சென்னை,டிச.24- ‘அற்ப காரணங்கள் கூறி, மருத்துவ சிகிச்சைக்கான தொகையை கேட்கும் விண்ணப்பங்களை நிராகரிப்பது நியாயமற்றது’ என்று சுட்டிக்காட்டிய சென்னை நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு 3.29 லட்சம் ரூபாய் சிகிச்சை தொகையை, 9 சதவீத வட்டியுடன் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
சென்னை லிங்கி செட்டி தெருவைச் சேர்ந்த, கே.சி.மதுசூதனன் தாக்கல் செய்த மனு: பி.சி.மால்பானி என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எங்கள் நிறுவன ஊழியர்கள் அனைவரும், ‘ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு’ காப்பீடு நிறுவனத்தின், மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப் பட்டோம். காப்பீடு காலம், 2020 ஆகஸ்ட் 6 முதல், 2021 ஆகஸ்ட் 5 வரையாகும்.
கரோனாவால் பாதிப்பு
கரோனாவால் பாதிக்கப்பட்ட நான், 2020 நவம்பர் 5இல், கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். அங்கு, 13 நாட்கள் சிகிச்சை பெற்ற பின், வீடு திரும்பினேன். சிகிச்சைக்கான செலவு தொகையை வழங்கக்கோரி, உரிய மருத்துவ ஆவணங்களுடன் “ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு” நிறுவனத்திடம் விண்ணப்பித்தேன். எனினும், 2017இல் எனக்கு நடந்த இதய அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை தரும்படி அந்த காப்பீடு நிறுவனம் கேட்டது.
அதற்கு, கேரள மாநிலத்தில் 2018ல் ஏற்பட்ட வெள்ளத்தில், அனைத்து ஆவணங்களும் சேதம் அடைந்ததாக பதில் அளித்தேன். அந்த ஆவணங்களை வழங்கினால் தான், விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியும் என்று கூறி, சிகிச்சை தொகை கோரிய என் விண்ணப்பத்தை காப்பீடு நிறுவனம் நிராகரித்தது.எனவே, சிகிச்சை தொகை 3.29 லட்சம் ரூபாய், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 1 லட்சம், வழக்கு செலவாக, 50,000 ரூபாயை காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு.
நியாயமற்ற சேவைக் குறைபாடு
2017 சிகிச்சை ஆவணங்களையும் காப்பீடு நிறுவனம் கேட்டுள்ளது. அந்த ஆவணங்கள் வெள்ளத்தில் மூழ்கியதை, புகார்தாரர் விளக்கியும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இது, ஏற்புடையதல்ல; நியாயமற்றது. காப்பீடு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை சேவை குறைபாடு என்பதால், புகார்தாரருக்கு சிகிச்சை தொகையான 3.29 லட்சம் ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கு 10,000, வழக்கு செலவு 5,000 ரூபாயை, இரண்டு மாதங்களுக்குள் ஸ்டார் ஹெல்த் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.