தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கடந்த 24ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், நெகிழ்ச்சியும், உணர்ச்சியும், எழுச்சியும் மிகுந்தவை!
தந்தை பெரியார் மறைவுக்குப்பின், அடுத்த பிறந்த நாளான 1974 செப்டம்பர் 17 அன்று சென்னை பெரியார் திடலில். பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வு மய்யம் – தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் திறந்து வைத்தார். கல்வி அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். அன்னை மணியம்மையார் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்த நாளில் இந்த நூலகம் விரிவாக்கப்பட்ட பகுதியை அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். (2.12.2007).
தந்தை பெரியார் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று முதல் நாள் (24.12.2024) பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வு மய்யப் பொன் விழா – புதிய எணினி (Digital) நூலகத் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த அறிவுக் கருவூலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு
மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து எழுச்சியுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நினைவுப் பரிசாக கைத்தடி ஒன்றை வழங்கியதுதான் உச்சமானது. அரங்கமே அதிரும் வகையில் அனைவரும் எழுந்திருந்து கரஒலி எழுப்பியது கண் கொள்ளாக் காட்சியாகும்.
முதலமைச்சர் அவர்களே மனந் திறந்து அந்த நினைவுப் பரிசைக் குறித்து விளம்பினார்.
‘‘எனக்கு எத்தனையோ விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அந்த விருதுகள் எல்லாம் இந்த விருதுக்கு ஈடாகாது இந்த விருதைப் பெறும் பொழுது என்னையேநான் மறந்தேன்’’ என்று சொன்ன பொழுது ஒரு நெகிழ்ச்சி இருந்ததைக் காண முடிந்தது.
‘‘நம்மை எதிர் நோக்கும் தடைகளையும், விலங்குகளையும் தகர்ப்போம் என்பதற்கு அடையாளம்தான் இந்தப் பெரியாரின் கைத்தடி’’ என்று திராவிடர் கழகத் தலைவர் கூறியதில் மிக ஆழமான பொருளுண்டு.
கைத்தடி என்பது ஓர் உருவகம் – தந்தை பெரியார் தம் தத்துவம், அணுகுமுறைக்கான ஒரு சின்னம். வன்முறையல்ல – நன்முறைச் சின்னம் – போராட்ட உணர்வின் வடிவம்!
அதனை வழி மொழிகின்ற வகையில் தான் நமது மாண்புமிகு முதலமைச்சர் ‘திராவிட மாடலை’க் கேலி செய்பவர்களுக்கு இந்தக் கைத்தடி ஒன்று போதும்!’’ என்று பளிச் சென்று சாட்டையைச் சுழற்றினார்.
‘‘தந்தை பெரியார் கொள்கைகளை, வாழ்க்கை வரலாற்றை உள் வாங்கி புதிய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்போம்’’ என்று தெள்ளத் தெளிவாக – நேர்த்தியாகவே தனது உரையில் குறிப்பிட்டார் – சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தலைவர் நமது மானமிகு மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.
விஸ்வகர்மா யோஜனாவை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, புதிய கல்வி திட்டம் என்ற சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு என்னும் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்ப்பதிலும் சரி, உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு என்ற (EWS)சமூகநீதிக்கு எதிரான பொருளாதார அளவுகோலாக இருந்தாலும் சரி, மாநில உரிமைகளின் கழுத்தை நெரிக்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றாலும் சரி – இவற்றை எதிர்ப்பதில் தந்தை பெரியார் இருக்கிறார் – அவரின் போர்க்குணம் இருக்கிறது – திராவிடத் தத்துவம் தலை தூக்கி நிற்கிறது – அதற்கான அடையாளம்தான் திராவிடர் கழகத் தலைவர் வழங்கிய பெரியார் கைத்தடி என்னும் நினைவுப் பரிசு! அந்த அர்த்தத்தில்தான் நமது மாண்புமிகு முதலமைச்சரின் வழிமொழிதலும் இருந்தது.
இதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள்.
மதவாத அரசியலுக்கும் சரி, ஜாதிவாத அரசியலுக்கும் சரி; பழைமைவாத சித்தாந்தங்களுக்கும் சரி, மூடநம்பிக்கைகளை முதலீடாகக் கொண்டு மக்களை மயக்கும் நயவஞ்சக நரித்தனத்துக்கும் சரி இந்தக் கைத்தடி அவற்றைத் தகர்ப்பதற்கான தத்துவமாகும்.
இது அந்தத் திராவிட மாடலுக்கான அரசுக்கும், தமிழ்நாட் டிற்கும் மட்டுமே பொருந்தக் கூடியது என்று கருதக் கூடாது.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட பிணிகள் எங்கே தென்பட்டாலும், தலை தூக்கினாலும், தந்தை பெரியாரின் அந்தக் கைத்தடி என்ற சிந்தாந்த அடையாளம். அவற்றைத் தகர்ப்பதற்குப் பயன்படும்.
வைக்கத்திலே தீண்டாமை என்னும் நச்சுப் பாம்பின் உயிரைக் குடித்தது அந்தக் ‘கைத்தடி’ தான், சேரன்மாதேவி குருகுலத்தில் தாண்டவமாடிய வருணாசிரம விரியனின் தலையைக் கொய்ததும் அந்தக் கைத்தடிதான்.
‘‘ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி சாகடித்த பெருமை பெரியார் தைத்தடிக்கே உண்டு’’ என்று கவிஞர் கண்ணதாசன் தந்தை பெரியார் மறைந்த நேரத்தில் எழுதிய கவிதை வரிகள் நினைவிருக்கட்டும்!
வீதிகளிலும், குளங்களிலும், பொது இடங்களிலும் நடமாடிய ஜாதி விரியன், பெரியாரின் கைத்தடிக்கு ஆளாகி கோயில் கர்ப்பக் கிரகத்தில் பத்திரமாகப் பதுங்கிக் கொண்டது.
இந்தக் கர்ப்பக் கிரகத் தீண்டாமைக்கும் ஒரு முடிவை ஏற்படுத்தி, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் கிரீடத்தில் வரலாற்றில் என்றுமே மங்காத வைரக் கல்லைப் பொறித்து விட்டார் நமது மானமிகு ‘திராவிட மாடல்’ அரசின் தலைவர்.
தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் என்பது ஏதோ சம்பிரதாயமானது அல்ல. திராவிட சித்தாந்தத்தை மேலும் கூர் தீட்டுவதற்கான சாணைக்கால் – காலத்தின் கல்வெட்டு!
‘‘பெரியார் திடலுக்கு வரும் போதெல்லாம் மேலும் புத்துணர்ச்சியுடன்தான் திரும்புகிறேன்’’ என்று முதலமைச்சர் சொன்னது – நமது புதிய தலைமுறையினருக்கு விளங்கும் என்று கருதுகிறோம் விளங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
வாழ்க பெரியார்!
ஓங்கட்டும் பெரியார் கைத்தடி!!