கம் – 25.10.1925