மைக்ரோ பிளாஸ்டிக் எனும் நுண்நெகிழிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றி நாள்தோறும் ஆய்வுகள் வெளிவந்தபடி உள்ளன. இவற்றை நிரந்தரமாக அழிக்க விஞ்ஞானிகள் புது வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர். கனடாவைச் சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உணவுப் புழுக்களை (Mealworms) கொண்டு, பிளாஸ்டிக்குகளை அழிக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
இந்தப் புழுக்கள் இயற்கையில் இறந்த உயிரினங்களை உண்டு வாழ்பவை. 8 மாதங்கள் கூட இவற்றால் உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ முடியும். உணவு கிடைக்காதபோது கிடைக்கின்ற எந்தப் பொருளையும் இவற்றால் உண்டு வாழ முடியும்.
எனவே இவற்றை 30 நாட்கள் பட்டினி போட்டுப் பின்னர் நுண்நெகிழிகளை உணவாக இட்டனர். புழுக்கள் அவற்றை உட்கொண்டன. உண்ட நெகிழிகளில் மிகக் குறைந்த அளவே கழிவுகளாக வெளிவந்தன. நெகிழிகளை உட்கொண்டதால் அவற்றின் உடல் செயல்பாடுகள் பாதிப்படையவில்லை. விவசாய நிலத்தில் பூச்சிக் கொல்லிகளைப் போட்டு இந்தப் புழுக்களைக் கொன்று வருகிறோம். அதற்குப் பதிலாக இவற்றைப் பிடித்து வந்து நுண்நெகிழிகளை அழிக்கப் பயன்படுத்தலாம். இதன் வாயிலாக இயற்கையைக் காக்கலாம்.