தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் பெரியார் பகுத்தறிவு நூலகம் – ஆய்வு மய்யப் பொன் விழா!
புதிய எணினி நூலகத் திறப்பு விழா!!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பேருரை
சென்னை, டிச. 24- தந்தை பெரியார் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2024) காலை 10 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் பகுத்தறிவு நூலக ஆய்வு மய்யப் பொன்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் – ஆய்வு மய்யத்தைத் திறந்து வைத்துப் பேருரை நிகழ்த்தினார்.
பெரியார் பகுத்தறிவு நூலகம்
தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், கொள்கைகளையும், திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், ஆவணங்களையும் பாதுகாக்கின்ற கருவூலமாகத் திகழும் “பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம்” 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று பெரியார் திடலில் தொடங்கப்பட்டது.
தந்தை பெரியார் மறைவதற்கு முன்பாக அவர் தம் கடைசி பிறந்த நாளாக அமைந்துவிட்ட 95ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (1973) தனக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளை, அப்படியே அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி, பெரியார் நூலகம் அமைக்கும் பணியைத் தொடங்கிட ஆணையிட்டார். அவ்வாண்டு டிசம்பர் 24 அன்று தந்தை பெரியார் மறைவுற்றாலும், அதற்கடுத்த பிறந்த நாளுக்குள்ளாகவே பணிகள் நிறைவுற்று, நூலகம் அமைக்கப்பட்டது.
ஆய்வு மய்யத்தை…
பெரியார் திடலில் அமைக்கப்பட்ட “பெரியார் பகுத்தறிவு நூலகம் – ஆய்வு மய்யத்தை” அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் முன்னிலையில், முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார் (17.9.1974).
ஆவணங்களின் தொகுப்பு
கடந்த 50 ஆண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான ஆவணங்களையும், லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங் களையும் காலத்திற்கு ஏற்ப பாதுகாத்துப் பராமரித்து வரும் இந்நூலகத்திலிருந்து ஏராளமான ஆவணங்கள் தொகுப்பு களாகவும், புதிய புத்தகங்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.
திராவிட இயக்க வரலாற்றை…
தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலிருந்து பல நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்தித் திராவிட இயக்க வரலாற்றையும், தந்தை பெரியாரின் கருத்துகளையும் ஆய்வு செய்துள்ளார்கள். முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளனர்.
இந்நூலகத்திற்கு மூன்று விரிவாக்கத் தளங்களும் பின்னாளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலகம் என்பது நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும் அமைப்பு ஆகும்.
இந்நூலகத்தின் விரிவாக்கப்பகுதியை மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சராகவிருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகத் தலைவரின் பவள விழா அன்று 2.12.2007 திறந்து வைத்தார்.
பொன் விழா ஆண்டான…
இந்நூலகத்தின் பொன்விழா ஆண்டான இவ்வாண்டில் (1974-2024) புதிய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்பவும், இந்நூலகத்தின் பணிகளை அதிகரிக்கும் வகையிலும் “பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் (டிஜிட்டல்)” மற்றும் ஆய்வு மய்யம் புதிய தனி கட்டடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்க நூல்களை…
இதன்மூலம் எண்மப்படுத்தப்பட்டுள்ள (Digitalized) திராவிட இயக்க நூல்களை, ஆவணங்களை, தமிழில் வெளிவந்துள்ள மின் நூல்களைக் கணினிகளிலேயே படிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இது பழைய ஆவணங்களை எவ்விதச் சேதமும் இல்லாமல், ஆய்வாளர்கள் எளிதில் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
மின் நூலகங்களின்…
மேலும் தமிழில் இயங்கும் மின் நூலகங்களையும், ஆவணக் களஞ்சியங்களையும் இப்புதிய எணினி நூலகத்தின் பயன்பாட்டாளர்கள் இங்கிருந்தே அணுக முடியும். அதேபோல் உலகில் முதன்மையான மின் நூலகங்களின் புத்தகங்களையும், ஆவணங்களையும் இங்கிருந்து படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வாய்ப்புகள்
மேலும் புதிய வசதிகளும், தொழில்நுட்ப வாய்ப்புகளும் செய்யப்பட்டுள்ளன. மூன்று தளங்களில் இதுவரை செயல்படும் நூலகத்தின் மொத்தப் பரப்பளவு 4,450 சதுர அடியாகும். தற்போது கூடுதலாக தனிக் கட்டடத்தில் புதிய எணினி நூலகம் 2,674 சதுர அடியில் அமைந்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 7,124 சதுர அடியில் நூலகம் செயல்பட உள்ளது.
இந்நூலகத்தில், நகலெடுத்தல் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, மின்னாக்கப் பிரிவு, ஒளி-ஒலிப் பதிவுகள் பிரிவு ஆகியன ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. பல லட்சம் பக்கங்களில் திராவிட இயக்க இதழ்கள் எண்மப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழர் தலைவர் தலைமையில்…
இத்தனை சிறப்புக்குரிய பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தினைத் (Periyar Rationalist Digital Library & Research Centre) தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2024) காலை 10 மணியளவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
பெரியார் நினைவிடத்தில் மரியாதை
தொடர்ந்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோன்று அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தமிழர் தலைவர் தலைமை உரை
அதனைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விழா நினைவு பரிசாக பெரியாரின் கைத்தடி வழங்கி பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். எல்லோரும் எழுந்து நின்று பலத்த கர ஒலியை எழுப்பினர்.
முதலமைச்சர் பேருரை
தமிழ்நாடு முதலமைச்சர் ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தைத் திறந்து வைத்துப் பேருரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் விழாவுக்கு முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். விழா நிறைவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நன்றி கூறினார்.
முன்னதாக இவ்விழா தொடக்கத்தில் பெரியார் நினைவு நாளையொட்டி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்து ஒலி-ஒளி காட்சி ஒளிபரப்பப்பட்டது.
இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் ஆர்.பிரியா, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் மரியாதை
தந்தை பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் கழக மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, பெரியார் மருத்துவமனை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பு, திராவிட தொழிலாளரணி, பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடன் நிதி, புதுமை இலக்கிய தென்றல், பெரியார் பயிற்சி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தப்பட்டது.
அன்னை மணியம்மையார் சிலைக்கு…
முன்னதாக வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வுகளில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பு.எல்லப்பன், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் திராவிடர் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.