மருத்துவமனையில் இருந்தபோதுகூட, நாணயத்தை, உறுதியைக் கடைப்பிடித்தவர்!
ஈ.வெ.கி.ச.இளங்கோவன், வரலாற்றில் இடம்பிடித்தவர் அல்ல; வரலாற்றை உருவாக்கியவர், தன்மானத்தின்மூலமாக!
கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத பிடிவாதக்காரர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், ஈரோட்டில் உள்ள ஈ.வெ.கி.ச.இளங்கோவன் இல்லத்திற்குச் சென்று, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரது வாழ்விணையர் வரலட்சுமி, மகன் சஞ்சய் சம்பத் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் (ஈரோடு, 25.12.2024).
சென்னை, டிச.26 தலைவர்களில் இரண்டு வகை உண்டு. வரலாற்றில் இடம்பெறக்கூடியவர்கள் ஒருவகை. இன்னொருவகை வரலாற்றை உரு வாக்கக் கூடியவர்கள். அந்த வகையில், எங்கள் அருமைச்செல்வம், இங்கே படமாக இருக்கக்கூடிய நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், வரலாற்றில் இடம்பிடித்தவர் அல்ல; வரலாற்றை உருவாக்கியவர், தன்மானத்தின்மூலமாக என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் படத்திறப்பு – நினைவேந்தல்
நேற்று (25.12.2024) மாலை கோபியில் உள்ள சிறீ முத்துமகால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
அனைவரது பேரன்பையும் பெற்றவர்!
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக எல்லோரும் இங்கே குறிப்பிட்டதைப்போல, ஒரு கொள்கை வீரர், சிறந்த சுயமரியாதை வீரர், தன்மானத் தலைவர் என்ற ஒரு தனித்துவ பெருமையை, பிறர் எவரும் பெற முடியாத ஒரு பெருமையை, எந்தத் தன்மானத்திற்காகத் தந்தை பெரியார் அவர்கள் ஒரு காலத்திலே காங்கிரசை விட்டு வெளியேறினார்களோ, காங்கிரசுக்குள்ளேயே அந்தத் தன்மானத் தலைவராக தன்னை ஆக்கிக்கொண்டு, மக்கள் உரிமைக்காகப் போராடிய எங்கள் அருமைச் செல்வம் – இதோ படமாகவும், நமக்கெல்லாம் பாடமாகவும், வரலாறாகவும் மாறிவிட்ட, இந்த சோகத்தை எப்படி மறப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கக் கூடிய கொள்கைக் குடும்பத்தினுடைய ஒரு தொண்டன் என்ற முறையில், அவருக்குத் திராவிடர் கழகத்தின் சார்பிலே மட்டுமல்ல, பகுத்தறிவாளர்கள் சார்பிலே மட்டுமல்ல, யாரெல்லாம் தன்மான உணர்வைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களெல்லாம் எந்த நாட்டில், எந்தப் பணியில் இருந்தாலும், இன்றைக்கு அவருடைய தொண்டறத்தை நினைத்து நினைத்து, ‘‘அய்யோ, நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டதே” என்று புழுங்கிக்கொண்டு, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், அனைவரது பேரன்பையும் பெற்ற ஒருவர்தான், நம்முடைய அருமைச் செல்வம், கொள்கைச் செல்வம், தன்மான வீரர், நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் ஆவார்கள்.
அனைவருடைய ஆறுதலையும் பெறவே வந்திருக்கின்றேன்!
நான் இங்கே வந்திருப்பது மற்றவர்களைப் போல இந்தக் குடும்பத்திற்கு ஆறுதல், தேறுதல் கூறுவதற்காக என்பதைவிட, அனைவருடைய ஆறுதலையும் பெறவே வந்திருக்கின்றேன். காரணம், இந்தக் குடும்பத்திற்கு மூலதலைவரான தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன் என்றென்றைக்கும் அவருடைய கொள்கையைப் பரப்பும் பணியாளன் என்கின்ற முறையில்.
மனித உரிமைப் பேணியவர்!
அவருடைய படத்திறப்பு நிகழ்ச்சிக்கு இங்கு வெள்ளம்போல் திரண்டிருக்கிறீர்கள். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, கொள்கைகளைத் தாண்டி, மனித நேயம், மனித உரிமைப் பேணியவர்
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் என்ற முறையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறீர்கள். குறுகிய காலத்தில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து, முதன்முறையாக ஒரு பொது நிகழ்ச்சியாக இந்தப் படத்திறப்பினை நடத்துகிறார்கள் – அதுவும் இவ்வளவு பெரிய அரங்கத்தில் நடத்துகிறார்கள் என்பது மிகவும் சிறப்பாகும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கின்ற அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, அரசியல் கட்சி களுக்கெல்லாம் அப்பாற்பட்ட சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய துயரங்கலந்த வணக்கம்.
‘‘பகுத்தறிவுவாதிகள் என்றைக்குமே உணர்ச்சிவயப்படக் கூடாது!’’ – தந்தை பெரியார்!
இந்தப் பகுதிக்கு நான் வருகின்றபொழுது, மாநாடு போன்று மக்களைச் சந்திக்கின்ற இத்தகையப் பெருந்திரள் மக்கள் மத்தியில், மகிழ்ச்சிகரமாக நாங்கள் உரையாற்றிய காலம் மாறி, இன்றைக்கு ஒரு கடமை – அந்தக் கடமையைச் செய்யும்பொழுது, அந்தக் கயிற்றை இழுத்து, அவர் படத்தினைத் திறக்கும்பொழுது, எந்த அளவிற்கு உணர்ச்சிமயமானோம் என்று சொல்ல முடியவில்லை.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள் சொல்வார், ‘‘பகுத்தறிவுவாதிகள் என்றைக்குமே உணர்ச்சிவயப்படக் கூடாது” என்று.
அதனை உணர்ந்த நிலையில்தான் இங்கே பெரும்பா லோர் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, இதே பகுதியில் நாங்கள் சுற்றுப்பயணத்திற்கு வந்தபொழுது, ‘‘நானும் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுகிறேன்” என்று நாங்கள் அழைப்பதற்கு முன்பே, சொன்னார் நம்முடைய ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள்.
அவர், ‘விடுதலை’யைத் தொடர்ந்து படிப்பவர். இறுதியாக நம்மிடம் அவர், சொன்னதை இங்கே சொல்லலாமா, வேண்டாமா? என்று நினைக்கின்றேன்.
நானும் போர் முனையில் ஒரு தளபதியாக நிற்பேன் என்றார்!
காரணம், எங்களுடைய இயக்கத்தில் முழுக்க முழுக்க அவருடைய ஈடுபாடு என்பது நாளுக்கு நாள் வளர்ந்தது. தாய்க்கழகத்தில், திராவிடர் கழகத்தில் – தந்தை பெரியாரோடு – அவருடைய உறவு என்பது, வெறும் தாத்தா – பெயரன் உறவு மட்டுமல்ல, ஒரு சமூகக் கடமையாற்ற வேண்டிய நேரத்தில், அதற்காக ஒரு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ‘‘இந்தப் போர் பொதுவான போர்; இது சமுதாயத்தை மீட்கக்கூடிய ஒரு போர்; நான் எந்த அமைப்பில் இருந்தாலும், அந்தப் போரில் நானும் ஒரு முனையில் தளபதியாக நிற்பேன்” என்று சொன்னார்.
இங்கே அவருடைய மகன் சஞ்சய் அவர்கள், எத்தகைய துன்பத்தோடு, துயரத்தோடு இருக்கிறார்களோ, அதேபோல, எங்களைப் போன்றவர்களும் சொல்ல முடியாத சோகத்தோடும், துயரத்தோடும் நிற்கிறோம்.
இழக்கக்கூடாதவரை நாம் இழந்திருக்கின்றோம்!
‘‘இயற்கையினுடைய புத்தி கோணல் புத்தி” என்று தந்தை பெரியார் ஒருமுறை அறிக்கையில் எழுதினார். அதுபோல், இழக்கக்கூடாதவரை நாம் இழந்திருக்கின்றோம்.
மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம் அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘நம்முடைய ஈ.வெ.கி.ச. இளங்கோவனின், அனுபவம் என்பது ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே வந்தது” என்றார்.
வயது எப்படி அவருக்குக் கூடிக்கொண்டே வந்ததோ, அதுபோல, அவருடைய அனுபவமும், ஒரு புதிய தலைமுறையை உருவாக்கவேண்டும் என்ற அந்த எண்ணமும், வேட்கையும், துடிப்பும், அவரை இளைஞராக மறுபடியும் மாற்றிக் காட்டியது.
தன்னுடைய நோயைப்பற்றியோ, தன் உடல் தொல்லையைப்பற்றிக்கூட அவர் கவலைப்படாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். மேடையில் இருக்கும்பொ ழுது, ஒரு பக்கத்தில் இருமிக் கொண்டே இருப்பார்; உடனே நான் சொல்வேன், ‘‘உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்; அதிகம் பேசாதீர்கள்” என்று.
உடனே என்னைப் பார்த்து, ‘‘நீங்களே இந்த வயதில் இந்த அளவிற்குச் சுற்றுப்பயணம் செய்யும்பொழுது, நான் என்னுடைய பணியை செய்யவேண்டாமா?” என்று கேட்பார்.
‘விடுதலை’யில் வெளிவருகின்ற அறிக்கைகளை உடனடியாகப் படிப்பவர்!
‘விடுதலை’யில் அறிக்கைகளை நான் எழுதும்பொ ழுது, அதைப் படித்துவிட்டு, உடனடியாக தொலைப்பேசி யில் என்னைத் தொடர்புகொண்டு, அதைப்பற்றி விவாதிப்பார். இதுபோன்று யாருமே சொன்னதில்லை என்று சொல்வார்.
எவ்வளவு பெரிய ஆபத்துகள் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றன. அதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்பார். ‘‘இனிமேல் என்னுடைய பணி என்பது மாற்றமடையும். எனக்கு அரசியலில் இருந்த ஈடுபாட்டைவிட, சமூகத் துறை யில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது. இப்போதுதான் பெரியார் கருத்தையே நான் உள்வாங்கிக் கொள்கிறேன். அதற்காகவே நான் நிறைய படிக்கிறேன். நிச்சயமாக நான் உங்களோடு இணைந்து, சமூகப் பணியாற்றுவதற்காகத்தான் நிறைய படிக்கிறேன். ஒவ்வொரு நாளும் பெரியாரின் கருத்துகளை உள்வாங்குகிறேன்.
நீங்களும், ‘திராவிட மாடல்’ ஆட்சியும் செய்கின்ற பணிகள் பிரமிக்கத்தக்கவை!
பெரியாருக்கு நாங்கள் எல்லாம் பெயரன்கள்தான். பெயரளவிற்குத்தான் நாங்கள் எல்லாம் பெயரன்கள். இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும், அவருடைய ஆட்சியும் செய்கின்ற பணிகள் எனக்கு பிரமிக்கத்தக்கதாக இருக்கின்றது. நீங்கள் இரண்டு பேரும் இன்றைக்கு இல்லாவிட்டால், தந்தை பெரியாருடைய கொள்கை, திராவிட இயக்கத்தினுடைய கொள்கை, யார் யாரெல்லாம் நம்முடைய உரிமைகளைப் பறித்தார்களோ, அவர்களும் இணைந்து இன்றைக்கு ஒரு புதிய உற்சாகத்தோடு களத்தில் இறங்குகின்ற நேரத்தில், அவர்களை எதிர்த்து நிற்கவேண்டிய உங்களோடு நானும் நிற்கவேண்டும்” என்று மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார்.
பெரியார் திடலுக்கு வந்து இதுபற்றி விவாதிக்காமல் இருக்கமாட்டார் நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.
அவருடைய பெயரப் பிள்ளைகளை அழைத்து வந்து, இந்தத் துறையில் இவர் வளர்ச்சி பெற்றிருக்கிறார் என்று மகிழ்ச்சியோடு என்னிடம் சொல்வார்.
இன்றைய காங்கிரஸ், பெரியார் விரும்பிய காங்கிரஸ்!
உயர்ஜாதிக்காரர்களின் ஆதிக்கம் நிறைந்த காங்கிரசாக அன்றைக்கு இருந்ததினால்தான், தந்தை பெரியார் அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரசை விட்டு வெளியேறினார்.
சமூகநீதிக்கு இடமில்லை என்று சொன்ன காரணத்தினால்தான் வெளியேறினார்.
ஆனால், இன்றைய காங்கிரஸ், பெரியார் விரும்பிய காங்கிரஸ், ராகுல் காந்தி அவர்களுடைய வழிகாட்டு தலால் நடக்கிறது. அதுபோலவே, அம்மையார் சோனியா காந்தியானாலும், மல்லிகார்ஜுன கார்கேவானாலும் இன்றைய காங்கிரஸ் சுயமரியாதைக் காங்கிரசாக இருக்கிறது. அதனால்தான், பல பேருக்குக் கோபம்!
அன்றைக்குக் காங்கிரசில் பெரியார் ஒருவர் தன்மா னத் தலைவராக இருந்தார். இன்றைக்குக் காங்கிரஸ் கட்சியே தன்மான இயக்கமாக மாறிவிடுமோ என்பதால், ஏதேதோ சொல்லி, அந்த இயக்கத்தை வளரவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
புதிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும்!
எங்கள் பார்வை அரசியல் பார்வை அல்ல; முழுக்க முழுக்க ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்கிற சமுதாயப் பார்வைதான்.
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே சொன்ன ஒரு தகவலைச் சொல்கிறேன்.
காங்கிரஸ் தலைவராக சீதாராம்கேசரி அவர்கள் இருந்தபொழுது, அவரை சந்திப்பதற்காக டில்லிக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சென்றிருந்தாராம். ‘‘இப்பொழுது, சந்திப்பதற்கு வாய்ப்பில்லை. நீங்கள் நாளைக்கோ, நாளை மறுநாளோ வரலாம்” என்று சொன்னார்கள்.
நம்முடைய இளங்கோவன் அவர்கள், ஒரு சிறிய தாளை எடுத்து ஒரு குறிப்பை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புகிறார்.
அந்தக் குறிப்பில், ‘‘தமிழ்நாட்டிலிருந்து உங்களை சந்திப்பதற்காக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் என்கிற நான் வந்திருக்கிறேன். நான், பெரியார் அவர்களின் பெயரன்” என்று எழுதப்பட்டிருந்தது.
அந்தக் குறிப்பைக் கொடுத்துவிட்டு, அவர் அங்கே இருந்து வந்துவிடுகிறார்.
பெரியாருக்கு எந்த அளவிற்கு மரியாதை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன்!
அந்தக் குறிப்பைப் பார்த்த சீதாராம் கேசரி அவர்கள், ‘‘அவரைக் கூப்பிடுங்கள், அவரைக் கூப்பிடுங்கள்” என்று சொல்லி, அதன் பிறகு, இவரை உள்ளே அழைத்துச் சென்றார்களாம்.
‘‘அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது; பெரியாருக்கு எந்த அளவிற்கு மரியாதை இருக்கிறது” என்றார் இளங்கோவன்.
அந்தக் காலம் வளர்ந்ததை, அவரே பார்த்தார். அந்தக் காலம் இன்னும் மேலும் வளரவேண்டும்; அதற்காக நாம் பணியாற்றவேண்டும், பாலமாக இருக்கவேண்டும் என்று நினைத்த நேரத்தில்தான், அவர் நம்மிடமிருந்து இயற்கையால் பறிக்கப்பட்டார்.
போர்க் களத்தில், ஒரு தளபதி, போர்ப் படைத் தளபதி மறைந்தால், எப்படி அந்தப் போர்ப் படைக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்படுமோ, அதுபோலத்தான் நம் சமுதாயத்திற்கு நட்டம்.
ஈடு செய்ய முடியாத இழப்பு, எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இழப்பு!
அவரது மறைவு என்பது தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் இழப்பல்ல; தனிப்பட்ட ஒரு கட்சியி னுடைய, இயக்கத்தினுடைய இழப்பு அல்ல. முழுக்க முழுக்க கொள்கை உணர்வு உள்ளவரின், பொது வாழ்க்கையினுடைய மகத்தான, ஈடு செய்ய முடியாத இழப்பு, எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இழப்பு என்ற அந்தச் சூழலை நாம் அனைவரும் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
சொன்ன சொல்லிலிருந்து அவர் பின்வாங்கியதே இல்லை!
மிகச் சரியாக சொல்லவேண்டுமானால், அவர் அரசியலில் எவ்வளவு பிடிவாதமாக, எந்த அளவிற்கு எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்தாலும், கம்பீரமாக நிமிர்ந்து நின்று எதிர்க்கின்ற அவர் ஒருபோதும் வருத்தம் தெரிவித்ததில்லையே. சொன்ன சொல்லிலிருந்து அவர் பின்வாங்கியதே இல்லை. ஏற்றுக் கொண்டு அதைச் சந்திப்பார்; ஒரு சிங்கம்போல கர்ஜிக்கக் கூடிய ஓர் உணர்வைக் காட்டுவார். அந்த உணர்வெல்லாம் ஒருமுகப்பட்டு இதோ படமாக இங்கே இருக்கிறார்.
கொள்கைப் பாதையிலே செல்வதற்குத்தான் பொதுவாழ்க்கை!
பொதுவாழ்க்கையா? இவற்றை மட்டும் சம்பாதி யுங்கள் என்று இந்தப் படம் கூறிக் கொண்டிருக்கின்றது. கொள்கைப் பாதையிலே செல்வதற்குத்தான் பொது வாழ்க்கை என்பதற்கு இந்தப் படம் பாடமாக இருக்கிறது.
எனவே, இந்தப் படத்திறப்பு நிகழ்வு என்பதிருக்கிறதே, அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்துவதற்காக மட்டுமல்ல; பொதுவாழ்க்கையில் இருக்கின்ற நாமெல்லாம், கொள்கை உணர்வு படைத்தவர்கள் எல்லாம் இதைப் படமாகப் பார்க்கக் கூடாது, பாடமாகப் பார்க்கவேண்டும்.
கொள்கையாளர்களுடைய உணர்விலே உறைந்திருக்கிறார்கள்
இப்படிப்பட்ட தலைவர்கள் மறைவதில்லை; நம்முடைய நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்கள்; கொள்கையாளர்களுடைய உணர்விலே உறைந்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அவருக்கு நாம் செலுத்துகின்ற மரியாதை என்பது வெறும் வார்த்தைகளாலோ, வெறும் புகழ் மாலையை சூட்டுவதாலோ நிறைவடையாது.
எந்தக் கொள்கைக்காக ஒரு தன்மானத் தலைவராக அவர் திகழ்ந்தாரோ, எதற்காகப் பாராட்டப்படுகிறாரோ, அந்தத் தன்மான உணர்வை ஒவ்வொருவரும் பின்பற்றுங்கள்.
தன்மானமா? வருமானமா? பெறுமானமா? என்று பலர் கேலி செய்த நேரத்தில், தன்மானமும், இனமான மும்தான் எனக்கு மிகவும் முக்கியம் என்று காட்டிய ஒரு தலைவர் அவர். தன்னுடைய வாழ்க்கை முடிந்தாலும், தனக்குப் பின் அவர் எதை விட்டுவிட்டுச் சென்றார் என்றால், ‘‘இதோ இந்தக் கொள்கையைப் பின்பற்றினால், உறுதியாக மக்கள் மத்தியில் அவர்கள் என்றைக்கும் நினைக்கப்படுவார்கள்” என்பதைத்தான்.
வரலாற்றில் இடம்பிடித்தவர் அல்ல; வரலாற்றை உருவாக்கியவர்!
எனவே, தலைவர்களில் இரண்டு வகை உண்டு. வரலாற்றில் இடம்பெறக்கூடியவர்கள் ஒருவகை.
இன்னொருவகை – வரலாற்றை உருவாக்கக் கூடியவர்கள்.
அந்த வகையில், எங்கள் அருமைச்செல்வம், இங்கே படமாக இருக்கக்கூடிய நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், வரலாற்றில் இடம்பிடித்தவர் அல்ல; வரலாற்றை உருவாக்கி யவர், தன்மானத்தின்மூலமாக.
அவர் காட்டிய பாதையை, அவருடைய உறுதியான கொள்கைத் தெளிவு ஆகியவற்றை நாம் பின்பற்றி, அவற்றை இளைய தலை முறையினருக்கு, எந்தக் கட்சியினராக இருந்தா லும், இங்கே அத்துணைக் கட்சியினரும் வந்தி ருக்கிறார்கள் – அதற்கு நாங்கள், அந்தக் கொள்கைக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற முறையில், நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.
இங்கே அய்யா சண்முகம் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்; அந்தக் கருத்தை நாங்கள் சொல்வதைவிட, அவர் சொல்வதுதான் மிகச் சிறப்பாகும்.
பாசமும், கொள்கை பற்றும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது!
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்துகின்ற ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்மீது வைத்திருந்த பாசமும், கொள்கை பற்றும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது என்று சொன்னார்கள்.
நான்கூட ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களிடம், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நேரத்தில், ‘‘உடல்நிலையில் பிரச்சினை இருக்கிறதே, நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக அலையவேண்டுமா?” என்றேன்.
பெரியாரின் பெருங்குடும்பம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது!
‘‘இடைத்தேர்தலில் நிற்பதற்கு எனக்கு ஈடுபாடு ஆரம்பத்தில் இல்லை. நானே நினைக்கவில்லை. ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து, என்னைக் கேட்காமலேயே, உரிமை எடுத்துக்கொண்டு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்னை நிற்கச் சொன்னார் என்றால், பெரியாரின் பெருங்குடும்பம் என்பது இருக்கிறதே, அது அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும். அதனால்தான் நான் அவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்டேன்” என்றார்.
அதிகாரத்திற்குக் கட்டுப்படமாட்டார்; மிரட்டலைக் கண்டு அஞ்சமாட்டார்!
எப்பொழுதுமே அவருடைய சுபாவம் என்பது, அதிகாரத்திற்குக் கட்டுப்படமாட்டார்; மிரட்டலைக் கண்டு அஞ்சமாட்டார். இங்கே ஒரு நண்பர்கூட சொன்னார், ‘‘அஞ்சாநெஞ்சன்” என்று.
அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி பரம்பரையில், சுயமரியாதை இயக்கத்தில் வந்தவர்கள் மிரட்டினால் பணியமாட்டார்கள். அன்பிற்கு எப்பொழுதும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.
அதுவும்கூட இந்தப் படத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
எனவே, அவர் மறையவில்லை; வாழ்கிறார்.
கொள்கைவாதிகள் ஒவ்வொருவருக்கும் ஏற்படு கின்ற சோதனையால், அவர்களுக்கு வேதனை ஏற்பட்டாலும், கொள்கையை விடாமல், அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்குத் தயாராக இருப்பார்கள்.
கடுமையான விலையைக் கொடுக்கவேண்டி இருக்கும்!
தந்தை பெரியார் சொல்வார், ‘‘நல்ல கொள்கை என்று சொன்னால், அதில் வெற்றியை சாதாரணமாகப் பெற முடியாது. அதற்காகக் கடுமையான விலையைக் கொடுக்கவேண்டி இருக்கும்” என்று.
அந்தக் கடுமையான விலையைக் கொடுத்து வெற்றியைப் பெறுவதற்காக தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்தவர்தான் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நம்முடைய அருமைச் செல்வம் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.
ஆகவே, இந்தப் படம், நமக்குப் பாடம் – அதைப் பின்பற்றுவோம்.
பொதுவாழ்வினுடைய தூய்மையும், சுயமரியாதை இயக்கத்தினுடைய தேவையும் மிக முக்கியம்.
திராவிடர் கழகத் தலைமைக் கழக அமைப்பாளர் சண்முகம் அவர்கள் ஒரு செய்தியை சொன்னார்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு இந்த ஆண்டாகும். அதற்காக ஈரோட்டில் சிறப்பான அளவிற்கு ஒரு மாநாட்டினை நடத்தவேண்டும் என்று ‘விடுதலை’யில் செய்தி போட்டிருந்தோம்.
ஈரோடு மாநாட்டிற்காக இளங்கோவன் அவர்களின் அறிவிப்பு!
அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு நம்முடைய இளங்கோவன் அவர்கள், கழக அமைப்பாளரான சண்முகத்தை அழைத்து, ‘‘ஈரோட்டில் மாநாடு நடத்தவேண்டும் என்ற செய்தியை ‘விடுதலை’யில் பார்த்தேன். அதற்காக என்னுடைய நன்கொடையாக ரூ.50 ஆயிரம் கொடுக்கிறேன்” என்று, கேட்காமலேயே அவரை அழைத்துப் பேசி, ‘‘இப்பொழுது ரூ.25 ஆயிரம் தருகிறேன்; பிறகு ரூ.25 ஆயிரம் தருகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.
இது ஒரு சிறிய நிகழ்வாக இருக்கலாம். ஆனால், அதில் இருக்கின்ற கருத்து மிகவும் முக்கியமானதாகும்.
ஈரோடு சண்முகம் அவர்களும், அவர் கொடுத்த ரூ.25 ஆயிரத்தை வாங்கிக் கொண்டார். அதற்குப் பிறகு, நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்தபொழுதுகூட, நாணயத்தை, உறுதியைக் கடைப்பிடித்திருக்கிறார்
அந்த நேரத்தில்கூட அவர், ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு ஈரோட்டில் நடக்கவிருக்கிறது. அதற்காக நான் ரூ.50 ஆயிரம் கொடுப்பதாகச் சொன்னேன். ரூ.25 ஆயிரம் ரூபாயை ஏற்கெனவே கொடுத்துவிட்டேன். மீதம் ரூ.25 ஆயிரத்தை உடனடியாக அவரிடம் கொடுங்கள்” என்று உடல்நிலை சரியில்லாத நேரத்திலும், மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறபொழுதுகூட, நாணயத்தை, உறுதியைக் கடைப்பிடித்திருக்கிறார்.
இது ஒரு சிறிய செய்தியாக இருக்கலாம். ஆனால், அதனுடைய தத்துவம் என்ன தெரியுமா?
சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர்கள்தான் தன்மானத் தலைவர்கள். அதற்கு அடையாளமாக இருக்கக் கூடியவர்தான் நம்முடைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.
தன்மானம் வாழ்க – அவருடைய இனமானம் ஓங்குக!
எனவே, அவருடைய நினைவைப் போற்றுகிறோம் என்றால், தன்மானத்தைப் பரவச் செய்கிறோம் என்பதுதான் அதனுடைய நிலை.
அந்தத் தன்மானம் வாழ்க!
அவருடைய இனமானம் ஓங்குக!
நாமெல்லாம் பாடம் பெறுக!
துயரத்திலிருந்து நீங்குக!
பணிகள் தொடரவேண்டும்; கடமைகளையாற்ற வேண்டும். அது பதவியை நோக்கி அல்ல; கொள்கையை நோக்கி, லட்சியத்தை நோக்கி!
தடைகள் ஆயிரம் வந்தாலும், அந்தத் தடைகளை தளங்காக்கிக் கொண்டு செல்வோம்!
தடைகள் ஆயிரம் வந்தாலும், அந்தத் தடைகளை தளங்காக்கிக் கொண்டு செல்வோம் என்பதற்கு இந்தப் படம் என்றைக்கும் நாமக்கெல்லாம் பாடம் என்பதை மீண்டும் வலியுறுத்தி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க இளங்கோவன் அவர்களுடைய பெருமை!
வளர்க அவருடைய பாடங்கள்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.