நல்லகண்ணுவின் 100ஆவது பிறந்த நாள் பிரிந்து நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : இரா. முத்தரசன் விருப்பம்

2 Min Read

சென்னை, டிச.26 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சென்னையில் நேற்று (25.12.2024) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ஆம் ஆண்டு டிச.26-ஆம் தேதி கான்பூரில் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்ட நாளும், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவும் ஒரே ஆண்டு, மாதம், தேதியில் பிறந்தது குறிப்பிடத்தக்கது. கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி கட்சி தொடங்கப்பட்ட கான்பூரில் நடைபெறும் விழாவில் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் விழாவில், கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட கொடிக் கம்பத்தில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கொடியேற்றி நூற்றாண்டு விழாவை தொடங்கிவைக்கிறார்.
அதுபோல தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி உள்பட அனைத்துப் பகுதிகளிலும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடியேற்றப்படுகிறது என்று முத்தரசன் தெரிவித்தார்.

பிளவு
அதையடுத்து கம்யூனிஸ்டு கட்சிகள் இணைப்பு குறித்து கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே 1964-இல் பிளவு ஏற்பட்டது. அது நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மத்தியில் பாஜக 3-ஆவது முறையாக ஆட்சி செய்கிறது. தற்போது நாடு இருக்கும் நிலையை அனைவரும் அறிவர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத பாஜக சர்வாதிகாரம், பாசிச கொள்கைகளைக் கொண்டது. நாட்டை பாசிச பாதையில் கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரும் நோக்கில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடத்த முற்படுகின்றனர்.
மாநிலங்களின் அதிகாரங் களைப் பறிக்கின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு உரிய முறையில் வரி பகிர்வு நிதியைக் கொடுப்பதில்லை. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட கேரளா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்கவில்லை. வயநாடு பேரிடரை நேரில் வந்து பார்த்த பிரதமர் மோடி, உரிய நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், ஒரு பைசாகூட தரவில்லை.

ஒன்றிணைய வேண்டும்
நாட்டு மக்களுக்கு எதிராக பாஜக செயல்படும் இந்த வேளையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுபட்டு செயல்படுவது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லதல்ல. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தவரை 1964-ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலை வர வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் . இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *