கவிச்சுடர்
கவிதைப்பித்தன்
ஈரோட்டு நாயகனே! தமிழர் தங்கள்
இனமானச் சூரியனே! எட்டுத் திக்கும்
மார்தட்டிச் சுழன்றுவந்தாய்! மனித னுக்கு
மானமும் அறிவும்தான் அழகே என்றாய்!
கூர்மிக்கச் சிந்தனையால் குரல்கொ டுத்தாய்!
கொட்டாவித் துயில்கலைத்தாய்! எழுச்சி தந்தாய்!
போராடி உரிமைகளைப் பெற்றுத் தந்தாய்!
பொதுப்பணிக்கே கொடைதந்தாய் உனது வாழ்வை!
பாடிவைத்த பழமைகளைச் சாடி வைத்தாய்!
பாமரர்க்கும் பகுத்தறிவை விதைத்தாய்! மூடக்
காடெரித்த யுகக்கனலே! அய்யா, உன்றன்
கைத்தடியின் வளைவிலும்கம் பீரம் உண்டே!
தாடிவைத்த குழந்தைநீ சிரிக்கும் போதில்
தலைமுதல்பா தம்வரைக்கும் மகிழ்ச்சி பொங்கும்!
ஏடெடுத்தே நீ,கணைகள் தொடுக்கும் போதில்
எதிரிகளின் அடித்தளமே நொறுங்கிப் போகும்!
மூன்றுவிழுக் காடுள்ள ஒருகூட் டத்தின்
மூவாயி ரம்வருட ஆதிக் கத்தைச்
சான்றுசொல்லி உலகுக்கே எடுத்து ரைத்தாய்!
சனாதனத்தின் கொடுமைகளைத் தோலு ரித்தாய்!
ஆன்றோராய் சான்றோராய் கல்வி பெற்றே
அடித்தட்டு மக்களையும் உயரச் செய்தாய்!
தோன்றின்நற் புகழோடு தோன்றி வந்தாய்!
தொண்டுசெய்து பழுத்தபழம் ஆகி நின்றாய்!
அலைவைத்த கடலைப்போல் இயங்கி வந்தாய்!
ஆயிரமா? அதற்கதிகம் பிறைகள் கண்டாய்!
வலைவைத்துப் பார்த்தார்கள், அறுத்தெ றிந்து
வலம்வந்தாய் நாடெங்கும்! கொண்டு வந்து,உன்
தலைவைக்க வேண்டும்என்ற நரிக்கூட் டத்தைத்
தரைமட்டம் செய்தாய்! நம் கலைஞ ருக்குச்
சிலைவைத்துப் பேரன்பைப் பொழிந்தாய்! என்றும்
சிதையாத புகழுக்கே புகழ்கொ டுத்தாய்!
தடியெடுத்து நீஅன்று நடந்த தால்தான்
தமிழர்க்கே அறிஞர்அண்ணா கிடைத்தார்! உன்றன்
குடியரசின் உலைக்கூடத் தகிப்பி லேதான்
“ குவளைப்பூ” போர்க்கருவி ஆன தென்பேன்!
திடலுக்குள் மட்டும்நீ இல்லை! கண்ணீர்த்
திவலைகளைத் துடைத்தெறிந்து சொல்வேன், எங்கள்
உடலுக்குள் உயிரணுக்க ளெல்லாம் உள்ளாய்!
உனைவிட்டுத் தமிழர்க்கு வரலா றேது?
அரியார்க்கும் அரியாராய் பிறந்து வந்தாய்!
அடுத்தடுத்துச் சாதனைகள் புரிந்து வந்தாய்!
வரலாற்றில் “ஈழவர்”தம் உரிமை வென்றாய்!
“வைக்கம்போர் நூற்றாண்டின்” புகழில் நின்றாய்!
பெரியார்க்கும் பெரியார்நீ! அதனா லன்றோ
பெண்ணுரிமை முன்னுரிமை காணச் செய்து
சரியான பாதைக்கே அழைத்து வந்தாய்!
சமத்துவம் சமதர்மம் தழைக்கச் செய்தாய்!
பட்டாலும் தொட்டாலும் தீட்டு! கண்ணில்
பார்த்தாலும் தீட்டென்றார்! அவரை யெல்லாம்
விட்டாயா? அதிரடியால் விரட்டி வைத்தாய்!
‘விடுதலை’யால், ‘குடியர’சால் விடியல் தந்தாய்!
அட்டையைப்போல் உறிஞ்சும்அந்தக் கூட்டம், இன்றோ
“அம்பேத்கர்” பெயர்கூட தீட்டென் கின்றார்!
எட்டிஉதைப் போம்அந்த ஆண வத்தை!
ஈரோட்டு நெருப்பில்அதைப் பொசுக்கி ப்போம்!
வியாபாரக் குடும்பத்தில் பிறந்தாய்! உன்னை
விலைபேச எவராலும் முடிய வில்லை!
நியாயத்தின் வடிவம்நீ, அதனால் உன்னை
நீதிமன்றப் பொய்வலைகள் நெருங்க வில்லை!
தியாகம்நீ செய்யவில்லை! தியாகம் உன்னைச்
செய்தது!நீ தரைவாழ்ந்த உலக வாழ்க்கை
மயானத்தின் முடிவல்ல! காலத் தாலும்
மடியாத சரித்திரத்தின் புதுத்தொ டக்கம்!
நீண்டநெடுந் தொலைநோக்கில் உனது கொள்கை
நீட்சிகண்டு “தளபதி”யின் ஆட்சி கண்டு
தாண்டிமிகக் குதிக்கிற து பகைவர் கூட்டம்!
தலைதூக்கி “மனுதர்மம்” போடும் ஆட்டம்!
மீண்டும்உன்றன் “கைத்தடிக்கு” வேலை வந்து
விட்டதையா! சனாதனத்தை விரட்டு தற்கே!
மூண்டெழுவோம் அய்யா,உன் நினைவி டத்தில்!
முறியடிப்போம் சதியை!எனச் சூளு ரைப்போம்!