நான் எத்தனையோ நினைவுப் பரிசுகளைப் பெற்றிருக்கிறேன்; எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தக் கைத்தடிக்கு நிகரான நினைவுப் பரிசு வேறு எதுவும் இல்லை!
‘திராவிட மாடலைக்’ கேலி செய்பவர்களுக்கு இந்தக் கைத்தடி ஒன்று போதும்!
தந்தை பெரியாரின் சிந்தனைகளை – வாழ்க்கை வரலாற்றை நாம் உள்வாங்கி, இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்வோம்!
சென்னை, டிச.24 எனக்கு எத்தனையோ நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டிருந்தாலும், இப்பொழுது நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தந்தை பெரியாரின் கைத்தடியை நினைவூட்டும் வகையில் வழங்கப்பட்ட இந்தக் கைத்தடிக்கு இணையானது வேறு ஒன்றும் இல்லை; இதைப் பெற்றபோது என்னையே நான் மறந்தேன்; தந்தை பெரியார் சிந்தனைகளை, வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல அய்யா நினைவு நாளில் உறுதி ஏற்போம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.12.2024) தந்தை பெரியார் அவர்களின் 51 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, பெரியார் திடலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களே, அமைச்சர் பெருமக்கள்சே கர்பாபு அவர்களே, கயல்விழி செல்வராஜ் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழ கத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளு மன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்களே, மேயர் அவர்களே,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்களே, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, பெருங்கவிக்கோ அய்யா வா.மு.சேதுராமன் அவர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது; என்னையே நான் மறந்திருக்கிறேன்!
என்ன பேசுவது என்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் நம்முடைய அய்யா ஆசிரியர் அவர்கள் எனக்கு அளித்திருக்கக்கூடிய அந்தப் பரிசை வாங்குகின்றபோது என்னையே நான் மறந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை நாம் பெற்றிருக்கலாம், வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். போதும், எனக்கு இது போதும். ‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் கைத்தடி ஒன்றே போதும். தாய் வீட்டிற்கு வந்திருக்கிறேன். தாய் வீட்டிற்கு வருகிறபோதெல்லாம் நான் உணர்ச்சியை, எழுச்சியை தொடர்ந்து பெறுவதுண்டு. ஆகவே, அதை பெற்று நான் இன்றைக்கு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
நம்முடைய இனத்திற்காக அயராது உழைத்திருக்கக்கூடிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம்!
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை உணர்வு பெற்று மேலெழுந்து நிற்கவும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, பல்வேறு தியாகங்களைப் புரிந்து, நம்முடைய இனத்திற்காக அயராது உழைத்திருக்கக்கூடிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய மறைந்த இந்த நாளில், அவருடைய கருத்துகளை, அவருடைய எண்ணங்களை, அவரு டைய போராட்டங்களை, அவருடைய தியாகங்களை, அவருடைய வாழ்க்கை வரலாற்றை நம்முடைய இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல உறுதி எடுப்போம்! அதற்குத் துணை செய்யும் வகையில், “டிஜிட்டல் நூலகமாக, ஆய்வு மய்யமாக”
இன்றைக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது!
‘தந்தை பெரியார் அவர்கள் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னாரே! தந்தை பெரியாரின் தொண்டர்களான நாம் அந்தப் பயணத்தைத் தொடங்கி, இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறோம்!
அவர் வாழ்ந்த காலத்தில், அவர் பேசிய முற்போக்குக் கருத்துகளுக்காக, மானுட சமுதா யத்தின் விடுதலைக்கான கருத்துகளுக்காக பழைமை வாதிகளிடமும், பிற்போக்குவாதிகளிடமும் கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார்.
தந்தை பெரியாரின் தனித்தன்மை!
ஊருக்குள் வரக்கூடத் தடை; பேசத் தடை; கோயிலுக்குள் நுழைய தடை; எழுதத் தடை; பத்திரிகை நடத்தத் தடை; போராட்டம் நடத்தத் தடை. அத்தனைத் தடைகளையும் தகர்த்தவர் தந்தை பெரியார். இந்த மண்ணுலகில் வாழக்கூடிய அத்தனை பேரின் மனங்களிலும் நுழைந்திருக்கிறார் அவர்தான் தந்தை பெரியார் அவர்கள்! அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும், இன்றைக்கு அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், அவரைப் பற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறோம், அவருடைய வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவரை இன்றைக்கு நினைவுபடுத்தி, அந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுதான் தந்தை
பெரியாரின் தனித்தன்மை!
இந்த நூலகத்தை சிறப்புற உருவாக்கித் தந்தி ருக்கக்கூடிய ஆசிரியர் அவர்களுக்கும், தம்பி அன்புராஜ் அவர்களுக்கும் நான் இந்த நேரத்தில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்போதும் பயனுள்ள பணிகளை பார்த்து, பார்த்து செய்யக்கூடியவர் நம்முடைய ஆசிரியர்!
நினைத்துப் பார்க்கிறேன்… அய்யா வருகிறபோது சொன்னார்..
1974 ஆம் ஆண்டு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இதே திடலிற்கு வந்து, பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தை அன்றைக்குத் திறந்து வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு பெரியார் திடலில் எல்லா வகைகளிலும், பயன்படக்கூடிய வகையில், இங்கு உருவாக்கப்பட்டுள்ள பெரியார் டிஜிட்டல் நூலகத்தை அவருடைய மகனாக இருக்கக்கூடிய ஸ்டாலின், முதலமைச்சராக வந்து இன்றைக்கு இந்த ஆய்வு மய்யத்தை நான் தொடங்கி வைத்திருக்கிறேன். எப்போதும் பயனுள்ள பணிகளை பார்த்து, பார்த்து செய்யக்கூடியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள். எனவே, திராவிடர் கழகத் தோழர்களையும், இதற்கு உறுதுணையாக இருக்கின்ற உங்கள் அத்தனைப் பேரையும் இந்த நேரத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.
நம்முடைய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு எனது இனமான வணக்கத்தை இந்த நேரத்தில் செலுத்துகிறேன்.
வைக்கம் விழாவினை சிறப்பாக நடத்தினோம்!
ஆசிரியர் அய்யா குறிப்பிட்டுச் சொன்னார், அண்மை யில், கேரளா மாநிலத்தில் இருக்கக்கூடிய வைக்கம் போராட்டத்தை நினைவுபடுத்தி, வைக்கம் வீரராக வலம் வந்த தந்தை பெரியாருக்கு அங்குப் புதிய மாளிகையும், கம்பீரமான சிலையையும் திறந்தோம்; இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படக்கூடிய வகையில் ஒரு பெரிய நூலகமும், திறந்து வைக்கப்பட்டு வைக்கம் விழாவினை சிறப்பாக நடத்தினோம்.
இன்னும் என்னைப் பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும் அதற்காக நான் காத்திருக்கிறேன்!
அப்போது நான் உணர்ந்தது என்னவென்று கேட்டால், அய்யா ஆசிரியர் அவர்கள் அப்படியே மெய்மறந்து அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். வந்தது மட்டுமல்ல, என்னை மனதாரப் பாராட்டினார் – வாழ்த்தினார். இன்னும் என்னைப் பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும் அதற்காக நான் காத்திருக்கிறேன். காத்திருக்கிறேன் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் சொல்லி, அய்யா புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
இன்னும் பல்லாண்டு காலம் ஆசிரியர் அவர்கள் வாழ்ந்து, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு
இன்னும் நீங்கள் ஊக்கத்தைத் தந்திடவேண்டும்!
தந்தை பெரியாரின் கருத்துகளை இன்றைக்கு வரைக்கும் எல்லா மக்களிடம் கொண்டு சேர்த்து, என்றென்றும் பெரியார் வாழ்கிறார் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார் நம்முடைய பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர் அவர்கள்! பெரியார் தொடங்கிய இயக்கத்தை பெரியாரின் கொள்கைகளை இந்த திராவிடப் பேரியக்கத்தைக் காத்து வருபவர்தான் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள். இந்த 92 வயதிலும், அய்யா ஆசிரியர் அவர்கள் சுற்றி சுற்றி வரக்கூடிய இந்தப் பயணத்தை எல்லாம் பார்க்கின்றபோது, நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், ஆச்சரியப்படும் அளவிற்குச் சொன்னாலும், அதை தந்தை பெரியாரிடம் அவர் கற்றிருக்கக்கூடிய அந்த பாடத்தைத் தான் இன்றைக்கு அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் பல்லாண்டு காலம் நீங்கள் வாழ்ந்து, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இன்னும் நீங்கள் ஊக்கத்தைத் தந்திடவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, அய்யா பெரியாரின் தொண்டராக நான் உங்களிடத்தில் கேட்டுக் கொள்கிறேன். பெரியாரின் தொண்டராக நான் வாழ்த்துகிறேன்; வாழ்த்துகிறேன்; வாழ்த்துகிறேன்.
“பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார். இன்றைக்கு தந்தை பெரியாரை உலகமயமாக்கி உலகத்தின் பொதுச் சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம்.